திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 16

55
திருப்பி அடிப்பேன்! – சீமான்


ஆ.ராசா கைது… அடேங்கப்பா… தன் மீதான ஊழல் கறையைக் கழுவ காங்கிரஸ் எவ்வளவு நியாய உணர்வோடு எடுத்திருக்கும் நடவடிக்கை இது?!

லஞ்ச ஊழலை ஒழிப்பதையே பிறவிப் பெரும் கனவாகக்கொண்ட காங்கிரஸ் அரசு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த தவறுகளுக்காகக் கொதித்து எழுந்து ஆ.ராசாவைக் கைது

செய்திருக்கிறது. சரி… கைது நடவடிக்கை பாய்ந்த கண நேரத்திலேயே, ‘காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணியில் எவ்விதப் பாதிப்பும் இல்லை. கூட்டணி உறுதியாகத் தொடர்​கிறது!’ என அறிவிக்கிறது அதே காங்கிரஸ் கட்சி. நாடகம் இயற்றுவதில் கலைஞர் பெருமகனார் கை தேர்ந்தவர். அவருக்கே நாடகம் நடத்திக் காட்டுகிறது காங்கிரஸ் கட்சி. இறுகிய பிடிக்குள் ராசாவை வைத்துக்​கொண்டு, ‘எத்தனை ஸீட்?’ எனக் கேட்கும் காங்கிரஸின் தந்திரம், கலைஞர் பெருமகனாரைத் தத்தளிக்கவைத்து இருக்கிறது. காலம் திரும்புகிறது எனச் சொன்னேனே தம்பிகளே… அது இதுதான்!

ஈழத்துப் படுகொலைகள் இரக்கமற்று நடத்தப்பட்டபோது, ‘கலைஞர் அய்யா காப்பாற்றுங்கள்… உங்கள் மந்திரிகளின் பதவிகளை உதறச் சொல்லியாவது, நம் உறவுகளைக் காப்பாற்றுங்கள்…’ எனக் கண்ணீரும் கம்பலையுமாக நாம் கதறிக்கிடந்ததை ஒருகணம் நினைவுக்குக் கொண்டுவாருங்கள் உறவுகளே… காங்கிரஸ் தலைமைக்குத் தவறியும் நெருக்கடியை உண்டாக்கிவிடக் கூடாது என நினைத்து – ஈழ ஆர்வப் போராட்டங்களின் வீரியத்தை அணைத்து, அத்தனையையும் முடக்கிப்போட்ட முதல்வர் பெருமகனார், இன்றைக்கு தலைநகர் நெருக்கடியால் தடுமாறிக்கிடக்கிறார். நம் குலையறுத்தபோது காங்கிரஸின் முகத்தைக் கண்டு​கொள்ளாமல் இருந்தவர், இன்றைக்கு நிலை வெறுத்துத் தவிக்கிறார்.

சுதந்திர இந்தியாவில் அரை நூற்றாண்டு காலத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி என்றைக்குமே தமிழகத்துக்கு எதிராகத்தான் இருந்தது. காங்கிரஸை அடியோடு வீழ்த்தி அரசியல் புரட்சியை அரங்கேற்றிய தி.மு.க., இன்றைக்கு காங்கிரஸால் சிறுகச் சிறுக வீழ்த்தப்படுகிறது. இனத்துக்குத் துரோகம் செய்தவர்கள் தங்களின் குணத்துக்குக் குட்டு வாங்கும் நேரம் இது. ஆனாலும், நாடக முடிவில் நல்லதொரு தீர்வுக்கு இரு கட்சிகளும் தயாராகி தமிழகக் களத்தை நோக்கி வந்துவிடுவார்கள். கை கோத்துப் போட்டியிடுவார்கள். கை குலுக்கிப் பிரசாரம் செய்வார்கள். கபட நாடகங்களை அரங்கேற்றுவதில் காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்கு முன்னேறிவிட்டது என்பதற்கு ராசா கைது ஓர் உதாரணம்தான்!

அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் ஆ.ராசாவை வளைத்தவர்கள் ஆதர்ஷ் ஊழல் செய்த அசோக் சவானை அப்படியே விட்டுவிட்டார்களே… காமன் வெல்த் ஊழல்வாதிகளின் மேல் கைது நடவடிக்கைகள் பாயவில்லையே… அது என்ன, ஆ.ராசாவுக்கு ஒரு நியாயம்… அசோக் சவானுக்கும் கல்​மாடிக்கும் ஒரு நியாயம்? கேழ்வரகில் நெய் வடியும் கேலிக் கூத்துகளை எல்லாம் நாங்கள் ஏற்கெனவே கண்டிருக்கிறோம் காங்கிரஸ்காரர்களே…

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பெரியவர் மொரார்ஜி தேசாயும் இந்திரா காந்தி அம்மையாரும் போட்டியிட்ட நேரம். இருவரில் பெருந்தலைவர் காமராஜர் யாரைக் கை காட்டுகிறாரோ… அவருக்கே தலைவராகும் தகுதி என்கிற நிலை. ‘இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதில் நீங்களே தலைவராகிவிடலாமே…’ என சிலர் அக்கறையோடு காமராஜரிடம் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்… ‘நான் சொன்னா ஜெயிக்கவைப்பாங்க… நின்னா ஜெயிக்கவைக்க மாட்டாங்க…!’ இந்தியத் தேசியம், தமிழன் என்றால் தள்ளிவைத்துத்தான் பார்க்கும் என்பதை அப்போதே பெருந்தலைவர் சூசகமாக சுட்டிக்காட்டியதை இன்றைய காங்கிரஸ்காரர்கள் மறுக்க முடியுமா?

காவிரியில் நமக்கு இருக்கும் உரிமைகளை வலியுறுத்தி, கர்நாடகாவை எதிர்க்கிற தகுதி தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் எவருக்காவது இருக்கிறதா? முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டி மத்திய அரசின் உச்சியை உலுக்கும் சக்தி தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நியாயத்துக்குத் தலை வணங்கினால் அடுத்த முறையும் கர்நாடகத்தில் வெற்றிபெற முடியாது என்கிற அச்சம்தானே காங்கிரஸை வாய் மூடவைக்கிறது. முல்லை பெரியாறு விவகாரத்தில் மூச்சுவிட்டால், கேரளத்தின் காங்கிரஸ் தலைவர்களே கைகோத்து அந்தக் கட்சிக்கு எதிராகத் திரளுவார்கள் என்பதால்தானே, தமிழகம் திட்டமிட்டுத் தட்டிவைக்கப்படுகிறது?

பக்கத்து மாநிலங்​களுக்குப் பயந்து நீர் ஆதார விவகாரங்களில் அமைதியாக இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், சிங்கள ராணுவத்தால் சுடப்பட்ட மீனவர்களின் வீட்டுக்குக்கூடப் போகாதது ஏன்? சுடப்பட்டும், சுருக்குக் கயிறு வீசப்பட்டும் எங்கள் மீனவர்கள் கொல்லப்படுவதற்கு நியாயம் கேட்டால், நிரூபமா ராவை அனுப்பி ராஜபக்ஷேவிடம் கோரிக்கைவைக்கிறது காங்கிரஸ் கட்சி. கொலைகாரர்களிடம் கோரிக்கைவைக்கிற அளவுக்குப் பலகீனமாக இருக்கிறதா இந்தப் பாரதத் திருநாடு?

நிர்வாக ரீதியிலும் இந்தியாவை ஏழை நாடாகவே நீடிக்கவைத்திருக்கும் புண்ணியமும் காங்கிரஸ்கட்சியையே சாரும். விவசாயிகளின் தற்கொலைகள் இந்த தேசத்தையே உலுக்குகின்றன. பட்டினிக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்ளும் ஒரு விவசாயியைப் பற்றி நடிகர் அமீர்கான் ‘பீப்ளி லைவ்’ என்கிற படத்தை எடுக்கிறார். பாரதப் பிரதமர் மன்மோகன் அவர்கள் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார்… ‘நைஸ் ஃபிலிம்!’ தன் ஆட்சியில் நடக்கும் தாங்க முடியா வேதனையைப் பொட்டில் அடித்தாற்போல் புரியவைத்த அந்தக் கலைஞனிடம் கண்ணீரை உகுத்து இருக்கவேண்டிய பிரதம மந்திரியின் பேச்சைப் பார்த்தீர்களா?

இந்த ஆட்சியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்கிற வேதனை காங்கிரஸ் அரசை வெட்கப்படுத்தவில்லையா? ’40 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் ஒருவேளை உணவுக்குக்கூட வழி இல்லாமல் தவிக்கிறார்கள்’ என்பதை இந்த அரசாங்கமே அறிக்கையாக வெளியிடுகிறதே… நாளைய வல்லரசின் இன்றைய லட்சணமா இது? அதே நேரம் பல்லாயிரம் டன் எடையிலான உணவுப் பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் மண்ணோடு மண்ணாக மட்கிக்கிடக்கிற கோலத்தை எங்கே போய்ச் சொல்வது?

அது குறித்த ஆதங்கத்தை நீதிமன்றம் எழுப்பியபோது, ‘அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது!’ என அறிவிக்கிறார்கள். அய்யா அறிவார்ந்த பெருமக்களே… எலிகளுக்குக் கொடுக்கும் உணவை ஏழைகளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதுதானே உங்களின் மக்கள் நல மகத்துவம்?

பாபர் மசூதி இடிப்புக்கு பாரதிய ஜனதா கட்சிதான் காரணம் என இன்று வரை இடித்துரைக்கிறது காங்​கிரஸ் கட்சி. பாரதிய ஜனதா கட்சியினர் அதனை இடிக்கும்வரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தது இதே காங்கிரஸ் கட்சிதானே… கடப்பாறையும் கம்பியுமாய் வந்தவர்​களைத் தடுக்க சக்தியற்றுப்​போய், டிசம்பர் – 6-ம் தேதியை இந்தியாவின் கறுப்பு தினமாக அறிவிக்கவைத்த அவலத்துக்கு இதே காங்கிரஸ்தானே காரணம்.

மகாத்மா காந்தியடிகளைக் காணச் சென்ற தந்தை பெரியார், ‘அய்யா, நம் தேசியக் கொடியும் காங்கிரஸ் கட்சிக் கொடியும் ஒரே மாதிரி இருக்கிறது. இதனால், காங்கிரஸ் கட்சிதான் நாட்டுக்குச் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது என்கிற குழப்பம் உண்டாகி, மக்கள் அதற்கே வாக்களிப்பார்கள். இது சர்வாதிகார நிலையை உண்டாக்கிவிடும்!’ எனச் சொல்லி இருக்கிறார். அத்தகைய அபாயம் புரிந்து மகாத்மாவும் காங்கிரஸை உடனடியாகக் கலைக்கச் சொல்லி இருக்கிறார். ஆனால், நேரு அதை மறுக்க… பெரியார் உரைத்தபடியே உச்சபட்ச சர்வாதிகார சக்தியாய் இன்றைக்கு காங்கிரஸ் பெருத்து நிற்கிறது.

கைராட்டையைச் சுமந்த காங்கிரஸ் கொடி இன்றைக்கு ‘கை’யையும் சோனியாவின் முகத்தையும் சுமந்து பறக்கிறது. இந்திரா காங்கிரஸை உருவாக்கிய இந்திரா காந்தியின் படம்கூட அந்தக் கட்சியின் கொடியில் இல்லை. அப்பனை மறந்த அற்பர் கூட்டம்தான் இன்றைய காங்கிரஸை வளர்த்து வருகிறது. இந்திரா நேருவாக இருந்தவர் பெரோஸ் காந்தியை மணந்ததால்தான் இந்திரா காந்தி என்றானார். இன்றைக்கு நேரு, இந்திரா, ராஜீவ் உள்ளிட்டவர்களின் நினைவு தினங்களை மறக்காமல் அனுசரிப்பவர்கள் பெரோஸ் காந்தியைப் பற்றி மறந்தும் பேசுவதில்லையே… அது ஏன்?

இன்றைக்கு ராகுல் காந்தியைக்கூட மகாத்மா காந்தியின் பாரம்பரிய வாரிசாக கடைக்கோடி மக்கள் நினைக்கிறார்களே… அந்த நினைப்பை விதைப்பதற்காகவே பெயர் முழுக்க காந்தியை சுமந்து வலம் வருபவர்கள், பெரோஸ் காந்தியின் நினைவிடத்துக்கு செல்லாமல் புறக்கணிப்பது ஏனய்யா?

சில உள்ளீடான கேள்விகளுக்கு காங்கிரஸ் தலைவர்​களிடம் உரிய பதில் இருக்கிறதா? அதெல்லாம் ஏன்… இந்திரா காந்தியின் படத்தையும் சோனியா காந்தியின் படத்தையும் சரிக்குச் சமமாக அச்சிட காங்கிரஸ் தலைவர்களுக்குத் தைரியம் இருக்கிறதா? அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெரிய அளவு தொகை சோனியா காந்தியின் சகோதரிக்கு வழங்கப்பட்டதாக சுப்பிரமணியன் சுவாமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினாரே… அதற்கு இதுவரை மறுப்போ விளக்கமோ வெளிவராதது ஏன்?

நாளைய பிரதமராக தூக்கிவைத்துக் கொண்டாடப்படும் ராகுல் காந்தியிடம் காவிரி விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட… ‘நோ காவிரி… நோ இஷ்யூ…’ எனப் பதில் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்கிறபோது எங்களுக்கும் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. ‘நோ காங்கிரஸ்… நோ ஓட்ஸ்!’

இன்றைக்கு இந்த அளவுக்கு காங்கிரஸை கருவறுக்கத் துடிக்கிறேன் என்றால், அதற்குக் காரணமே தமிழனின் கோபம் எப்படி இருக்கும் என்பதைப் புரிய வைக்கத்தான்! இந்திரா காந்தி இறந்தபோது மூன்று நாட்கள் முழுப் பட்டினியாய் கிடந்து அழுதவன் நான். என் தாத்தா பாட்டியின் சோகம்கூட என்னை அந்த அளவுக்குத் தாக்கியது இல்லை. அத்தகையப் பற்றாளன்தான் இன்றைக்கு அடிபட்ட புலியாகக் கிளம்புகிறேன். என்னை எதிர்கொள்ளும் சக்தி அந்த இறுமாப்புக்காரர்களுக்கு இருக்கிறதா என்பதைத் தேர்தல் களத்தில் பார்ப்போம்!

இன்றைய நெருக்கடிக்காக நிலைகுலைந்​திருக்கும் அய்யா முதல்​வரே… காஞ்சிபுரத்தில் தோற்றுப்​போன​போது அறிஞர் அண்ணா வார்த்தைகளையே உங்களிடம் சொல்கிறேன்…

‘ஒரு நெசவாளியைக் கண்டேன்.அவர், ‘நான் நீண்ட காலம் காங்கிரஸில் இருப்பவன். அதனால், நான் எப்படி உங்களுக்கு மாற்றிப் போட முடியும்?’ எனக் கேட்டார். ‘காங்கிரஸே மாறிவிட்டதே… கொள்கையில், குணத்தில், கண்டவர்களும் சேர்ந்து காங்கிரஸைக் கெடுத்துவிட்டார்களே… கெட்டுப்போன பிறகும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க முடியும் என்கிறீர்களே… அது நியாயமா?’ எனக் கேட்டேன்!’

அதே வார்த்தைகளை நானும் கேட்கிறேன் அய்யா… கெட்டுப்போன பின்பும் ஏனய்யா காங்கிரஸைக் கெட்டியாகப் பிடித்து இருக்கிறீர்கள். கை தூக்கிவிட்ட பெருந்தலைவர் காமராஜரையே கைது செய்யச்சொல்லி ஆணையிட்டார் இந்திரா காந்தி. ‘முடிந்தால், காமராஜர் மீது கை வைத்துப்பார்’ என சபதம் போட்டீர்கள் அன்றைய தமிழக முதல்வராக இருந்த நீங்கள். இந்திரா காந்தியையே இடியாய் குலுக்கிய நீங்கள், சோனியா காந்தியிடம் சுருண்டுபோனது ஏனய்யா?

உங்களின் தலைகீழ் மாற்றத்தைக் காணச்சகிக்​காதவனாகச் சொல்கிறேன்… எதிர்த்தவர்களையே வரலாறு வணங்கும்… உதிர்த்தவர்களை உதிர்த்துவிடும்!

நன்றி

விகடன்

முந்தைய செய்திதிருப்பி அடிப்பேன்! – சீமான் பாகம் – 17
அடுத்த செய்திதிருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 15