உற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்து என்னை நேசித்து நிற்கும் உங்கள் அன்பினை எண்ணி உள்ளம் நெகிழ்கிறேன்! – நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் வாழ்த்து

206

அன்பின் உறவுகளுக்கு!
வணக்கம்.

நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட நாள்தொட்டு, நம் மீது ஏவப்பட்டு வரும் கொடும் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளையும், பரப்பப்பட்டு வரும் இழிவான அவதூறுப்பரப்புரைகளையும் நன்றாக அறிவீர்கள்! அந்த வகையில், கடந்த 13 ஆண்டுகாலத்தில் மட்டும் சற்றேறக்குறைய 128க்கும் மேலான வழக்குகள் என் மீது போடப்பட்டிருக்கிறது. பலமுறை சிறைப்படுத்தப்பட்டுள்ளேன். இருமுறை தேசியப் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் பிணைக்கப்பட்டுள்ளேன். நம்மைக் கருத்தியலாகவும், அரசியலாகவும் எதிர்கொண்டு வீழ்த்த முடியாத ஆளும் ஆட்சியாளர்கள் அவதூறுகளால் வீழ்த்த எண்ணுகிறார்கள். பிரபாகரன் எனும் ஒப்பற்ற மாவீரனின் பிள்ளைகள் நாம், இதற்கெல்லாம் ஒருபோதும் அடிபணியப் போவதுமில்லை; அஞ்சப்போவதுமில்லை. நெஞ்சுரத்தோடு எதிர்கொள்வோம். இன்னும் பன்மடங்கு உத்வேகத்தோடு களத்தில் நிற்போம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு, என் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்கில் நேர்நிற்பதற்காக சென்னை, வளசரவாக்கத்திலுள்ள காவல் நிலையத்திற்கு இன்று காலை வந்தபோது எனக்கு உறுதுணையாக தமிழ்நாடு முழுவதுமிருந்தும் வந்த எனது உயிருக்கினிய என் தம்பி, தங்கைகளுக்கும், பாசத்திற்குரிய உறவுகளுக்கும் என் பேரன்பினைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடும் வெயிலிலும் துளியும் கலையாது கால்கடுக்க மணிக்கணக்காய் நின்று, கண்ணியமும், சனநாயகமும் காத்திட்ட உங்களது மாண்பு போற்றுதற்குரியது. உற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்து என்னை நேசித்து நிற்கும் உங்கள் அன்பினை எண்ணி உள்ளம் நெகிழ்கிறேன்.

பாதுகாப்பாய் பயணப்படுங்கள்! உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்க வருகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகளும், அன்பும்!

https://x.com/Seeman4TN/status/1703782464534278375?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! – சீமான் பெருமிதம்
அடுத்த செய்திநாம் சாதனைகளை தேடித்தான் ஓட வேண்டுமே ஒழிய, சாவைத் தேடி ஓடக்கூடாது! – இளந்தலைமுறையினருக்கு சீமான் அன்பு அறிவுரை