வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராமக் கால்வாய் திட்டப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க ஏதுவாக, முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

347

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராமக் கால்வாய் திட்டப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க ஏதுவாக, முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்டப் பகுதிகளிலிருக்கும் வேளாண் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் நிறைவேற்றப்பட்ட உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டப்பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததால் அக்கால்வாய்த்திட்டத்தின் பயன்பாடுகள் விவசாயிகளைச் சென்று சேருவதில்லை எனும் செய்திப் பெருங்கவலையைத் தருகிறது.

‘உசிலம்பட்டி 58 கிராமப்பாசனக்கால்வாய்’ எனும் திட்டமானது கடந்த 1996ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள 30 கண்மாய்கள் மற்றும் 5 கசிவுநீர் குட்டைகளைத் தண்ணீர்த் தேக்கப்பகுதிகளாகக் கொண்டு, வைகை அணையிலிருந்து அவற்றிற்குத் தண்ணீரினைப் பெறும் வகையிலும், 110 கிராமங்களிலுள்ள ஏறத்தாழ 6,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையிலும் உருவாக்கப்பட்ட இக்கால்வாய்த்திட்டத்தின் மூலம் விளைநிலங்களின் பாசன வசதி நிறைவு செய்யப்படுவதோடு மட்டுமின்றி, அப்பகுதியிலுள்ள மக்களின் குடிநீர்த்தேவையையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஆனால், திட்டமிட்டப்படி கால்வாய் வெட்டி முடிக்கப்படாதக் காரணத்தினால், கடந்த பல ஆண்டுகளாக உசிலம்பட்டி பகுதி விவசாயிகள், அத்திட்டத்தின் பயனையடைய முடியாது தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டனர். அம்மக்கள் அரசின் கவனத்தை ஈர்க்கப் பல்வேறு கட்டப்போராட்டங்களையும், தொடர்ச்சியான பரப்புரைகளையும் முன்னெடுத்ததன் விளைவாக, கால் நூற்றாண்டு கால இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, கால்வாய் முழுமையாகத் தோண்டி முடிக்கப்பட்டது. இருப்பினும், அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் சரியான முறையான கட்டப்படாததால் சோதனையோட்டம் என்ற பெயரில் மூன்று முறை தண்ணீர் திறந்துவிடப்பட்டும் கால்வாயிலிருந்து கண்மாய்களுக்குத் தண்ணீர் போய்ச்சேரவில்லை. கால்வாய் கரைகள் முறையாகக் கட்டப்படாது பலமில்லாத வகையில் இருந்ததாலேயே வழியிலேயே உடைப்பெடுத்துக் கண்மாய்களுக்கு உரிய தண்ணீர் சென்று சேரவில்லை என்பது தெரிகிறது. அதனை மீண்டும் சரிபார்த்து கட்டிமுடித்த நிலையிலும் உரியப் பருவக்காலத்திற்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டுமெனும் கோரிக்கையை முற்றாகப் புறக்கணித்ததினால் உசிலம்பட்டி 58 கால்வாயைச் சார்ந்திருக்கும் விவசாயிகள் அரசால் பெரும் அல்லலுக்கு ஆட்பட்டனர். மேலும், அணை முழுக்கொள்ளளவை எட்டி நிரம்பினால் மட்டுமே உசிலம்பட்டி 58 கிராமப்பாசனக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் எனக்கூறி நீர்வளத்துறை அதிகாரிகள் கைவிரிப்பதால், உழவுப்பணிகளை மேற்கொள்ள முடியாமல் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த வேளாண் பெருங்குடி மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.
1958 ஆம் ஆண்டுப் பெருந்தலைவர் காமராசரது ஆட்சிக்காலத்தில் வைகை அணை கட்டப்பட்டப்பிறகு, கடந்த 62 ஆண்டுகளில் 26 முறை மட்டுமே அணை நிரம்பியுள்ளதால், அணை நிரம்பும்போதுதான் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் கூறுவது உசிலம்பட்டி விவசாயிகளைத் திட்டமிட்டு ஏமாற்றும் கொடுஞ்செயலாகும். வைகை அணை தனது முழுக்கொள்ளளவை எட்ட வேண்டுமானால் முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத்தவிர வேறு வழியில்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினால் மட்டும்தான் வைகை அணைக்குத் தேவையான நீர்த்தேவையை நிறைவுசெய்ய முடியும் என்பதே புறச்சூழலாகும். 2012ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தீர்ப்பின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக்கொண்டு, 142 அடியாக நிலைநிறுத்தப்பட்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதே இச்சிக்கலுக்கான நிரந்தரத்தீர்வாக அமையும் என்பதே உண்மை நிலையாகும். அவ்வாறு உயர்த்தும்பட்சத்தில், தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்குத் தேவையான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பாசனத்திற்கும், நீர்த்தேவைக்கும் பயன்படக்கூடியதாக இருக்கும்.

ஆகவே, முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி, வைகை அணையின் முழுக்கொள்ளளவு நீர்ப்பிடிப்பை நிறைவு செய்ய வேண்டுமெனவும், உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டப்பாசனத்திற்கு உரியப் பருவக்காலத்தில் ஆண்டுதோறும் தண்ணீர் திறக்க ஏதுவாக நிரந்தர அரசாணை வெளியிட வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநாகர்கோவில் தொகுதி -அங்கன்வாடி மையத்தை புதுப்பித்தல்
அடுத்த செய்திபொள்ளாச்சி தொகுதி உறுப்பினர் சந்திப்பு கூட்டம்