அரியானா மாநிலத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வன்முறையாளர்களை சட்டத்தின் துணையோடு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

156

அரியானா மாநிலத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வன்முறையாளர்களை சட்டத்தின் துணையோடு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

மணிப்பூர் மாநிலத்தில் நடந்தேறி வரும் வன்முறைகளும், கலவரங்களும் நாட்டையே உலுக்கி வரும் நிலையில், அரியானா மாநிலத்தின் ஒரு பகுதியில் மதக்கலவரம் வெடித்து, அது மற்ற பகுதிகளுக்கும் பரவிய செய்தியானது பெருங்கவலையைத் தருகிறது. விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா’ என்கிற பெயரில் நடந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டு, அது மதக்கலவரமாக உருமாறி, ஐந்து உயிர்களைப் பலியெடுத்திருப்பதென்பது தற்செயலானதல்ல; ஓராண்டுக்குள் பாராளுமன்றத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் வடமாநிலங்களில் நிகழ்ந்தேறும் தொடர் வன்முறைகளும், கலவரங்களும் தேர்தலுக்காக சங் பரிவார் அமைப்புகள் நிகழ்த்தும் பிரித்தாளும் சூழ்ச்சியின் முன்னோட்டமேயாகும். நாட்டு மக்களை மதத்தால் துண்டாடும் இத்தகையப் போக்குகளும், வன்முறைச்செயல்களும், மதமோதல்களும் கடும் கண்டனத்திற்குரியவையாகும்.

அரியானா மாநிலத்தின் குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பேரணி நூ மாவட்டத்தின் கேட்லா மோட் பகுதிக்குள் நுழைந்தபோது அப்பேரணியினருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் ஏற்பட்ட மோதலே இக்கலவரத்திற்கு வித்திட்டிருக்கிறது. நூ பகுதியில் தொடங்கிய கலவரம் அருகாமையிலுள்ள குர்கான், ஃபரிதாபாத், பல்வால் ஆகிய மாவட்டங்களுக்கும் பரவி, மாநிலம் முழுமைக்கும் அசாதாரணச் சூழலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பது அம்மாநில அரசின் படுதோல்வியையே காட்டுகிறது. பசுவதை செய்ததாகக் கூறிய இரு இளைஞர்களை எரித்துக்கொன்ற கொலைவழக்கு உள்ளிட்டப் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பஜ்ரங் தள உறுப்பினரான மோனு மனேசர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டக் காணொளியே இவ்வளவு பெரிய வன்முறைக்கும், உயிரிழப்புகளுக்கும் மூலக்காரணமாக அமைந்திருக்கிறதெனும்போது, இது சங் பரிவார் அமைப்புகளால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொடும் நிகழ்வென்பது உறுதியாகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், நாடு முழுமைக்கும் ஆங்காங்கே நடந்தேறும் மதமோதல்களும், கலவரங்களும் உலகரங்கில் இந்தியாவின் நன்மதிப்பைக் குலைத்து, இந்நாட்டுக் குடிமக்களை வெட்கித் தலைகுனியச் செய்கின்றன. உள்நாட்டில் நிலவும் இத்தகையக் கலவரச்சூழலை கட்டுப்படுத்தாது, வெளிநாடுகளுக்குச் சென்று பிரதமர் நரேந்திரமோடி சனநாயகம் பற்றிப் பேசுவதெல்லாம் வெட்கக்கேடானது.

ஆகவே, மணிப்பூர், அரியானா என வடமாநிலங்களிலுள்ள கலவரச் சூழலைக் கட்டுக்குள் கொண்டு வந்து, அமைதி திரும்பவும், சமூக நல்லிணக்கம் நிலவவும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அரியானாவில் மதமோதல்களை உருவாக்கும் வன்முறையாளர்களை சட்டத்தின் துணையோடு இரும்புக்கரம் கொண்டு அம்மாநில அரசு ஒடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கனைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை
அடுத்த செய்திசென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!