திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்த தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

114

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்த தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

 

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விஜயநாராயணம் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய குளத்தினை கடந்த 20.06.2023 அன்று நேரில் சென்று பார்வையிட்டேன். 16ம் நூற்றாண்டில் தென்காசியை ஆண்ட சீவலமாற பாண்டியனால் வெட்டப்பட்டதாகக் கூறப்படும் இக்குளம் திருநெல்வேலி மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்நிலையாகும்.

 

 

1500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இப்பெரியகுளம் ஏறத்தாழ 4500 குறுக்கம் (ஏக்கர்) விளை நிலங்களுக்குப் பாசன வசதியைத் தருவதோடு, விஜயநாராயணம், சிவந்தியாபுரம், சங்கனாங்குளம், ஆண்டாள்குளம், பிரியம்மாள்புரம், படப்பார்குளம், பெரியநாடார் குடியிருப்பு, சவளைக்காரன்குளம், விஜயஅச்சம்பாடு உள்ளிட்ட திருச்செந்தூர் வரையிலான 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையையும் நிறைவு செய்கிறது. அதுமட்டுமின்றி, அருகிலுள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தரும் 200க்கும் மேற்பட்ட பறவையினங்களின் உணவு, வசிப்பிடம், குடிநீர், உள்ளிட்டவைகளுக்கான முக்கிய *ஆதாரமாகவும்* விஜயநாராயணம் கிராமத்தில் உள்ள பெரிய குளம் திகழ்கிறது .

 

இத்தகைய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயநாராயணம் குளம், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் கடந்த 40 ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாததால் தற்போது குளம் முற்றாகச் சிதைந்து தூர்ந்த நிலையில் காணப்படுவது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இதனால் பருவகாலங்களில் பொழியும் மழைநீரை முழுவதுமாகச் சேமிக்க முடியாத அவலமான சூழல் நிலவுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, மிகப்பெரிய குடிநீர் பஞ்சத்தில் அம்மக்கள் தவித்து வருகின்றனர் என்பது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

 

விஜயநாராயணம் பெரிய குளத்தினைத் தூர்வாரி முறையாகக் குடிமராமத்துப் பணிகள் செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியர் முதல், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவிலும் விஜயநாராயணம் கிராம மக்கள் சார்பாக பலமுறை கோரிக்கை மனு அளித்தும், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு அறப்போராட்டங்களை முன்னெடுத்தும் தமிழ்நாடு அரசு இதுவரை எவ்வித முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

 

இரு திராவிடக் கட்சிகளின் அரசுகளும் புதிதாக ஏரி, குளங்களை வெட்டி பாசன வசதியைப் பெருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டாலும், ஏற்கனவே பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் முன்னோர்களால் அமைக்கப்பட்ட நீர்நிலைகளையாவது பராமரித்துப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனைகூடச் செய்யாது அரசே *ஏரி*, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து அழிப்பது, பராமரிக்காமல் சிதைப்பதென்பது வருங்கால தமிழிளந் தலைமுறையினருக்கு செய்கின்ற பச்சைதுரோகமாகும்.

 

ஆகவே, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விஜயநாராயணம் பெரிய குளத்தை உடனடியாக தூர்வாரி ஆழப்படுத்தவும், குளத்தின் கரைகளைப் பலப்படுத்தல், மடை பகுதிகளைச் சீரமைத்தல், குளக்கரைகளின் உள்பக்கம் தடுப்புச்சுவர் கட்டுதல், அளக்கல் தடுப்பு கட்டுதல் ஆகிய மராமத்து பணிகளை விரைந்து நிறைவேற்றி அப்பகுதி மக்களின் பாசன மற்றும் குடிநீர்த் தேவையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்திவிருதுநகர், ராஜபாளையம், சிவகாசி மற்றும் திருவில்லிப்புத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகோவை வடக்கு தொகுதி நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கலந்தாய்வு