மருத்துவர் ஐயா சபாரட்ணம் சிவகுமாரன் அவர்களின் புகழ் ஈழத்தாயக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.! – சீமான் புகழாரம்

87

தமிழீழத் தாயகத்தின் தலைசிறந்த மருத்துவர், ஐயா சபாரட்ணம் சிவகுமாரன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

நமது அண்ணன் ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் இறுதிக் கணங்களில் அவர் அருகிருந்து கவனித்துக்கொண்டதோடு, திலீபன் பாதம் தொட்டு வணங்கி, அம்மாவீரன் மரணித்த செய்தியை உலகிற்கு அறிவித்து அவ்வரலாற்றுப் பெருநிகழ்வுக்கு வாழும் சாட்சியாய் திகழ்ந்த பெருமைக்குரியவர் மருத்துவர் ஐயா சிவகுமாரன் அவர்கள்.

அன்பு, கனிவு, ஒழுக்கம், கடமை, உறுதிப்பாடு என்று சீரிய பல நற்குணங்களோடு மருத்துவர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கி தம் வாழ்வையே மக்கள் சேவைக்காக அர்ப்பணித்து வாழ்ந்த பெருமகன். அதன் காரணமாகவே மருத்துவம் பயிலும் மாணவர்களால் ‘கடவுள்’ என்று அன்போடு அழைக்கப்பட்ட ஐயா சிவகுமாரன், சின்னஞ்சிறு தமிழீழ தேசத்தில் தம்மைப்போலவே தன்னலமற்ற தலைசிறந்த பல மருத்துவர்களை உருவாக்கிய புகழுக்குரியவர்.

ஈழத்தாயக விடுதலை போர் சூழ்ந்த காலங்களில் மருத்துவம் பயின்ற பலரும் நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், தம் இறுதி மூச்சுவரை தாய் மண்ணை விட்டு அகலாது மக்கள் தொண்டாற்றிய மாமனிதர் ஐயா சிவகுமாரன் அவர்களின் புகழ் ஈழத்தாயக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

வயது முதிர்ந்து, உடல் தளர்வுற்ற நிலையிலும் உள்ளம் தளர்வுறாது கொரோனோ பேரிடர் மிகுந்த ஊரடங்கு காலத்திலும் இனம் அழியாது காக்கும் அறப்பணியாற்றிய அவரது நெடியதொரு மருத்துவப் பெருவாழ்வு உலகத்தமிழ் மக்களால் என்றென்றும் நன்றியுடன் நினைவுக்கூரப்படும்.

ஐயா சபாரட்ணம் சிவகுமாரன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மருத்துவத் துறையினருக்கும், உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தமிழீழத் தாயகத்தின் தன்னலமற்ற மாமனிதர் மருத்துவர் சபாரட்ணம் சிவகுமாரன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: பெண்களுக்கான தங்கும் விடுதி ஏற்பாடு  (மே18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி)
அடுத்த செய்திதிட்டக்குடி சட்டமன்ற தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்