காவல் நிலையத்திற்குள் நுழைந்து பெண் காவலரைத் தாக்கி, சட்டம்-ஒழுங்கை சீரழிக்கும் திமுகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

184

திமுக நாடாளுமன்ற உறுப்பினர், அன்பு அண்ணன் திருச்சி சிவா அவர்களின் வீட்டிற்குள் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் பட்டப்பகலில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ள நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. கையில் ஆயுதங்களுடன் தாக்க வந்தவர்களைத் தடுக்காமல் அங்கிருந்த காவல்துறையினர் வேடிக்கை பார்த்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

மேலும், அண்ணன் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்கியதோடு மட்டுமின்றி, ஆளுங்கட்சியினர் என்ற அதிகாரத் திமிரோடு அங்குப் பணியிலிருந்த பெண் காவலரையும் திமுகவினர் கடுமையாகத் தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழ்நாட்டில் எந்த அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.

சொந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கும், காவல்துறையினருக்குமே இந்த நிலை என்றால் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியின் கீழ் பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? காவல் நிலையத்திற்குள் நுழைந்து பெண் காவலரைத் தாக்கிய திமுகவினரை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி