தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றம் – அரசு மருத்துவமனைகளில் தொடரும் அலட்சியம்..! – சீமான் கண்டனம்

232

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இராமநாதபுரம்  மாவட்டத்தைச்  சேர்ந்த தஸ்தகீர்-  அஜிசா இணையரின் ஒன்றரை வயது அன்புமகன் முகமது மையூருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றப்பட்டுள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தாட்ட வீராங்கனை அன்பு மகள் பிரியா, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வலது காலில் செய்யப்பட்ட தவறான அறுவை சிகிச்சை காரணமாக உயிரிழந்த பெருந்துயரத்தின் வடு மறைவதற்குள் தற்போது அன்புமகன் மையூரின் கை தவறான சிகிச்சையால் அகற்றப்பட்டுள்ளது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும்.

மகள் பிரியா உயிரிழந்தபோதே அரசு மருத்துவமனைகள் ஏழை எளிய மக்களின் உயிரோடும், உடல் நலத்தோடும் அலட்சியமாக செயல்படக்கூடாது என்று கண்டித்திருந்தேன். மேலும், திமுக அரசும், அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்யத் தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியிருந்தேன். ஆனால் திமுக அதனை செய்யத்தவறிய காரணத்திலேயே தற்போது மேலும் ஓர் குழந்தையின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆகவே, மகள் பிரியா மற்றும் மகன் மயூருக்கு நேர்ந்தது போன்று, இனியும் அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் மற்றும் தவறான மருத்துவத்தினால் யாரும் பாதிக்கப்படாதவாறு தடுக்க உரிய அறிவுறுத்தலையும், வழிகாட்டலையும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மகன் மயூருக்கு தவறான அறுவை சிகிச்சையளித்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மகன் மயூரின் வலது கையைச் சரிசெய்யத் தேவையான உயர்தர நவீன மருத்துவச் சிகிச்சைக்கான முழு செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கவேண்டும் எனவும், அவரது குடும்பத்தினருக்கு துயர் துடைப்பு நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கவேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வழியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇதுதான் திமுக கட்டிக்காத்த சமூகநீதியா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதேனி மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்தாய்வு