சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! – சீமான் பெருமிதம்

140

தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், அவர்கள் சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பெருந்தகை சமூகநீதிப்போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்கள்.
தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் எழுதிய தன் வரலாறு புத்தகத்தில், லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் பங்கெடுக்கச் சென்றபோது, இங்கிலாந்து ராணி தன்னைச் சரிசமமாக அமர்த்தி உணவு பரிமாறினார்கள் என்பதை நெகிழ்வுடன் பதிவு செய்திருக்கிறார். இது போன்ற நிகழ்வு எங்கள் மண்ணில் நடக்காது என்று ராணியிடம் தான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். நானூறு பேர் படித்த இடத்தில் தான் மட்டும்தான் ஆதித்தமிழ்க்குடி என்றும், விளையாட்டில் ஆர்வம் இருந்தும், யாரும் விளையாட தன்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள், அதனால் திடலின் ஓரத்தில் நின்று மற்றவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பேன் என்று நமது தாத்தா கண்ணீருடன் பதிவு செய்துள்ள வார்த்தைகளில் உள்ள வலியை ஒரு நிமிடம் நாம் உள்வாங்கி, தமிழர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒன்றுபட்ட தமிழ்ச்சமுதாயமாகத் திகழந்திட அவரது பேரப்பிள்ளைகளாகிய நாம் அயராது பாடுபட வேண்டும்.
நமது தாத்தா நமக்குக் கற்பித்ததில் மிக முக்கியமான ஒன்று, “எந்தச் சொல் உன்மீது இழிச்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்பதுதான்.
“ஆரிய வர்ணாசிரம சனாதன கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்றுக் கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்பது அவர் நமக்குக் கற்பித்த மற்றுமொரு ஆழமான கோட்பாடாகும். அவர் கூறிய மாற்றுப்பாதையை உருவாக்கிக்கொண்டு அதன் வழியே பயணிக்க வேண்டும் என்ற உறுதியோடுதான், தமிழ்த்தேசிய அரசியல் என்ற தன்னிகரில்லா தத்துவத் தடம்பற்றி, நாம் தமிழர் கட்சி என்ற புரட்சிகர அரசியல் படையைக் கட்டமைத்து, இனவிடுதலை என்ற உயர்ந்த இலட்சிய இலக்கினை நோக்கி நாம் பயணப்பட்டு வருகிறோம்.
தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவு நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவரது உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடு, பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நமதுபுகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!நாம் தமிழர்!

https://x.com/Seeman4TN/status/1703719759722999948?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
அடுத்த செய்திஉற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்து என்னை நேசித்து நிற்கும் உங்கள் அன்பினை எண்ணி உள்ளம் நெகிழ்கிறேன்! – நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் வாழ்த்து