தஞ்சாவூர் வடசேரியில் புதிதாக நிலக்கரி ஆய்வு செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பது வேளாண் குடிகள் மீது தொடுக்கப்படும் அரச பயங்கரவாதம்! – சீமான் கண்டனம்

66

தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் புதிதாக நிலக்கரி ஆய்வு செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பது வேளாண் குடிகள் மீது தொடுக்கப்படும் அரச பயங்கரவாதமாகும். குறிப்பாகப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தஞ்சாவூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டப் பின்னரும் இந்த அவல நிலை தொடர்வது ஒன்றிய அரசின் தமிழர் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.

மன்னார்குடிக்கு அருகே இருக்கக்கூடிய நிலக்கரி வளங்களை ஆய்வு செய்யும் வகையில் அருகே உள்ள பகுதிக்குட்பட்ட கிராமங்களான வடசேரி, மகாதேவப்பட்டினம், கீழ்குறிச்சி ஆகிய இடங்களின் வேளாண் நிலங்களில் குழாய் அமைத்துத் துளையிடும் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன.

மேற்சொன்ன கிராமங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் வருவதாலும், தஞ்சாவூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசினால் அறிவிக்கப்பட்டதாலும், வேளாண்மையை பாதிக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தினை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தின் அட்டவணை 2-ல் தடை செய்யப்பட்டத் திட்டங்களில் “இதர ஹைட்ரோகார்பன்” என்றிருக்கும் இடத்தில் நிலக்கரியும் அடங்கும் என்பதை உறுதிபட எடுத்துரைத்து இத்திட்டம் நடைபெறுவதனை தமிழ்நாடு அரசுத் தடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேலும், ஒன்றிய அரசு இத்திட்டத்தினை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும். தமிழ்நாடு அரசு ஆறுதல் காரணங்களைக் கூறிக் கொண்டிருக்காமல் ஒன்றிய அரசினை நேரடியாக இத்திட்டத்தில் எதிர்க்க வேண்டும். மீறி இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டால் என் தலைமையில் நாம் தமிழர் கட்சிப் பெரும் அளவிலான எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தும் என்றும், எவ்வகையிலும் இத்திட்டம் நடைபெறாமல் தடுப்போம் என்றும் எச்சரிக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: கல்வி வள்ளல் பா.கா.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்க நிகழ்வு – தலைமை அலுவலகம்
அடுத்த செய்திமகாவீரர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக, தமிழர்கள் இறைச்சி உண்ண தடைவிதிப்பதா? – சீமான் கண்டனம்