மனிதம் போற்றும் ‘அயோத்தி’! ஒவ்வொருவரும் போற்றவேண்டிய படைப்பு! – படக்குழுவினருக்கு சீமான் பாராட்டு

147

மனிதம் போற்றும் ‘அயோத்தி’! ஒவ்வொருவரும் போற்றவேண்டிய படைப்பு! – படக்குழுவினருக்கு சீமான் பாராட்டு

என் தம்பி சசிகுமார் நடித்து, தம்பி மந்திரமூர்த்தி அவர்கள் இயக்கி, நீண்ட நாட்களாக எனக்கு மிகவும் நெருக்கமான உறவாக இருக்கக் கூடிய இரவிந்திரன் தயாரித்துள்ள ‘அயோத்தி’ திரைப்படத்தை நேற்று பார்த்து நெகிழ்ந்தேன். தமிழ்த் திரையுலகில் இது மிக முக்கியமான ஒரு படம், ஒரு பதிவு என்று தான் கூறவேண்டும்.

மனிதம் போற்றும் இக்கதையை எழுதிய ஐயா எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களுக்கும், அதை அழகாக திரைக்கதை அமைத்து கொண்டுவர முடிந்ததற்கு தம்பி மந்திரமூர்த்தி அவர்களுக்கும், இப்படி ஒரு கதையை துணிந்து எடுத்த இரவிந்திரன் அவர்களுக்கும் மிகுந்த பாராட்டுகள்.

தம்பி சசி தனது இயல்பான நடிப்பில் தான் ஏற்கும் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்றவர். இப்படத்தில் மிகச்சிறப்பாக அதை செய்திருக்கிறார். தம்பி சசிகுமாருக்கு இப்படம் ஒரு படிநிலைப் பாய்ச்சலாக இருக்கும். அவரின் திரையுலகப் பயணத்தை வேறு ஒருநிலைக்குக் கொண்டு செல்லும் என்று நான் நம்புகின்றேன். கதாநாயகியாக நடித்த பிரீத்தி அஸ்ரானி மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இது முதல் படம் போலவே இல்லை. கதாநாயகியின் தந்தையாக வரும் யஷ்பால் சர்மா அவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சசிகுமாரின் நண்பனாக வரும் தம்பி புகழ், தம்பி போஸ் வெங்கட், கல்லூரி தோழனாக வரும் வினோத், வின்னர் ராமச்சந்திரன் ஆகியோரின் கதாப்பாத்திரங்கள் கூட மிகுந்த உயிரோட்டமாகச் செதுக்கப்பட்டுள்ளது. அவர்களும் தங்கள் நடிப்பால் நெகிழச் செய்கிறார்கள். தன் உருக்கும் இசையால் எப்பொழுதும் ஆட்கொள்ளும் தம்பி இரகுநந்தன் இந்த படத்திலும் மிகச்சிறப்பாக இசையமைத்திருக்கிறார். காட்சியோடு இசை இணைந்து நம்மை ஒவ்வொரு காட்சியிலும் உருக்குகிறது.

தம்பி சாரதி எழுதிய கதையின் கருப்பாடலில், ‘ஒரு தெய்வம் பார்க்க வந்து, ஒரு தெய்வம் சென்றது’ என்ற வரியில், மனம் அன்பை விதைக்கும்போது மதம், தெய்வமெல்லாம் ஏது? என்று கேட்கின்றார். மதம், வேதம், தருமம் இதையெல்லாம் தாண்டியது ‘மனிதம்’ என்பதை தான் இந்த கதை சொல்கிறது. அதை மிகவும் அழுத்தமாக இப்படம் சொல்கிறது. இது பார்வையாளர்களுக்குள்ளும் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காரணம், ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது.உரையாடல்களும் அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது.

இப்படத்தை எல்லோரும் அவசியம் பார்த்துகொண்டாட வேண்டும். இப்படிப்பட்ட படங்களை மக்கள் பார்த்து கொண்டாடவில்லை என்றால், இது போன்ற படைப்புகள் திரைக்கு வருவது அரிதினும் அரிதாகிவிடும். அனைவரும் இப்படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள். மிகவும் அருமையான ஒரு உணர்வை இப்படம்  உங்களுக்குள் கடத்திவிடும்.

மீண்டும் என் தம்பிசசிக்கு, தம்பி மந்திர மூர்த்திக்கு, தயாரிப்பாளர் இரவிந்திரன் அவர்களுக்கு என் அன்பும், நிறைந்த வாழ்த்துகளும். இந்த படம் மாபெரும் வெற்றியடைய நான் உளமார வாழ்த்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபோராடும் விவசாயிகளை கைது செய்து, தமிழர்களின் நிலங்களை பறிக்கும் நெய்வேலி நிறுவனத்திற்குத் துணைபோவதை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திநெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து கடலூரில் சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்