பைந்தமிழ் பாவலர் ஐயா தமிழொளி ஏகாம்பரம் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்

266

பைந்தமிழ் பாவலர் ஐயா தமிழொளி ஏகாம்பரம் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்

நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையப்பொறுப்பாளரும், சமகாலத்தில் வாழ்ந்த மாபெரும் தமிழறிஞருமான ஐயா தமிழொளி ஏகாம்பரம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அத்துயரில் பங்கெடுக்கிறேன்.

வங்கி மேலாளராகத் தம் வாழ்வை தொடங்கியபோதிலும், தமது தணியாத தமிழ்வேட்கையினாலும், தாய்த்தமிழ் மீது கொண்ட அளவு கடந்த பற்றினாலும் அயராத முயற்சியெடுத்து அதீத உழைப்பின் விளைவாக தன்னைத்தானே தமிழறிஞராக வார்த்துக்கொண்டார். எத்துறையில் பணி செய்தாலும் இனமானக்கடமையாற்றி, தமிழுக்குத் தொண்டு செய்வதே தனது அருந்தவப்பயனென வாழ்ந்து காட்டினார்.

நாம் தமிழர் கட்சியின் அரசியல் வரவு குறித்து, ‘எழுவாய் தமிழா’ என்ற புத்தகம் எழுதி ஊக்கப்படுத்தினார். நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையத்திலும், ஆட்சி மொழிப்பாசறையிலும் பொறுப்பேற்று அவராற்றிய பணிகளென்பது அளப்பெரியது; போற்றுதலுக்குரியது. இனத்தின் நலன் குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்துமே எப்போதும் சிந்தித்து, இயங்கிய பைந்தமிழ் பாவலர் ஐயா தமிழொளி ஏகாம்பரம் அவர்களின் மறைவு என்பது நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்ல தமிழ் அறிவுலகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பென்றால் மிகையல்ல.

ஐயாவுக்கு எனது புகழ் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம்  தமிழர் கட்சி

முந்தைய செய்திபூம்புகார் தொகுதி – பனை விதை நடு விழா
அடுத்த செய்திவேளச்சேரி – உறுப்பினர் சேர்க்கை முகாம்