அன்புத்தங்கை அறந்தாங்கி நிஷா மற்றும் அன்புத்தம்பி பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது: சீமான் வாழ்த்து!

86

வாழ்த்துச் செய்தி!

அண்மையில் பெய்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட உதவிகள் செய்த விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர்களான அன்புத்தங்கை அறந்தாங்கி நிஷா மற்றும் அன்புத்தம்பி பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது.

நான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னின்று செய்த உதவிகளுக்குப் பின்னால் நாம் தமிழர் கட்சி என்ற எங்களின் வலிமைமிக்க பேரமைப்பும், தாய்த்தமிழ் உறவுகளின் பேராதரவும் இருந்தது. கட்சிப் பிள்ளைகள் தங்களால் இயன்றளவு சேகரித்து வழங்கியப் பொருட்களைக் கொண்டு, ஒருங்கிணைந்து உதவிகள் செய்தோம். ஆனால், அதைவிடவும் தம்பி பாலா மற்றும் தங்கை அறந்தாங்கி நிஷா ஆகியோர் தாங்கள் சிறுக சிறுக உழைத்துச் சேர்த்தப் பணத்தினைக் கொண்டு, களத்தில் இறங்கி உதவிகள் செய்ததென்பது பன்மடங்கு பெரியது. இதுபோன்ற அறச்செயல்கள் தான் மானுடம் இன்னும் இந்த மண்ணில் உயிர்ப்போடு இருப்பதையே உணர்த்துகிறது. மழை வெள்ளத்தால் மண் ஈரமானதைவிடவும், மிகுந்த ஈரமான மனதினை உடைய தம்பி பாலா, தங்கை நிஷா போன்றவர்கள் உள்ளவரை எத்தனை இயற்கை பேரிடர்கள் வந்தாலும் நாம் உறுதியாக மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் அன்பையும், ஆதரவையும் பயன்படுத்தி தங்களை வளப்படுத்திக்கொண்ட பெரிய செல்வந்தர்கள், உள்நாட்டு முதலாளிகள், பெருவியாபாரிகள், முன்னணி திரை பிரபலங்கள் பலரும் சமூகத்தில் தங்கள் உயர்வுக்குக் காரணமான அம்மக்களுக்கு நிகழ்ந்த இத்தனை பெரிய துயரத்தினைக் கண்டு, உதவிட சிறிதும் மனம் இரங்காத நிலையில் தம்பி பாலா, தங்கை அறந்தாங்கி நிஷா போன்றோரின் தன்னலமற்ற பரந்த உள்ளம் மிகுந்த போற்றுதற்குரியது.

தம்பி பாலா, தங்கை நிஷா மட்டுமல்ல அவர்களைப் போலவே, நாடறிந்த முகங்களாக இல்லாத எத்தனையோ எளிய மனிதர்கள் எவ்வித விளம்பரங்களுமின்றி, இயன்ற உதவிகளைத் தங்கள் சொந்த பணத்திலும், தெரிந்தவர்கள் தந்த உதவிகள் மூலமாகப் பெற்றும் வடமாவட்டங்களிலும், தென்மாவட்டங்களிலும் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் பசியாற்றி, அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி பேருதவி புரிந்தனர். கண்ணுக்குத் தெரியாத அந்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எனது அன்பும், பாராட்டுகளும்..!

மனிதம் தழைக்க உதவிடும் தங்களின் அரும்பணிகள் மேன்மேலும் வளர்ந்து பலருக்கும் வழிகாட்டியாகத் திகழ நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

https://x.com/Seeman4TN/status/1744956385186742477?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபோக்குவரத்து ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை உடனடியாக நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், 2024!