நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

67

நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் மற்றும் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் பொதுமக்களைத் தாக்கி வருவது தொடர் கதையாகிவிட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை சிறுத்தை தாக்கியதால் மக்கள் அதிர்ச்சியும், மிகுத்த அச்சமும் அடைந்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்கச்சொல்லி வனத்துறையிடம் பலமுறை புகாரளித்தும் இதுவரை ஆட்கொல்லி சிறுத்தையைப் பிடிக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வீட்டு கதவை திறந்து வெளியே வந்த மூன்று பழங்குடி பெண்களை சிறுத்தை தாக்கியதில் சகோதரி சரிதா பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மேலும், கடந்த 04.01.2024 அன்று வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்த 4 வயது கீர்த்தனா என்ற குழந்தையை சிறுத்தை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று 06.01.2024 ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் 3 வயது குழந்தை நான்சி மாலையில் பாலவாடி சென்று தனது தாயுடன் வரும் போது தாயின் கண் முன்னே சிறுத்தை மீண்டும் கடுமையாகத் தாக்கியதில் குழந்தையின் உயிர் பறிபோயுள்ள செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு பொதுமக்களைத் தாக்கி கொன்றுவரும் ஆட்கொல்லி சிறுத்தையை வனத்துறை மூலம்
விரைந்து பிடித்து கூடலூர் பகுதி மக்களை பாதுகாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1743857051846279351?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் உதவிப்பொருட்கள் வழங்கினார்!
அடுத்த செய்திபாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் நரேன் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்