திருச்சி, சிறப்பு முகாமில் ஆறு நாட்களுக்கும் மேலாக உண்ணாநிலைப்போராட்டத்தில் இராபர்ட் பயஸ்! – தமிழ்நாடு அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

98

திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள தம்பி இராபர்ட் பயஸ் அவர்கள் ஆறு நாட்களுக்கும் மேலாக உண்ணாநிலைப்போராட்டத்தை முன்னெடுத்து வரும் செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். சிறப்பு முகாம் எனும் சித்ரவதைக்கூடத்திற்குள் கொடுக்கப்பட்டு வரும் தொடர் நெருக்கடிகள் தாளாது, தமிழக முதல்வருக்கு இருமுறை கடிதமெழுதியும் எவ்விதத் தீர்வும் கிடைக்காத நிலையிலேயே இத்தகையப் போராட்டத்தை அவர் மேற்கொள்கிறார் என்பது கொடுந்துயரமானதாகும். ஏற்கனவே, உடல் நலிவுற்று இருக்கும் தம்பி இராபர்ட் பயஸ் அவர்கள் இப்போராட்டத்தால் மேலும் பலவீனமடைவார் என்பது பெரும் கவலையைத் தருகிறது.

எழுவரது விடுதலைக்குத் தாங்கள்தான் துணைநின்றதாகக் கூறி, தற்பெருமை பேசும் திமுக அரசுக்கு உண்மையிலேயே அவர்களது நலனில் அக்கறை இருந்தால், சிறப்பு முகாமுக்குள் வாடி வரும் தம்பி இராபர்ட் பயஸ் உள்ளிட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் கெடுபிடிகளைத் தளர்த்த வேண்டுமெனவும், அவர்கள் விரும்புகிற நாட்டுக்குச் செல்வதற்குரிய சட்டரீதியான ஏற்பாடுகளை விரைந்து செய்ய முன்வர வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி