கிராமசபைக் கூட்டத்தில் விவசாயியை ஊராட்சிமன்றச் செயலாளர் காலால் எட்டி உதைத்த நிகழ்வு மக்களாட்சி நடைமுறையையே கேலிக் கூத்தாக்கியுள்ளது! – சீமான் கண்டனம்

145

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கங்காகுளம் கிராமத்தில் அக்.,2 அன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், வேப்பங்குளம் விவசாயி அம்மையப்பர் அவர்களை ஊராட்சிமன்றச் செயலாளர் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் முன்னிலையிலேயே நடைபெற்றுள்ள இக்கொடூர தாக்குதல் மக்களாட்சி நடைமுறையையே கேலிக் கூத்தாக்கியுள்ளது.

இத்தாக்குதலில் ஈடுபட்ட ஊராட்சிமன்றச் செயலாளர் தங்கபாண்டியன் கடந்த 25 ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணியாற்றி வருவதுடன், பல்வேறு ஊழல் முறைகேடுகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் கூறி வரும் நிலையில் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு இதுவரை எடுக்காதது ஏன்? .கேள்வி கேட்பதற்காகத்தானே கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது? கேள்வி கேட்டவரைத் தாக்குவதென்பது என்ன மாதிரியான சனநாயக நடைமுறை?

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிராமசபைக் கூட்டங்கள் பலமுறை ஒத்திவைக்கப்படுவதும், கேள்வி கேட்பவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல் தொடுப்பதும் தொடர் கதையாகிவிட்டது. சாதாரண ஊராட்சிமன்றச் செயலாளர் முதல் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் வரை தங்களின் அதிகார கொடுங்கரங்களால் அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தி, மிரட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால் திமுக ஆட்சியில் எந்த அளவிற்கு அதிகார அத்துமீறல்கள் உச்சத்தில் உள்ளது என்பதற்கு இந்நிகழ்வுகளே தக்கச்சான்றாகும். இதுதான் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கச் செய்வதற்கான திமுகவின் திராவிட மாடலா? விவசாயி அம்மையப்பரை தாக்கிய குற்றவாளி தங்கபாண்டியனை இதுவரை கைது செய்யாதது ஏன்? அல்லது வேங்கை வயல் குற்றவாளிகளைப் போல இதிலும் கடைசிவரை கைது செய்யாமலே மக்களை ஏமாற்றப் போகிறீர்களா? செய்த குற்றங்களுக்கு தற்காலிக பணியிடை நீக்கம் செய்வது மட்டுமே தீர்வாகிவிடுமா?

ஆகவே, இனியும் தாமதிக்காமல் விவசாயி அம்மையப்பர் அவர்களை அவமதித்து, கடுமையாக தாக்கிய ஊராட்சிமன்றச் செயலாளர் தங்கபாண்டியனை உடனடியாக கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன். மேலும், தாக்குதலில் காயமுற்று சிகிச்சை பெற்று வரும் விவசாயி அம்மையப்பருக்கு உரிய சிகிச்சையும், இழப்பீடும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1709440648326058110?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅன்புமகள் சந்தியா பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளது சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதில்லையாடி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்