நீர்நிலைகளை நாசப்படுத்தும் பெருந்துறை தொழிற்பேட்டை ( SIPCOT) கழிவுநீரினைத் தடுத்து, சுத்திகரித்து, பாதுகாப்பாக வெளியேற்ற தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

132

நீர்நிலைகளை நாசப்படுத்தும் பெருந்துறை தொழிற்பேட்டை (SIPCOT) கழிவுநீரினைத் தடுத்து, சுத்திகரித்து, பாதுகாப்பாக வெளியேற்ற தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான பெருந்துறை தொழிற்பேட்டையிலிருந்து வெளியேறும் அதிகப்படியான சாயக் கழிவுநீரால் அதன் சுற்றுப்புற கிராமங்களிலுள்ள நிலம் மற்றும் நீர் மாசடைந்துள்ளதனால் மக்கள் பல்வேறு கொடும் நோய்களுக்கு ஆட்பட்டு வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

பெருந்துறை தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றும் சாயக்கழிவுநீரினை முறையாக சுத்திகரிக்காமலும், பாதுகாப்பாக வெளியேற்றாமலும் திறந்தவெளியில் நீர்நிலைகளுடன் கலக்கவிடுவதை வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

பெருந்துறை தொழிற்பேட்டைக் கழிவுகளால் சுற்றுப்புற கிராமங்களில் வேளாண்மை செய்ய முடியாத அளவிற்கு நிலங்களும், மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு நீர்நிலைகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்கக்கோரி பெருந்துறை மக்கள் தொடர்ந்து பல்வேறு அறப்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

பெருந்துறை தொழிற்பேட்டை தொடங்கப்பட்ட 2000ஆம் ஆண்டிலிருந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்துவரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை மாறி மாறி ஆண்ட இரு திராவிடக் கட்சிகளும் கண்டுகொள்ளாமல் காலங்கடத்தியதன் விளைவாக தற்போது மக்கள் வாழத்தகுதியற்ற நிலமாக பெருந்துறை பகுதி மாறிவருகிறது. அந்த அளவிற்கு தொழிற்பேட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களான பாலதொழுவு, கூத்தம்பாளையம், வாய்ப்பாடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்நிலைகள் மட்டுமின்றி நிலத்தடி நீரும் சாயக்கழிவுகளால் முற்றாக மாசடைந்துள்ளது. குறிப்பாக அத்திக்கடவு – அவினாசி திட்டத்தால் பயன்பெறக்கூடிய மிகமுக்கிய நீர்சேமிப்புப் பகுதியான 477 ஏக்கரில் அமைந்துள்ள பாலதொழுவு குளம் தற்போது சாயக்கழிவுகள் நிரம்பிய கிடங்காக காட்சியளிப்பதுதான் மிகப்பெரிய கொடுமையாகும்.

ஆகவே, நிலம், நீர்நிலைகளை நாசப்படுத்தி, சுற்றுச்சூழலைச் சீர்கெடுப்பதோடு மக்களுக்கு பல்வேறு கொடுநோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ள பெருந்துறை தொழிற்பேட்டையிலிருந்து வெளியேறும் சாயக்கழிவுநீரானது நீர்நிலைகளுடன் கலப்பதைத் தடுத்து நிறுத்தவதோடு, அவற்றை முறையாக சுத்திகரித்து பாதுகாப்பாக வெளியேற்றவும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும், சாயக்கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவதையும், நிலம் மற்றும் நீர்நிலைகள் மாசுபடுத்தப்படாமல் இருப்பதையும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டுமெனவும், நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்திநீண்ட நெடுங்காலமாகச் சிறையில் வாடும் இசுலாமியச் சிறைவாசிகளை, அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!