தில்லையாடி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

79

தில்லையாடி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி கிராமத்தில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று (04-10-2023) நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி அங்கு பணியாற்றிய மாணிக்கம், மதன், மகேஷ் , ராகவன் ஆகிய நான்கு தம்பிகள் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் ஏற்படும் வெடிவிபத்தில் மனித உயிர்கள் மலிவாக உயிரிழப்பது வாடிக்கையான ஒரு செய்தியாக மாறிவிட்டது. இதில் விபத்து எனும் போர்வைக்குள் அரசும், அதிகாரிகளும் ஒளிந்து கொள்கிறார்கள். விதிமீறலும், பாதுகாப்பின்மையும்தான் பெரும்பாலும் இதுபோன்ற உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைகிறது என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது. இந்த பட்டாசு ஆலை விபத்துகள் இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாகத் தொடர்வதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும். உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும், அடிப்படை விதிகளும் காற்றில் பறக்கவிடப்படுவதும், அதனை அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு கையாளுவதும், பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் நடந்தேறும் இவ்விதக் கோர விபத்துகளின் வீரியம் தெரிந்தும் கண்டும் காணாதிருக்கும் அரசின் மெத்தனமும்தான் இத்தனை உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இனியாவது விழிப்புற்று, உடனடியாக பட்டாசு மற்றும் நாட்டு வெடிகள் தயாரிக்கும் ஆலைகளிலும், சேமிப்பு கிடங்குகளிலும், விற்பனை கடைகளிலும் அரசு முறையான ஆய்வினை மேற்கொண்டு பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே, தில்லையாடி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் துயர்துடைப்பு நிதியாக தலா 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டுமென்றும், படுகாயமடைந்தவர்களுக்கு உயரிய மருத்துவம் அளித்து விரைந்து நலம்பெறச்செய்திட வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்திகிராமசபைக் கூட்டத்தில் விவசாயியை ஊராட்சிமன்றச் செயலாளர் காலால் எட்டி உதைத்த நிகழ்வு மக்களாட்சி நடைமுறையையே கேலிக் கூத்தாக்கியுள்ளது! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திசேலம் மாவட்ட வீரத்தமிழன் முன்னணி வள்ளலார் பிறந்த நாள் நிகழ்வு