பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு! – சீமான் வாழ்த்து

18

ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புத்தம்பி மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மனமகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறது. ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கமும், 2017ஆம் ஆண்டு வெள்ளிப்பதக்கமும் வென்ற தம்பி மாரியப்பன் தற்போது மீண்டும் தங்கப்பதக்கம் வென்றுள்ள சாதனையானது ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும், தமிழ் மண்ணிற்கும் அளவிலாப் பெருமையைச் சேர்த்திருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் பெரியவடகம்பட்டி என்ற சிற்றூரில் ஏழைப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்து, ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ எனும் வள்ளுவப்பெருமகனாரின் கூற்றுக்கிணங்க தனது கடின உழைப்பாலும், சீரிய முயற்சியாலும் இத்தகைய சாதனைகளை தம்பி மாரியப்பன் படைத்திருக்கிறார். பள்ளிப்பருவத்தின்போது பேருந்து மோதியதில் வலது காலில் நான்கு விரல்களை இழந்தவர், மனந்தளராது போராடி ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால், அவரது மனவுறுதியும், தன்னம்பிக்கையும் மிகுந்த பாராட்டுக்குரியது. தம்பி மாரியப்பனின் இச்சாதனைகள் உடல் குறைபாடுகள் ஒருபோதும் நமது லட்சியங்களுக்குத் தடையாக இருக்காது என்பதைத் தம்மைப்போல் மாற்றுத்திறன் உடைய அனைத்து குழந்தைகளுக்கும் உணர்த்தி, வருங்காலத்தில் அவர்களும் தத்தம் துறைகளில் சாதனைப் படைக்க மிகப்பெரும் உந்துசக்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இத்தருணத்தில் அவரது வெற்றிக்குத் துணைநின்ற பெற்றோருக்கும், ஆக்கமும் ஊக்கமும் தந்து சாதனையாளனாக வளர்த்தெடுத்த ஆசிரியப்பெருமக்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புத்தம்பி மாரியப்பன் தங்கவேலு அவர்கள் மேலும் பல பதக்கங்கள் வென்று, சாதனை புரிய என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்த அன்பும், வாழ்த்துகளும்!

https://x.com/Seeman4TN/status/1793180868296462572

முந்தைய செய்திஈழ விடுதலைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கத் தீர்மானம்: பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை 70 விழுக்காடு வரை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்