இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரள ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம்! – சீமான் எச்சரிக்கை

323

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரள ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம்! – சீமான் எச்சரிக்கை

இசுலாமிய மக்களை இழிவுப்படுத்தி, இசுலாமியர் என்றாலே பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் விதமாக ‘கேரள ஸ்டோரி’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. உளவுத்துறை எச்சரிக்கைக்கு பிறகும் ‘கேரள ஸ்டோரி’ திரைப்படத்தைத் தடை செய்யாமல், திமுக அரசு அனுமதித்திருப்பது வெட்ககேடானது.

இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு கடந்த 9 ஆண்டுகளில் இசுலாமியர்களையும், இசுலாமிய மார்க்கத்தையும் இழிவுப்படுத்தும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவருவது எதேச்சையானதாக கருத முடியவில்லை. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் இந்துத்துவவாதிகளின் சூழ்ச்சியாகவே தோன்றுகிறது.

‘காஷ்மீர் பைல்ஸ்’, ‘புர்கா’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘கேரள ஸ்டோரி’ திரைப்படமும் குறிப்பிட்ட ஒரு மதத்தினரையும், அவர்களின் வழிபாட்டு முறையினையும் இழிவுப்படுத்துவது என்பது எவ்வகையிலும் ஏற்க முடியாத கொடுமையாகும்.

உலகம் முழுவதும் அவரவருக்கென்று ஒரு மதக் கோட்பாடு இருக்கிறது. ஒரு நாட்டிற்குள்ளேயே பல வழிபாட்டு முறைகள் உள்ளன. அவை அனைத்தையும் நாம் ஏற்கின்றோம், மதிக்கின்றோம். மதம், வழிபாடு, உணவு, உடை போன்றவை ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமைகளாகும். அதில் தலையிடவோ, இழிவுப்படுத்தவோ அரசு உட்பட எவருக்கும் உரிமையில்லை. ‘உன் மதம் சிறந்தது வழிபடு; என் மதமும் சிறந்தது வழி விடு’ என்பது தான் நாம் ஏற்க வேண்டிய மாந்தநேய கோட்பாடு. மாறாக இஸ்லாமியர்களை, கிறித்தவர்களை குறைசொல்லி வெறுப்பு நஞ்சினை விதைப்பதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

இந்த அளவிற்கு மதவெறுப்பையும், மனித வெறுப்பையும் கடைபிடிக்கும் இந்துத்துவா அமைப்பினர், கிறித்துவ, இசுலாமிய நாடுகளோடு தொழில், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட உறவுகளைத் துண்டிக்க வேண்டுமென்று இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்துவார்களா? உலகம் முழுவதும் சுற்றிவந்து ஒவ்வொரு கிறித்துவ, இசுலாமிய நாடாக ஓடோடிச் சென்று நட்பு பாராட்டும் நாட்டின் பிரதமர் மோடி அவர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் துணிச்சல் உண்டா?
மோடி அரசு இசுலாமிய நாடுகளுக்கு மாட்டுக்கறியை ஏற்றமதிசெய்து, எரிபொருளை இறக்குமதி செய்வதை எதிர்த்து இத்தகைய மதவெறியர்கள் என்றைக்காவது போராட்டம் நடத்தியதுண்டா?

இசுலாமிய – கிறித்துவ நாடுகளுடன் வணிகம், தொழில், இராணுவம் என்று அனைத்து ஒப்பந்தங்களும் செய்துகொண்டு, பல லட்சம் கோடி கடன்களைப் பெற்றுக்கொண்டு, இங்கு வாழும் இசுலாமிய, கிறிஸ்தவ மக்களை இழிவுப்படுத்துவது வாக்கு வங்கி அரசியலன்றி வேறில்லை.

இந்திய ஒன்றியம் முழுவதும் மதவாதிகள் அதிகாரத்தில் கோலொச்சும் நெருக்கடி மிகுந்த சமகாலத்தில் ‘கேரளா ஸ்டோரி’ போன்ற படங்கள் தேவையற்றதாகும். படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில்
பெண்களின் பாதுகாப்பிற்கு பற்பல முற்போக்கு கருத்துக்கள் கூறப்பட்டுள்ள ‘ஷரியத்’ சட்டத்தையும், இசுலாமிய மார்க்கத்தையும் இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் என்று உளவுத்துறை எச்சரித்த பிறகும் திமுக அரசு ‘கேரள ஸ்டோரி’ திரைப்படத்தை காவல்துறை பாதுகாப்புடன் வெளியிட அனுமதித்திருப்பது தமிழ்நாட்டை உண்மையிலேயே ஆள்வது திமுகவா? பாஜகவா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

இத்தகைய திரைப்படங்கள் இசுலாமியர்-இந்துக்கள் இடையே புதிய பிரச்சினையை உருவாக்குமே அன்றி, யாதொரு தீர்வையும் தரப்போவதில்லை. கிறத்துவ மத கோட்பாட்டை இழிவுப்படுத்திய டாவின்சி கோட் திரைப்படத்தை ஐயா கருணாநிதி அவர்களும், இசுலாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருந்த விசுவரூபம் திரைப்படத்தை அம்மையார் ஜெயலலிதா அவர்களும் தமிழ்நாட்டில் திரையிட தடைவிதித்த வரலாற்றை தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழ்நாடு அரசு ‘கேரள ஸ்டோரி’ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதையும் மீறி இத்திரைப்படத்தை தமிழ்நாடு அரசு திரையிட அனுமதித்தால், தமிழ்நாட்டில் திரைப்படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கையும் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு திரைப்படத்தை தடுத்து நிறுத்துவோம் என்றும் எச்சரிக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திமணிப்பூர் மாநில கலவரத்தில் சிக்கியுள்ள தமிழர்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாக மீட்புக்குழுவினை அனுப்ப வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகப்பியறை பேரூராட்சியின் தீர்மானத்தையும் மீறி, கருங்கல் மலை கனிமவளக்கொள்ளைக்குத் துணைபோவதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்