பரந்தூரில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

146

புதிய வானூர்தி நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க சென்றதற்காக கைது செய்யப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே பல ஆயிரம் ஏக்கர் வேளாண் விளைநிலங்களையும், மக்கள் குடியிருப்புகளையும் அழித்தொழித்துவிட்டு அதன்மீது புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்துள்ள திமுக – பாஜக அரசுகளின் கூட்டுக் கயமைத்தனத்திற்கு எதிராகப் போராடிவரும் 12 கிராம மக்களை நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவளிக்கச் சென்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் அன்புச்சகோதரர் ஏ.கே.கரீம் மற்றும் அன்சாரி, ஜாஃபர் ஷரீப், நஸூருதீன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ள திமுக அரசின் எதேச்சதிகார செயல்பாடு வன்மையான கண்டனத்திற்குரியது.

சனநாயக நாட்டில் அறவழியில், அமைதியான முறையில் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதும், குரலற்ற எளிய மக்களின் போராட்டத்திற்குத் தோள்கொடுத்துத் துணைநிற்பதென்பதும் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அதற்குக்கூட அனுமதி மறுத்துக் கட்டாயப்படுத்தி திமுக அரசு கைது செய்வதென்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும். மக்களாட்சி, கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை குறித்தெல்லாம் மேடைக்கு மேடை பேசும் திமுகப் புகழ்பாடிகள் என்ன இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?

கைது செய்யப்பட்டுள்ள சகோதரர் ஏ.கே.கரீம் உள்ளிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி உறவுகள் அனைவரையும் திமுக அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, போராடும் 12 கிராம மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று விளைநிலங்களை அழித்துப் புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி