”குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு தாய்ப்பால் எவ்வளவு இன்றியமையாததோ, அதேயளவு அதன் மன
வளர்ச்சிக்கு தாய்மொழி இன்றியமையாதது. குழந்தை தன் முதல் பாடத்தைக் கற்பது தாயிடம் இருந்துதான். அப்படியிருக்க, குழந்தையின் உள வளர்ச்சிக்கு தாய்மொழி அன்றி, வேறொரு மொழியைத் திணிப்பது தாய்நாட்டுக்குச் செய்யும் பெரிய பாவம் என்றே நினைக்கிறேன்!” – அண்ணல் காந்தியடிகள் தாய்மொழி குறித்துத் தீர்க்கமாகச் சொன்னது இது! அகிம்சை என்கிற ஒன்றை மட்டுமே அவர் போதித்ததாக நினைத்து, புத்தி மறத்துக்கிடக்கும் எம்தமிழன் ஆண்டுதோறும் சனவரி 25-ம் தேதி மறக்காமல் அனுசரிக்கிறான், மொழிப்போர் தியாகிகள் தினமாக. இனத்தை மறந்தவன், மொழிக்காக விழுந்த பிணத்தை மறந்தவன், தியாகிகள் தினத்தையாவது மனதில் வைத்திருக்கிறானே என மனதை தேற்றிக்கொள்ளலாம்.
‘நாளை என் மொழி அழியுமானால், இன்றே நான் அழிவேன்!’ என உரக்கச்சொன்னான் அம்சத் என்கிற பற்றாளன். ஆனால், மொழியைக் காக்க தங்களையே அழித்துக்கொண்ட தாளமுத்து ராசேந்திரன், அரங்கநாதனை எல்லாம் அடையாளம் மறந்துவிட்டு, தினத்தை மட்டும் ஒப்புக்கு அனுசரிப்பது, நெஞ்சத்தை அறுத்துவிட்டு நினைவஞ்சலி செலுத்துவதுபோல் அல்லவா இருக்கிறது. தமிழ் மொழிக்காக தன் மூச்சு நிறுத்தியவர்களை நாம் எந்த அளவுக்கு இழிவுபடுத்துகிறோம் என்பதற்கு ஓர் உதா’ரணம்’ சொல்லவா தமிழர்களே… மொழிக்காக உயிர்விட்டவனின் மூச்சைக் கௌரவிக்க சென்னையில் ‘அரங்கநாதன் சுரங்கப்பாதை’ என்று பெயர் வைத்தோமே… அதை இன்றைக்கு எப்படி உச்சரிக்கிறார்கள் தெரியுமா? ‘அரங்கநாதன் சப்-வே’ என்று… தமிழுக்காக உயிர்விட்டவனை ஆங்கில வார்த்தைகளால் அடையாளப்படுத்தும் ஈனத்தனத்தை வேறு எந்த இனத்திலாவது கண்டிருக்கிறீர்களா?
தாளமுத்துவின் கல்லறையை என்றைக்காவது கண்டிருக்கிறீர்களா தமிழர்களே… அது இப்போது கல்லறையாக இல்லை… கழிவறையாக! மொழிப்போரில் முளைத்த எழுச்சியை வைத்து ஏற்றம்கண்டவர்கள், அந்தத் தியாகிகளின் பக்கம் திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை.
தாய்மொழியைப் பற்றிப் பேசினாலே, ‘தமிழ்ப் பாசிசம்’ எனப் பாய்பவர்களே… ‘இது தமிழர்கள் நாடு. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஆதிக்குடிகளே இந்த மண்ணை ஆண்டு இருக்கிறார்கள்!’ இதை நான் சொல்லவில்லை. புரட்சியாளர் அம்பேத்கரும் மூத்த தோழர் ஜோதிபாசுவும் சொல்லி இருக்கிறார்கள். இமயம் வரை எனது இனம் பரவி இருந்தது என்பதற்கு அங்கே புலிக்கொடி பறந்த உதாரணங்கள் போதாதா? எங்கள் முப்பாட்டன் சேரன் செங்குட்டுவன் பாட்டி கண்ணகிக்கு கோயில் கட்ட இமயத்தில் கல் எடுத்த வரலாற்றை ‘பாசிச’ பட்டம் சூட்டுபவர்கள் மறுக்க முடியுமா? ஊரான் வீட்டுக் கல்லை எங்கள் பாட்டன் தொட்டு இருக்க முடியுமா? இமயம் வரை விரவி இருந்த எங்கள் இனம், எப்படியடா இப்படிச் சுருங்கிப்போனது? மொழித் திரிபும் மொழிக்கலப்பும் எங்களை இந்த அளவுக்கு முடக்கிவிட்டதே… கருவியை ஆயுதம் என்றோம். கோயிலை ஆலயம் என்றோம். மகிழ்ச்சியை சந்தோஷம் என்றோம். மலரை புஷ்பம் என்றோம். மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளை சமஸ்கிருதக் கலப்பில் இருந்து பிரித்துப் பார்த்தால், எங்களுடைய தூய தமிழ் தும்பைப்பூவாக வீசுமே… எங்கள் முப்பாட்டன் சேரனின் வாரிசுகளை மலையாளி ஆக்கிவிட்டு, நாங்கள் கொலையாளிகளாகத் தவிக்கிறோமே… எங்கள் மொழியின் முகத்தில் விழுந்த காயங்களைச் சொன்னால் அது தமிழ்ப் பாசிசமா?
அறிவழகன், இளஞ்சேரன், புகழ்மாறன், கணியன், இனியன் என்கிற பெயர்கள் எல்லாம் இன்றைக்கு ரமேஷ், தினேஷ், சுரேஷ் என்று மாறிப்போகிற அளவுக்கு எங்கள் மொழி, கலப்புக்கு களமாகிவிட்டதே…
ஈழத்தில் இத்தனை பிணங்கள் விழுந்தபோதும், ‘தமிழர்கள் இறந்தார்கள்’ என்றுதானே சொன்னார்கள். பர்மாவில் இருந்து துரத்தப்பட்டபோதும், மலேசியாவில் இருந்து விரட்டப்பட்டபோதும் தமிழர்கள் என்கிற அடையாளம்தானே அனைவராலும் அறியப்பட்டது. பிணமாகும்போதும் நாம் இனமாகத்தானே வீழ்கிறோம். ஆனால், உயிர்வாழும்போது சாதிக்கும் மதத்துக்கும் கொடுக்கும் பற்றை என்றைக்காவது மொழிக்குக் கொடுத்து இருக்கிறோமா? பாலில் தண்ணீர் கலந்தால் வாங்க மறுக்கும் என் தமிழ்சாதி, அரிசியில் கல் இருந்தால் ஒவ்வொன்றாகப் பொறுக்கிவீசிவிட்டு சமைக்கும் என் தமிழ்க்குடும்பம் உயிருக்கு நிகரான மொழியில் மட்டும் ஊடுருவலையும் கலப்பையும் அனுமதித்தது அடுக்குமா தமிழர்களே? எது ஒன்றிலும் கலப்படத்தை விரும்பாத நாம் தாய்மொழிக் கலப்படத்தைத் தடுக்காமல் போனது ஏன்? தாயோடு பிறிதொரு ஆண் இருப்பதை நெஞ்சத்தால் எப்படி நினைத்துப் பார்க்க முடியாதோ… அதேபோல்தான் தமிழர்களே, தாய்மொழியில் அந்நியம் கலப்பதும்!
இங்கே ஸ்ட்ரீட் இருக்கிறது; தெரு இல்லை. எக்ஸ்டென்ஷன் இருக்கிறது; விரிவு இல்லை. ரோடு இருக்கிறது; சாலை இல்லை. போகவேண்டிய இடம் எங்கே இருக்கிறது எனக் கேட்டால், ‘லெஃப்டில் கிராஸ் பண்ணி, யு டர்ன் அடிச்சா ஸ்பாட் வந்துரும்!’ என பதில் சொல்கிறார்கள். அடக்கொடுமையே… வழி கேட்கும் இடத்தில்கூட நம் மொழி கேட்க முடியவில்லையே! வாய்மொழியாகக்கூட என் தாய்மொழியை இந்தத் தமிழகத்தில் கேட்க முடியவில்லையே… மூளை நரம்புகளை முறுக்கேற வைக்கவேண்டிய இந்த வருத்தம், எந்தத் தமிழனிடத்திலும் முளைக்காமல் போனது ஏனய்யா?
ஒவ்வொரு தமிழனின் மண்டையிலும் மான உணர்வு மரித்துப்போனதற்குக் காரணம்… நாம் தண்ணீர் பருகுவது இல்லை. மாறாக வாட்டர் குடிக்கிறோம். சோறு உண்பது இல்லை. ரைஸ் உண்கிறோம். காலையில் ‘குட் மார்னிங்’, இரவில் ‘குட் நைட்’ என்பதை வழக்கமாக்கிக்கொண்டோம்!
கோடிகளைக் கொட்டி செம்மொழி மாநாடு நடத்தியவர்கள், ஆறே மாதங்களில் வணிக நிலையங்களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டப்படும் என சூளுரை சொன்னார்களே… இந்த நொடி வரை எங்கேயாவது தமிழ்ப் பெயர்களைத் தாங்கிய வணிகப் பலகைகளைப் பார்க்க முடிகிறதா? ஆனால், ஈழத்தில் அப்போதே அண்ணன் பிரபாகரன் வங்கியை ‘வைப்பகம்’ என்றும் பேக்கரியை ‘வெதுப்பகம்’ என்றும் மாற்றினார். ”வெதுப்பகம்னு சொன்னப்ப சனங்க எல்லோரும் சிரிச்சாங்க தம்பி… ஆனால், இப்போது பேக்கரின்னு சொன்னா சிரிப்பாங்க தம்பி. நாம் உறுதி எடுத்தால் நிச்சயம் நிலைமை எல்லாம் மாறும்!” என அண்ணன் சொன்ன வார்த்தைகள் மறக்கக்கூடியவையா?
அண்ணன் தமிழ்ச்செல்வனின் இயற்பெயர் தினேஷ். ஒரு திருமண நிகழ்வுக்கு தமிழ்ச்செல்வனோடு தலைவர் போய் இருக்கிறார். அப்போது தமிழ்ச்செல்வனின் தமிழாசிரியை தலைவரிடம், தமிழ்ப் பெயர்களின் அவசியம் குறித்து வலியுறுத்தி இருக்கிறார். அப்போதே துடித்துப்போன அண்ணன் பிரபாகரன், ‘இயக்கத்தில் இருப்பவர்கள், முழுதும் தமிழின அடையாளத்தோடு மட்டுமே இருங்கள்!’ என ஓர் உத்தரவு போட்டார். போராளிகள், தலைவர்கள், தளபதிகள் பெயர்கள் எல்லாம் அன்றைக்கே தமிழ்ப் பெயராயின!
மாற்ற முடியும் என்கிற மன உறுதியும், மாற்ற வேண்டும் என்கிற நோக்கமும் தமிழகத்தை ஆண்ட – ஆளும் தலைவர்கள் எவருக்குமே இல்லாமல் போனது ஏன்? கர்நாடகத்தில் ஆங்கிலப் பெயரைத் தாங்கி வணிகப் பலகைகள் இருந்தால், அங்கே கிளம்பிச்செல்லும் கன்னட அமைப்பினர், அப்போதே ஆங்கிலப் பெயரை அழித்து, கன்னடத்தில் எழுதுகிறார்கள். அந்த இடத்திலேயே அந்த நிறுவனத்துக்கு அபராதம் போடுகிறார்கள். அதற்கு காவல் துறையும் துணையாகத்தானே நிற்கிறது… அதையத்த வீரம், இந்த அன்னை மண்ணில் எவருக்குமே ஏற்படாதது ஏனய்யா தமிழர்களே?
ரஷ்யாவில் இருந்து பிரிந்த லாட்வியா நாட்டில், அவர்களின் தாய்மொழியில் ரஷ்ய மொழியின் கலப்பு இருந்திருக்கிறது. அதைத் தடுக்க அந்த நாட்டில் சீருடை இல்லாத காவலர்களை நியமித்து, ரஷ்ய மொழியைக் கலந்து பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். சட்டம் போட்டு மொழியைக் காக்கத் துடிக்கும் நாடுகளுக்கு மத்தியில், நாம் திட்டம் போட்டு ஆங்கில மோகம் பிடித்து அலைவது நியாயமா தமிழர்களே?
ஆங்கிலம் என்பது அறிவு என நினைக்கும் அதிமேதாவிகளே! அமெரிக்காவில் ஆடு மேய்ப்பவனும், பிரிட்டனில் பிச்சை எடுப்பவனும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது அறிவின் உச்சமா? இங்கிலாந்தின் காலடியில் வாழும் ஜெர்மனும் பிரான்ஸும் தங்கள் மொழியில் ஆங்கிலக் கலப்பை இன்றைக்கும் அனுமதிக்கவிடாமல் கட்டிக்காக்கையில், 50 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியச் சிறப்புக்கொண்ட நம் தமிழ் மொழியை பாழாக்கித் தவிக்கிறோமே! ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக இருந்த வரை தவறு இல்லை. ஆனால், ஆங்கிலமே பயிற்று மொழியாகி, தமிழ் மொழிப்பாடமாக மாறிய துயரத்தை மறத்தமிழன் மறந்தும்கூடத் தட்டிக்கேட்கவில்லையே! தாய்த்தமிழ்ப் பள்ளிகளை அங்கீகரிக்க மறுக்கும் இந்தத் தமிழக அரசு, ஆங்கிலப் பள்ளிகளுக்கு ஏகபோக அங்கீகாரத்தை அள்ளி விடுகிறதே… உண்மையில் பார்த்தால், கலப்பாலும் திணிப்பாலும் கதறிக்கிடக்கும் தமிழைக் காக்கத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளை இந்த அரசாங்கம்தானே முன்னின்று நடத்தி இருக்கவேண்டும்?!
‘ஸோ’ என்று சொல்லாமல் நமக்கு சோறு இறங்குவது இல்லை. ‘ஆக்ச்சுவலி’ இல்லாமல் நாம் எதையும் ஆரம்பிப்பது இல்லை. அன்பை வெளிப்படுத்தக்கூட ‘ஐ லவ் யூ’தானே! ‘சார், சார்’ என்றுதான் மோர் ஊற்றுகிறோம்… ‘மேடம், மேடம்’ எனச் சூடம் காட்டுகிறோம்!
‘வெள்ளைக்காரா, எங்களை அடிமைப்படுத்த நீ தேவை இல்லை. உன் மொழியே போதும். அதை விட்டுவிட்டுப் போ’ எனச் சொன்னவர்களாக – சொரணையற்றவர்களாக – அந்நிய மொழியில் நாம் சொக்கிக்கிடக்கிறோம் தமிழர்களே… சுதந்திரம் வாங்கியவர்களாக சொல்லிக்கொண்டாலும், இப்போதும் நம்மை வெள்ளையர்கள்தான் ஆள்கிறார்கள். அன்றைக்கு நாட்டை… இன்றைக்கு நாக்கை!
|