மணற்கொள்ளையர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் மகன் உரிமையியல் நீதிபதியாகத் தேர்வு! – சீமான் வாழ்த்து

115

மணற்கொள்ளையர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் மகன் உரிமையியல் நீதிபதியாகத் தேர்வு! – சீமான் வாழ்த்து

மணற் கடத்தலைத் தடுக்க முயன்றதற்காக, பட்டப்பகலில் அரசு அலுவலகத்திற்குள் புகுந்து மணற் கொள்ளையர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு – கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஐயா லூர்து பிரான்சிஸ் அவர்களது மகன் அன்புத்தம்பி மார்ஷல் ஏசுவடியான் அவர்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வென்று உரிமையியல் நீதிபதியாக தேர்வாகியுள்ள செய்தியறிந்து பெருமிதமும், பேருவுவகையும் அடைந்தேன்.

எளிய குடும்பத்தில் பிறந்து, நன்றாக கல்வி பயின்று, அரசுப்பணியில் சேர்ந்து, சமூகப் பொறுப்புணர்வோடும், உண்மையும் நேர்மையோடும் பணிபுரிந்து வந்த தனது தந்தை, சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டாலும், மணற்கொள்ளையர்கள் மற்றும் கொலை-கொள்ளையில் ஈடுபடும் சமூகவிரோதிகளின் புகலிடமாக ஆட்சியாளர்களே மாறிப்போனதன் விளைவாலும் அரசுப் பணியிடத்தில், பணியின்போதே வெட்டி வீழ்த்தப்பட்ட கொடுந்துயரத்தை நெஞ்சில் ஏந்தியபோதும் தன் இலக்கில் இருந்தும், உயிருக்குயிராக நேசித்த தந்தையின் இலட்சியக் கனவில் இருந்தும் சற்றும் விலகாமல், தன்னம்பிக்கையுடன் படித்து, அரசுத் தேர்வில் வெற்றிபெற்று, இன்று உரிமையியல் நீதிபதியாகியுள்ள அன்புத்தம்பி மார்ஷல் ஏசுவடியான் அவர்களின் நெஞ்சுரத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நம் எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட பதவியை அடைவதோ, ஒரு துறையில் அதன் உயரத்தை எட்டுவதோ மட்டுமே நமது இலக்காகி விட முடியாது, அந்தப் பதவியை, அந்த உயரத்தை அடைந்தபிறகு நாம் பிறந்த மண்ணுக்கும் மக்களுக்கும் உண்மையாகப் பணியாற்றுவதே சரியான இலக்காக இருக்கமுடியும் என்பதனை நினைவில் நிறுத்தி அன்புத்தம்பி மார்ஷல் ஏசுவடியான் அவர்கள் மக்களாட்சியின் இறுதி நம்பிக்கையாகவுள்ள நீதித்துறை மூலம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் குற்றங்களைக் களையவும், ஆட்சி, அதிகாரம், பணம், பதவி எவற்றுக்கும் அடிபணியாமல் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று அவர்களுக்குரிய நீதியைப் பெற்றுத் தரவும், நீதித்துறையில் பெரும் உயரங்களை எட்டவும் எனது பேரன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

https://x.com/Seeman4TN/status/1759227695580258533?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதுயர் பகிர்வு: ஆண்டார்கொட்டாரம் ஊராட்சியைச் சேர்ந்த ம.சங்குபால் மறைவு – சீமான் வேதனை
அடுத்த செய்திதிருவள்ளூர், அரக்கோணம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு உரிய ஊதிய உயர்வு கிடைக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்