க.எண்: 2022110500
நாள்: 09.11.2022
சுற்றறிக்கை: தமிழக வாக்காளர் பட்டியல்
திருத்தப் பணிகள் தொடர்பாக
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் புதிய வரைவு வாக்காளர் பட்டியலை இன்று (09-11-2022 புதன்கிழமை) வெளியிட்டுள்ளதோடு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் செய்வதற்கான பணிகளையும் இன்று முதல் தொடங்கியுள்ளது.
அதன்படி, மேற்கூறிய பணிகளை சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் அவரவருக்குரிய வாக்குச் சாவடிகளிலேயே நேரடியாகவும், மற்ற நாட்களில் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவு அதிகாரி மூலமும், ‘https://www.nvsp.in/’ இணையதளம் மற்றும் ‘Voter Helpline’ செயலி வாயிலாகவும் மேற்கொள்ளலாமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு முகாம்களானது நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய (சனி, ஞாயிறு) தேதிகளில் நடைபெறும் என்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆகவே, கட்சி உறவுகள் இவ்வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி, உடனடியாகத் தத்தம் பகுதிகளில் புதிதாகக் கட்சியில் இணைந்துள்ள 17 வயது நிரம்பிய தம்பி, தங்கைகளது ஆவணங்களைப் பெற்று, அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கும் பணியினை மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆற்றிட வேண்டுமெனவும், வாக்காளர் அட்டையில் பெயர், முகவரி திருத்தம் தேவைப்படும் உறவுகளுக்கு அதற்கான வழிகாட்டு உதவிகளை விரைந்து செய்துதர வேண்டுமெனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
– நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி