இனி “இந்தி தெரியாது போடா” இல்லை, “இந்தி வேண்டாம் போடா” தான்! – மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் முழங்கிய சீமான்

428

01-11-2022 | நவ. 01 – தமிழ்நாடு நாள் | மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி | சீமான் எழுச்சியுரை

நவம்பர் 01 – ‘தமிழ்நாடு நாள்’ அன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து முன்னெடுத்த மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரெழுச்சியாகப் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தலைமை வகித்த இந்நிகழ்வில் இந்தி திணிப்பிற்கு எதிரான சீமான் அவர்கள் ஆற்றிய பேருரையின் சுருக்கிய எழுத்தாக்கம் பின்வருமாறு.

என் உயிரோடு கலந்து வாழுகிற, தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். என் உயிரினும் இனிய உடன்பிறந்தார்களே, பேரன்புமிக்கப் பெற்றோர்களே, ஆன்றோர் பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் என் அன்பும், வணக்கமும். இன்று இந்தி திணிப்பிற்கு எதிரான ஒரு மாபெரும் பேரணியை நாம் நடத்தியிருக்கிறோம். கொட்டும் மழையில் கூடி, எதற்கும் அஞ்சாத பிரபாகரனின் பிள்ளைகள் நாம் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். மானமும், வீரமும், அறமும் எங்கள் உயிரென்று வாழும் இனத்தின் மக்கள் நாமென்பதைப் பறைசாற்றியிருக்கிறோம்.

எனது அன்பு சொந்தங்களே, நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல, நம் சொந்த மொழிக்கு உயிரானவர்கள். இந்தியை எதிர்த்து நமது போராட்டம் அல்ல, கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து நாம் போராடுகிறோம். அதை ஒவ்வொருவரும் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். இந்தி என்கிற மொழி இயற்கையாக உருவானது அல்ல, மாறாக உருவாக்கப்பட்டது. முகலாயர்கள் இந்த நிலப்பரப்பை ஆண்டபோது, அவர்களுடைய தாய்மொழியான பாரசீக மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது. பாரசீக மொழி படித்தால் வேலை கிடைக்கும் என்று எண்ணி, மக்கள் அதனைப் படிக்கத் தொடங்கினார்கள். அந்த பாரசீக மொழியொடு சமஸ்கிருதம் கலந்து பேசிப்பேசி, அதிகமாக பாரசீகமும் குறைந்த அளவில் சமஸ்கிருதமும் கலந்து உருவான மொழி உருது. அதுவே அதிகமாக சமஸ்கிருதமும், குறைவான பாரசீக மொழிச் சொற்களும் கலந்து உருவான மொழி தான் இந்தி. அந்த இந்தி மொழி உருவாக்கப்பட்டு வெறும் 400 ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை. ஆனால் எங்கள் தாய்மொழி தமிழ், உலகின் மிகமூத்த மொழி. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் முதல் மாந்தன் பேசிய மொழி எங்கள் தாய்மொழி, தமிழ். இந்தி ஒரு இரவல் மொழி, நம் தாய்மொழி இறைவன் தந்த இயற்கை மொழி.

“மணி நெற்றி உமிழ் செங்கண், தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்” என்று சிவபெருமானே தந்த மொழி தமிழ் என்று அகத்தியர் பாடுகிறார். நாட்டின் முதன்மை அமைச்சர் ஐயா நரேந்திர மோடி அவர்கள் கூட இந்திய மொழிகளின் தொன்மையைத் தமிழில் இருந்து அறியலாம் என்கிறார். உலகின் தொன்மையான மொழி தமிழ் இந்தியாவில் இருப்பது எங்களுக்குப் பெருமை என்று கூறியிருக்கிறார். அப்படிபட்டப் பெருமை கொண்ட மொழிக்கு நீங்கள் கொடுத்திருக்கும் முன்னுரிமை என்ன? அங்கீகாரம் என்ன? என்பது தான் அவர்களிடத்திலே நாம் எழுப்பும் கேள்வி.

“முன்னந் தோன்றிய நிலத்தில் முகிழ்த்தவர்!
மூத்த தமிழ்மொழிக் குணர்வின் மூத்தவர்!
தென்னன் பாண்டியன் குமரிக் குடிமையர்!
திசையெ லாம்பரந் துலகை அளந்தவர்!
இன்னரும் இயலிசை நாடகம் யாத்தவர்!
இந்திய – நாவலந் தேயத்து இறைமையர்!
என்ன வியப்படா? – இவர்கள் தமிழர்கள்!

வான்முகில் மலையிடை வாழ்க்கை தொடங்கியவர்!
வளந்தரு குறிஞ்சியில் காதலை உணர்ந்தவர்!
தேனுமிழ் முல்லையை மருதம் நெய்தலைத்
தீர ஆய்ந்துநல் இல்லறம் வகுத்தவர்!
கான்தரு பொருளையும் கழனியும் கண்டவர்!
கடலின் பரப்பையும் கடந்தையில் சென்றவர்!
ஏன் தம்பி தெரியுமா ? – இவர்கள் தமிழர்கள்!”
என்று நம்முடைய தாத்தா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடுகிறார்.

அமெரிக்க மொழியியல் ஆய்வறிஞர் அலெக்ஸ் கோலியர், மனிதன் முதன் முதலாகப் பேசிய மொழி தமிழ் என்று தனது மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார். நம்முடைய தொன்ம இலக்கண நூலான தொல்காப்பியம், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகு” என்று பாடுகிறது. ஆனால் இவர்கள், தமிழ்நாடு என்று எப்போது பெயர் வந்தது? தமிழர்களுக்கென்று எப்போது நாடு இருந்தது? என்று நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நாடு மட்டுமல்ல உலகமே எங்களுடையது. தெற்காசிய நிலப்பரப்பு முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாகர்கள். தமிழர்களைத் தவிர மற்ற இனத்தவரெல்லாம் வந்து குடியேறியவர்கள் என்று அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியப் பெருமக்களான டோனி ஜோசப்பும், ரிச்சர்ட் மார்ட்டினும் தனது ஆய்வு கட்டுரையிலே நிருவியுள்ளார்கள்.

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடும் கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி”
என்று சிலப்பதிகாரம் பாடுகிறது. இமயம் வரை பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அப்படிபட்ட தமிழர்கள் நிலத்தில் இந்தியைத் திணித்தால் எதிர்க்கின்றார்கள் என்பதனால் இப்போது இந்திக்காரர்களைத் திணிக்கிறார்கள்.

“மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே” என்று அப்பர் அடிகளார் பாடுகிறார். சுந்தரர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், அப்பர் அடிகள் எங்கள் இறையைப் பாடி வளர்த்த பைந்தமிழ் எங்கள் தாய்மொழி.

“ஓம் நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி!
தேசன் அடிபோற்றிச் சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!”
என்று எம் இறையைப் போற்றிப் பாடி மாணிக்கவாசகர் வளர்த்த மொழி எங்கள் தாய்மொழி தமிழ்.

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
உலகில் எல்லா மொழியும் அகர ஒலியில் தொடங்குவது போல, இந்த உலகம் தோன்றியது சூரியனில் இருந்து என்று உலகப் பொதுமறை தந்த, வான்புகழ் கொண்ட எங்கள் வள்ளுவப் பெருமகனார் வளர்த்த மொழி எங்கள் தாய்மொழியாம் தமிழ்மொழி. அப்படிப்பட்ட தமிழர் நிலத்தில் இந்தியைத் திணிப்பதா? இந்தி திணிப்பிற்கு எதிரான இந்தப் பேரணியை ஒரு சிறிய இடத்தில் நடத்திக்கொள்ளத் தான் எங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். ஒரு பெரிய இடம் கொடுத்திருந்தால் எங்கள் கூட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். இந்த மக்கள் கூட்டம் தமிழர் பெருங்கடல்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல்
இனிதாவது எங்கும் காணோம்”
என்று பாடுகிறார் நமது பாட்டன் பெரும்பாவலன் பாரதி. இந்தி, சமஸ்கிருதம் என எல்லா மொழிகளையும் கற்றறிந்தவர் பாரதி. அவர் தான் தமிழ் போல இனிதானா மொழி வேறில்லை என்று பாடுகிறார்.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்ததமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே!

சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூ தூது சங்கே!
பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோளெங்கள் வெற்றித் தோள்கள்.
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள்
ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்!” என்று பாடுகிறார் நம்முடைய புரட்சிப் பாவலர் பாரதிதாசன் அவர்கள். தமிழ் எங்களுக்கு வெறும் பேச்சு அல்ல தமிழ் எங்களுக்கு மூச்சு.

“தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்”
என்று தமிழ் மொழி எங்கள் உயிருக்கு நேர் என்று பாடுகிறார் பாவேந்தர் பாரதிதாசன். தமிழ் தான் எங்கள் முகம், தமிழ் தான் எங்கள் முகவரி, தமிழ் தான் எங்கள் அடையாளம், தமிழ் தான் எங்கள் வரலாறு, தமிழ் தான் எங்களுக்கு எல்லாம்.

இந்தியை மத்திய அரசு அலுவகங்களில் திணித்து, அதன் மூலம் ஒற்றை மொழிக் கொள்கைக்கு அவர்கள் இந்தி மொழியைக் கட்டாயப்படுத்தித் திணிக்கின்றார்கள். இங்கே இருக்கும் மத்திய அரசுப் பள்ளிகளான கேந்திர வித்யாலயா, நவோதயா போன்ற சிபிஎஸ்சி பாடத்திட்டத்தைக் கொண்ட பள்ளிகளில் எல்லாம் தமிழ் மொழியைப் படிக்க வாய்ப்பே கிடையாது. அந்தப் பள்ளிகளுக்குக் கிடைக்கும் நிலம், நீர், மின்சாரம் என எல்லாம் நம்முடையது. ஆனால் நம் நிலத்தில் இருக்கும் அந்தப் பள்ளிகளில் நம் தாய்மொழியைப் படிக்கவே வாய்ப்பில்லை என்றால் எப்படி ஏற்பது? அதற்கு மத்திய அரசு தான் நிதி கொடுக்கிறது என்பார்கள். மத்திய அரசுக்கென்று ஏது நிதி? எல்லாம் வரி என்ற பெயரில் நாம் கொடுத்தது. மத்திய அரசுக்கு வரி செலுத்தி இந்த நாட்டின் பொருளாதாரத்தை நிறைப்பதில் மகாராஷ்ட்ரா முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது அதிக வரி செலுத்தும் மாநிலம் நம் தமிழ் நாடு. தமிழர்களாகிய நாம் கொடுத்த வரிப்பணத்தைக் கொண்டு நிர்வகிக்கும் பள்ளிகளில் தமிழ் படிக்க முடியாது என்றால் அதை எப்படிக் கடந்து செல்வது? இந்த நிலமும் அதிகாரமும் எங்கள் கைகளில் வரும்போது இதேபோன்று இருந்துவிட முடியுமா? மின்சார்த்தைத் துண்டித்து, நீர் விநியோகத்தை நிறுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்.

அவரவர் தாய்மொழி அவரவருக்கு முதன்மையானது. இந்தி பேசும் மாநிலத்தில் இந்தியைக் கட்டாயம் படிக்க வையுங்கள். இந்தியை நீங்கள் உங்கள் நிலத்தில் கொண்டாடிக்கொள்ளுங்கள். எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்கள் நிலத்தில் தமிழுக்குத் தான் முன்னுரிமை. தமிழர் நிலத்தில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும். இங்கே தமிழ் தான் கொண்டாடப்படும். இந்தி படித்தால் வடநாட்டில் வேலை கிடைக்கும் என்பார்கள். பிறகு ஏன் சுமார் இரண்டு கோடி வடஇந்தியர்கள் தமிழகத்தில் வந்து வேலை செய்கிறார்கள். தமிழர்களாகிய நாம் உழைப்பிலிருந்து வெளியேறிவிட்டதனால், அந்த இடத்தில் இருக்கும் தேவையை வடஇந்தியர்கள் வந்து நிரப்பிவிடுகிறார்கள். எனவே தமிழ் இளம் தலைமுறையினர் இந்த இடத்தில் மிகவும் விழிப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். உழைப்பிலிருந்து நாம் ஒருபோதும் வெளியேறக் கூடாது. அப்படி வெளியேறினால் நம்முடைய நிலம் பறிபோகும்.

வடஇந்தியர்களுக்கு இங்கு வேலை கொடுப்பத்தோடு குடும்ப அட்டையும், வாக்காளர் அட்டையும் கொடுத்து விடுகிறார்கள். இரண்டு கோடி வடஇந்தியர்கள் வாக்குரிமை பெற்றால், இனி இந்த நிலத்தின் அரசியலை அவர்கள் தான் தீர்மானிப்பார்கள். நாம் அரசியல் அதிகாரமற்ற அடிமைகளாக்கப்படுவோம். அதனால் நம்முடைய நிலம் அவர்கள் கைகளில் பறிபோகும், சொந்த நிலத்தை விட்டு அடித்து விரட்டப்படுவோம். ஈழத்தில் நம் இன மக்கள் அடித்து விரட்டப்பட்டபோது அகதிகளாக, ஏதிலிகளாக வந்து நிற்பதற்காவது அவர்களுக்கு இங்கு ஒரு தாய் நிலம் இருந்தது. இங்கிருந்தம் விரட்டப்பட்டால், நாம் எங்குச் செல்வது என்று எண்ணிப் பாருங்கள். அதை ஒவ்வொரு தமிழனும் எச்சரித்துக் கொள்ள வேண்டும்.

எனவே, தமிழ்நாடு அரசு வடஇந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது. நம்முடைய அடுத்தப் போராட்டம் அது தான். வேண்டுமென்றால் தேர்தலின்போது அவர்கள் அவரவர் சொந்த மாநிலத்திற்குச் சென்று வாக்கு செலுத்திவிட்டு வரட்டும். அதேபோன்று என் தமிழ் மக்கள் இங்கு வந்து வாக்கு செலுத்திவிட்டுச் செல்லட்டும். “நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம், பலத்தை இழந்தால் இனத்தை இழப்போம்” என்று ஈழத்துப் பாவேந்தன் புதுகை ரத்தினதுரை பாடியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். “நிலமற்ற இனமும் நிர்வாண உடலும் உலகில் அவமானகாரமானது” என்று நமது உயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் நமக்குக் கற்பித்திருக்கிறார்.

இந்தியைத் திணித்தால் தமிழ் அழிந்துவிடுமா என்ன? என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆம், தமிழ் அழிந்து தான் போகும். அப்படித்தான் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதத் திணிப்பி‌ல், தமிழோடு சமஸ்கிருதம் கலந்து கலந்துப் பேசி கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் உருவாயிற்று. பதினைந்தாம் நூற்றாண்டில் மலையாளம் என்றொரு மொழி கிடையாது. நம் சேரப் பாட்டன் கட்டி ஆண்ட நிலமது. இன்று மலையாளம் என்றொரு மொழி பேசும், கேரளா எனும் மாநிலம் உருவானது எப்படி? தமிழ் நிலத்தில் ஏற்பட்ட பிறமொழித் திணிப்பால் தான். “கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலயாளமும் துளுவும் உன்உதரத்து உதித்தெழுந்து” என்று தமிழ் மொழியின் செம்மைத் தன்மையினைப் பாடியுள்ளார் மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை அவர்கள். அப்போது எவ்வளவு பெரிய இனக்கூட்டமாகத் தமிழன் இருந்துள்ளான் என்று பாருங்கள். ஆனால் அவன் மொழிக் கலப்பில் சிதைந்து அழிந்துவிட்டான். இன்று நாம் தமிழோடு ஆங்கிலம் கலந்து கலந்துப் பேசி தமிங்கிலம் என்றொரு மொழியை உருவாக்கிவிட்டோம். எது தமிழ் எது ஆங்கிலம் என்று தெரியாத அளவிற்குத் 90 விழுக்காடு ஆங்கிலக் கலப்பு. அது எவ்வளவு பெரிய பேராபத்து என்பதை நாம் உணர வேண்டும்.

அதைப்போல இந்தி மொழி திணிக்கப்பட்டால், நம் தாய்மொழி அழிந்துவிடும். தாய்மொழி அழிந்தால் நம் பண்பாடு அழிந்துப்போகும். பண்பாடு அழிந்தால் நம் இனம் அழிந்துவிடும். இனம் அழிந்தப்பிறகு நாடும் அழிந்துவிடும். ஜெர்சி மாடு என்கிற சீமைப் பசு வந்தபிறகு நம்முடைய நாட்டு மாடுகள் அழியவில்லையா? கோதுமை வந்ததும் நம்முடைய சிறு தானியங்கலான சோழம், கம்பு, வரகு, சாமை, தினை எல்லாம் அழியவில்லையா? நாம் வந்த பிறகு தான் அதை மீட்டுருவாக்கம் செய்ய, அதன் பயனைப் பற்றி மக்களிடத்தில் தொடர்ச்சியாகப் பேசிப்பேசி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளோம். அப்படி இந்தியைத் திணித்தால் தமிழ் அழிந்துப் போகும்.

ஒரு தேசிய இனத்தின் மொழி மீது ஒற்றை மொழியைத் திணித்து அதைச் சிதைத்து அழிப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை. அந்தத் துரோகத்தை எப்படிச் சகித்துக் கொண்டு போவது. அதனால், இந்திய ஒன்றிய அரசை ஆளுகிற ஆட்சியாளர்கள் கட்டாய இந்தி திணிப்பைக் கைவிடவேண்டும். இல்லையெனில், மிகப்பெரிய ஒரு மொழிப்போரை நாங்கள் இந்த நிலத்தில் முன்னெடுக்க வேண்டிய அவசியம் உருவாகும். சட்டம் ஒழுங்கை மதித்து, ஒரு ஓரத்தில் இன்று நடைபெறும் கூட்டம் போலக் கூட்டம் போட்டுக்கொள்ள மட்டுமே அனுமதி கொடுக்கும் சட்டத்திற்கெல்லாம் பிறகு நாங்கள் கட்டுப்பட மாட்டோம். எங்களுக்குக் கொடுத்த இந்தக் குறுகிய இடம் போலத்தான் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கும் இடம் வழங்கியுள்ளீர்களா? இந்தி திணிப்பை எதிர்த்து நாம் ஒப்புக்குப் போராடவில்லை, உளமாறப் போராடுகிறோம். ஏனென்றால், நாம் தூய தமிழ்த்தாயின் பிள்ளைகள்.

“இந்திக்கு இங்கு ஆதிக்கமா? எல்லோரும் வாருங்கள் நாட்டினரே! செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்தபின்னும் இந்தத் தேகம் இருந்தும் ஒரு லாபமுண்டோ?” என்று நமது புரட்சிப் பாவலர் விடுத்த அறைகூவலுக்கேற்ப அன்னைத்தமிழ்ப் பிள்ளைகள் நீங்கள் எழுச்சியும் புரட்சியுமாகத் திரண்டு இங்கே வந்திருக்கிறீர்கள். உங்களை நினைத்து உங்கள் உடன் பிறந்தவன் என்கிற முறையில் உண்மையிலேயே பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். இறுதிக்கட்ட ஈழப்போரின்போது நம்முடைய தலைவர் பிரபாகரன் அவர்கள், “நாம் பற்றவைத்துவிட்டோம், இனி எவராலும் அதை அணைக்க முடியாது, பற்றி எரியும்” என்றார். அதுபோல, அன்னைத்தமிழ் காக்கிற மொழிக்கான புரட்சிப் போர் ஒருபோதும் ஓயாது.

அவரவர் மாநிலத்தில் அவரவர் தாய்மொழி தான் கல்வி மொழி. ஒரு கெடுவாய்ப்பாக வெள்ளைக்காரன் நம்மை ஆண்டதால் ஆங்கிலம் ஒரு தொடர்பு மொழியாக மாறிவிட்டது. இந்தியாவிற்குள் இந்தியைத் தொடர்பு மொழியாக வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். அவர்களிடத்தில் நாம் கேட்பது, இந்தியாவை விட்டு வெளியே போனால் எந்த மொழியைத் தொடர்பு மொழியாக வைத்துக்கொள்வது? இந்தி தான் இந்தியாவின் அலுவல் மொழி என்றால், என் தாய் மொழி தமிழ் என்னானது? விடுதலைப் பெற்ற இந்தியாவில் எந்த மொழி ஆட்சி மொழியாக வரவேண்டும் என்கிற கருத்து விவாதம் நடக்கிறபோது, நம்முடைய தாத்தா காயிதே மில்லத் அவர்கள் எழுந்து, “இந்திய மொழிகளிலே தொன்மையான மொழி தான் ஆட்சி மொழியாக வரவேண்டுமென்றால், என்னுடைய தாய்மொழி தமிழ் தான் ஆட்சி மொழியாக வரவேண்டும். அதை எந்த வரலாற்று ஆய்வாளனும் மறுக்க இயலாது” என்று பேசியிருக்கிறார். நம்முடைய தாத்தா இசுலாமியர் என்பதனால் நேரு அவர்கள் “நீங்கள் உருதைச் சொல்வீர்கள் என்று பார்த்தால் தமிழைக் கூறுகிறீர்களே?” என்று கேட்கும்போது நமது தாத்தா, “நான் அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன். இசுலாம் எங்கள் வழி, இன்பத்தமிழே எங்கள் மொழி” என்று பதிலளித்துள்ளார்.

“செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும் வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!” என்று பாடுகிறார் எங்கள் புரட்சிப் பாவலர். அவர் பாடிய வரிகளுக்கேற்ப இன்று செந்தனல் உருவாகிவிட்டது. “மக்களுக்கென்று படை ஒன்று இல்லையென்றால், மக்களுக்கென்று எதுவுமே இல்லை” என்கிறார் மா செ துங். எம் மக்களுக்கென்று ஒரு படை உருவாகிவிட்டது, அது தான் நாம் தமிழர் என்கிற அரசியல் புரட்சிப் படை. “தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே; தமிழைப் பழித்தவனைத் தாயே தடுத்தாலும் விடாதே” என்கிறார் நமது தாத்தா பாரதிதாசன் அவர்கள்.

“பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி

நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!

இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!

என்ற புரட்சிப் பாவலரின் உணர்ச்சி வரிகளுக்கேற்ப எழுந்த கூட்டம் தான், இந்த இனமான தமிழ்ப் பிள்ளைகளின் கூட்டம்.

“நறுக்குவோம் பகையின்வேர்
சிறுத்தைப் பெருங்கூட்டம்
நாம் தமிழர்.. நாம் தமிழர் என்று
முரசறைவாய் குறுக்கில் முளைத்திட்ட
அயலார் ஆட்சி கூண்டோடு
போயிற்றுக் கொட்டடா முரசம்.!
சிங்கத்தின் குகைக்குள் சிறுநரிக்கு இடம்கொடுத்தோம்
செந்தமிழ் நாட்டின் உரிமையிழந்தோம்.
பொங்கும் உணர்வில் எழும் தமிழர் அரசு
போர் தொடங்கிற்று கொட்டடா முரசு!”

என்று இந்தத் தமிழ் மொழியைப் பேசிப்பேசித் தான், மொழிப் போரைப் பயன்படுத்தித் தான், இவர்கள் அதிகாரத்திற்கு வந்தார்கள். எங்கே அவர்கள் இந்தியை எதிர்த்தார்கள்? எவன் இந்த நிலத்தில் இந்தியைக் திணிக்க முயல்கிறானோ, அவனோடே அற்பத் தேர்தல் வெற்றிக்காகக் கூட்டணி உடன்படிக்கை செய்தார்கள், அதன் விளைவாக இந்தி தானாகவே உள்ளே நுழைந்துவிட்டது. இன்று எல்லா இடத்திலும் இந்தி இருக்கிறது. இனி நாங்கள் இந்தி எதிர்ப்புப் பேரணி நடத்தப்போவதில்லை, இந்த நிலத்தில் இந்தி அழிப்புப் பேரணி தான் நடத்தப் போகிறோம்.

அவரவர் நிலத்தில் அவரவர் தாய்மொழி, கலை, இலக்கியப் பண்பாடு என்று வாழ்வது தான் அந்தந்த தேசிய இனத்திற்கு நல்லது. இந்தியைப் படிக்கச்சொல்லி கட்டாயப்படுத்துவது அவசியமற்றது. நமக்குத் தேவையென்றால் படித்துக்கொள்ளப் போகிறோம். அதை எதற்காக வலிந்து திணிக்க வேண்டும். தமிழர்கள் நாங்கள் இந்திய இராணுவத்தில் பணி செய்கிறோம், ஆனால் இந்தி கற்றுக்கொண்டு பணியில் சேரவில்லை. இன்று இந்திக்காரர்களை விட அருமையாக இந்தி பேசுவோம், ஏனென்றால் தேவை ஏற்படும்போது கற்றுக்கொள்வோம், அவ்வளவே. எங்களுடைய கோட்பாடு, “இந்தி தெரியாது போடா” இல்லை, “இந்தி வேண்டாம் போடா” என்பது தான்.

சின்னச்சின்ன நாடுகள் ஏழு, எட்டு மொழிகளை ஆட்சி மொழியாக வைத்துள்ளது. இவ்வளவு பெரிய துணைக்கண்டம் இந்தியா, தனது 22 தேசிய மொழிகளையும் ஆட்சி மொழியாக வைத்துக்கொள்வதில் என்ன சிரமம்? இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு ஒன்றை எச்சரிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். பல மொழிகள் என்றால் இந்த நிலப்பரப்பு ஒன்றாக இருக்கும், ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும், இது உறுதியாக நடக்கும். அதற்குச் சான்று வங்காளதேசம் என்கிற நாடு. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து போகக் காரணம், மார்கம். பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் பிரிந்ததற்குக் காரணம், மொழி. பாகிஸ்தானின் தேசிய மொழி உருது, வங்காளதேசத்தின் தேசிய மொழி வங்காளம் என்பதனால் தனி நாடடைந்துப் பிரிந்துப் போனார்கள். அது தான் இங்கும் நடக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கே பிரிவினைவாதத்தைத் தூண்டுவது, ஒருமைப்பாட்டைச் சிதைப்பது யார்? நீங்கள் தான், நாங்கள் அல்ல. நாங்கள் தமிழ் தமிழ் என்று பேசும்போது பாசிசம், பிரிவினைவாதம் என்று பேசியவர்கள் இப்போது இந்தி படி! இந்தி படி! என்று திணிக்கும்போது எங்கே போனார்கள்? அது இந்தித் தீவிரவாதம் இல்லையா? சமஸ்கிருதம் படி என்று சொல்லுவது சமஸ்கிருத சாவனிசம் இல்லையா? தமிழ் என்று பேசினால் இனவெறியைத் தூண்டுகிறார்கள் என்று கூறுபவர்கள், இந்தி படி! சமஸ்கிருதம் படி! என்று பேசுவது மட்டும் என்ன என்பதை வாய்த் திறக்காமல் கடந்து போகிறார்கள். நம்மை இனவெறியன் என்று யார் சொல்லுகிறார்களோ, அவர்கள் இன்னொரு இனத்தின் வெறியர்கள். நாங்கள் கேட்பது எங்கள் இனத்தின் இறையாண்மையை.

புரட்சியாளர் அண்ணன் பழநி பாபா அவர்கள் கூறியதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். “தமிழர்கள் இனப்பற்றுக் கொள்ளாதீர்கள், இனவெறிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் ஆளப்படுவீர்கள், ஒருபோதும் ஆளமாட்டீர்கள்” என்கிறார். அதை நமக்குத் தான் கூறியிருக்கிறார். நம்முடைய இன உணர்வு என்பது எந்த இனத்தையும் பகைக்க அல்ல, நம் இனத்தின் பகையை வெல்ல என்பதை நீங்கள் அனைவரும் நன்கு உள்வாங்கிக்கொள்ள வேண்டும். உலகத்தில் எல்லா மொழி பேசும் மக்களையும் நாங்கள் நேசிக்கிறோம். அதைப்போலவே எங்கள் மொழி பேசும் மக்களையும் நாங்கள் உயிராக நேசிக்கிறோம். முதலில் சொல்வதை மானுடநேயம் என்கிறீர்கள், பிறகு கூறியதை மட்டும் இனவெறி என்கிறீர்கள். இதை எப்படி ஏற்பது?
எங்கள் தாய்மொழி சிதைந்து, அழிந்துப் போவதை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம். உயிரைக் கொடுத்தேனும் எங்கள் மொழியை நாங்கள் பாதுகாப்போம். சிதைந்து அழிந்துக் கொண்டிருக்கிற எங்கள் தாய்மொழியை நாங்கள் மீட்டுருவாக்கம் செய்வோம். முன்பெல்லாம் சமஸ்கிருதப் பெயர்களைத் தமிழ் பிள்ளைகளுக்குச் சூட்டினார்கள். இப்போது ஒரு தலைமுறை தமிழ் பெயர்களைச் சூட்டத் தொடங்கியுள்ளது. ஒரு பெரிய மாறுதலைத் தமிழ் இளம் தலைமுறையினராகிய நாம் உருவாக்கிக்கொண்டு வருகிறோம். இந்த இனத்தின் வரலாறு பிரபாகரனுக்கு முன்பு, பிரபாகரனுக்குப் பின்பு என்று தான் எழுதப்படும். “வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்கள், ஒருநாள் தங்களுக்கான வரலாறைத் தாங்களே எழுதுவார்கள்” என்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நாம் நம் இனத்திற்கான வரலாற்றை எழுத வேண்டிய காலம் வந்துவிட்டது.

இங்கே இந்தியாவில் தற்போது அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது, இந்தி பேசும் மாநிலத்தில் வேண்டுமானால் நீங்கள் இந்தியை அலுவல் மொழியாக வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், எங்கள் தாய் நிலத்தில் தமிழ் தான் அலுவல் மொழியாக, ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருக்கட்டும். நாம் பேரணியாக நடந்து வந்த வீதிகளில், எந்தக் கடையின் பெயர்ப்பலகையும் தமிழில் எழுதப்படவில்லை என்பதைப் பார்த்தோம். நாம் அதிகாரத்திற்கு வந்தவுடன் கடையின் பெயர்ப்பலகைகளைத் தமிழில் எழுதச்சொல்லி வலியுறுத்துவோம். அப்படி எழுதாமல் இருந்தால் மின்சாரத்தைத் துண்டித்து, நீர் விநியோகத்தை நிறுத்திவிடுவோம். அதையும் மதிக்கவில்லையென்றால் கடையை இழுத்து மூடிவிடுவோம். எங்கள் நிலத்தில் தமிழ் தான் இருக்க வேண்டும். தமிழுக்குத் தான் முன்னுரிமை வழங்கப்படும். இங்கே தமிழர்களுக்குத் தான் 90 விழுக்காடு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அல்ல. தமிழ்நாட்டு இளைஞர் என்றால் வடஇந்தியாவிலிருந்து வந்து இங்கே குடியிருப்பவனும், இங்கே வசிக்கும் பிற மாநிலத்தவரும் தமிழ்நாட்டு இளைஞன் தான். அதனால் தான் நாங்கள் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று தெளிவாகக் குறிப்பிடுகிறோம்.

இந்தி திணிப்பிற்கு எதிரான இந்தப் பேரணிக்கு எனது தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் பேரெழுச்சியாக வந்து இப்பேராணியை நீங்கள் வெற்றிப் பேரணியாக மாற்றிக் காட்டிவிட்டீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது நன்றியும், வணக்கமும். நம் இலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை. இனம் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம். புரட்சி எப்போதும் வெல்லும், நாளை மலரும் நாம் தமிழர் அரசு அதைச் சொல்லும். நன்றி! வணக்கம்! நாம் தமிழர்!

முந்தைய செய்திசுற்றறிக்கை: தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக
அடுத்த செய்திநில அளவீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு எல்லைப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்