வேண்டும் விடுதலை; விரும்புவோம் விடுதலை! – இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து

199

வேண்டும் விடுதலை; விரும்புவோம் விடுதலை!

’மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை விடுதலை’ என்கிறான் புரட்சியாளன் பகத்சிங். அவ்வகையில் ஒடுக்கப்படும் ஒவ்வொரு தேசிய இனத்தின் பெருங்கனவே விடுதலை.

என் அன்புத் தம்பி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் விடுதலை திரைப்படம் கண்டேன். முழுவதும் கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு திரைக்கதை இது எனக் கடந்துவிட முடியாதபடிப் பன்னெடுங்காலமாகத் தமிழ்த்தேசிய இனம் தூக்கிச் சுமக்கிற கனத்த உணர்வே ‘விடுதலை’ திரைப்படமாக உருவாகியிருப்பதாக உணர்கிறேன்.

இந்தத் தலைமுறையின் தலைசிறந்த படைப்பாளி தான் என்பதை விடுதலையின் வழியே இன்னொரு முறை நிறுவியிருக்கிறார் அன்புத் தம்பி இயக்குநர் வெற்றிமாறன். வெற்றியின் இயக்கத்தில் ஒட்டுமொத்த திரைப்படக் குழுவினரும் அர்ப்பணிப்போடு தங்களின் கூட்டுழைப்பைச் செலுத்தி தத்தமது பங்களிப்பை நிறைவாகச் செய்திருப்பதால் காட்சிக்கு காட்சி வியப்பில் ஆழ்த்துகிறது விடுதலை. தொடங்கியது முதல் இடைவெட்டு இன்றி எட்டு நிமிடங்களுக்கு ஒரே பதிவாகச் செல்லும் படத்தின் முதல் காட்சியே படக்குழுவினரின் கூட்டுழைப்பிற்கும், செய்நேர்த்திக்குமான சான்று. திரைப்படத்தின் தொடக்கக் காட்சியான அது, ‘ஓர் உலகத்தரமான திரைப்படத்தை நாம் கண்டுகொண்டிருக்கிறோம்’ என்ற மனநிலைக்கு நம்மை அணியமாக்கி விடுகிறது.

இயக்குநரின் நோக்கமும் தேவையும் அறிந்து, காட்சிகள், சூழல்களின் இயல்பிலேயே கதை மாந்தர்களோடும் அவர்களின் உள்ளார்ந்த உணர்வுகளோடும் நம்மை நடைபோடவும் பதறி ஓடவும் வைக்கிறது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்களின் நேர்த்தியான ஒளிப்பதிவு.

அதுபோலவே, கதை மாந்தர் மற்றும் காட்சிகளின் உணர்ச்சி நிலைகளைத் தேவையான இடங்களில் அடிக்கோடிட்டும் மற்ற இடங்களில் மௌனித்தும் எனத் தன் மேதமைமிக்கப் பின்னணி இசையாலும் பாடல்களாலும் சிறப்பிக்கிறார் ஐயா இளையராஜா அவர்கள். அதிலும் எனதுயிர் ஐயா மகன் சுகாவின் வரிகளில் ‘உன்னோடு நடந்தா’ பாடல் மனதை உருக்குகிறது.

மோதல், துரத்தல், வளைத்தல், பிடித்தல், என நம்மை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளைத் திறம்பட உருவாக்க உழைத்திருக்கிறார்கள், விரைவுச் செயல்காட்சி வல்லுநர்களான பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண்ட் சிவா குழுவினர்.

கதை நிகழும் எண்பதுகளின் காலத்தை உண்மைக்கு நெருக்கமாகத் துளியும் மிகையின்றிக் காட்சிப்படுத்துகிறது, ஜாக்கியின் கலை நுட்பமும், நடிகர்களுக்கான இயல்பான ஆடைத் தெரிவுகளும். நடிகர்களை மறைத்து கதை மாந்தரைக் கண்முன் நிறுத்துகிறது இயல்பு மீறாத ஒப்பனை.

இதுவரை நகைச்சுவை நடிகனாக மட்டும் அறியப்பட்ட அன்புத் தம்பி சூரியின் கலை வாழ்வில் விடுதலை ஒரு புதிய படிநிலைப் பாய்ச்சல் என்றே சொல்வேன். காவலர் குமரேசன் பாத்திரத்தில் அன்பு, காதல், ஏக்கம், கோபம், தவிப்பு, பதற்றம் எனப் பலதரப்பட்ட உணர்ச்சிகளை செவ்வனே வெளிப்படுத்தி, தன்னிலிருந்த நடிப்பாற்றலின் இன்னொரு பரிமாணத்தை முழுமையாக மெய்ப்பித்திருக்கிறான் தம்பி சூரி.

படத்தின் முதல் பாகமான இதில், குறைந்தளவு காட்சிகளில் தோன்றினாலும் வாத்தியார் பெருமாளாகக் கண்களில் கனலேந்தி வரும் தம்பி விஜய் சேதுபதி, தன் உரையாடல்களாலும் உடல்மொழிகளாலும் உள்ளம் நிறைகிறார்.

போராளிக் குடும்பத்தின் வழிவந்தவள் என்றாலும் ”எவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது” என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் புகழ்பெற்ற சொற்றொடர் போலப் படைக்கப்பட்ட தமிழரசி கதாப்பாத்திரத்திற்குத் தன் கருணை தாங்கிய விழிகளாலும், ஆற்றாமையும் இயலாமையும் வெளிப்படும் நுட்பமான முகப்பாவனைகளாலும் உயிரூட்டியிருக்கிறார் தங்கை பவானி ஸ்ரீ.

ஏனைய இன்றியமையாக் கதை மாந்தர்களாக வரும், மாமா இளவரசு, சகோதரர்கள் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் ராஜிவ் மேனன், சேத்தன், அன்புத் தம்பி இயக்குநர் தமிழ் ஆகியோர் வெளிப்படுத்தும் இயல்பான நடிப்பாற்றல், காட்சிகளின் நம்பகத் தன்மையைக் கூட்டிப் படத்தோடு நம்மை ஒன்றச் செய்கின்றன.

இத்தனை கலைஞர்களையும் தொழில்நுட்பக் குழுவினரையும் ஒருங்கிணைத்து, அடர் காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துவதன் அத்தனை இடர்களையும் அறிவேன். சவால்களுக்கிடையே படைப்பின் நோக்கம் நிறைவேற அர்ப்பணிப்போடு உழைத்த, அன்புத் தம்பி எல்ரெட் குமார் அவர்களின் நிறுவனத்தைச் சேர்ந்த உறவுகளுக்கும், இத்திரைப்படத்தில் படப்பிடிப்பிற்கு இடம் பார்ப்பது தொடங்கி படம் வெளியாகும் நாள் வரை அனைத்து வேலைகளிலும் தம்பி வெற்றிமாறனுக்கு துணை நின்ற இப்படத்தின் இணை இயக்குநர் என் உயிர் இளவல் ஜெகதீச பாண்டியன் அவர்களுக்கும் அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், படக்குழுவினருக்கும் பேரன்பின் வாழ்த்துகள், மனம் நிறைந்த பாராட்டுகள்!

தமிழ், தமிழர் என்றாலே அதிகாரத்தில் உள்ளோருக்கு ஒவ்வாமை ஏற்படும் காலச்சூழலில் தன் வளங்களைக் காக்கப் போராடும் ’தமிழர் மக்கள் படை’ எனும் போராளி அமைப்பைக் குறியீடாக்கி, வெகுமக்களிடையே பல்லாயிரம் ஆண்டு பண்பாட்டுச் செழுமை கொண்ட தமிழர் இறையாண்மையின் தேவையை வலியுறுத்துகிறது விடுதலை எனும் இந்தப் பெருங்காவியம்.

தொலைநோக்குப் பார்வையின்றி அதிகாரத்திற்காக எதையும் செய்யும் அரசும் அதன்கீழ் வரும் அரசு எந்திரமும் இதுநாள் வரை மண்ணின் மக்களுக்காக நின்றதில்லை என்பதையும்; அவை பெருமுதலாளிகளின் கூட்டினைவு நிறுவனங்களுக்கான தரகர்களாகவே இருந்துவருகின்றன என்பதையும் உள்ளீடாக வைத்து விளங்கச் சொல்லிவிட்டது விடுதலை. ஆளும் அரசுகளின் பாவைகளாக விளங்கும் சில பத்திரிகைகள், தீவிரவாதிகள் என யாரையெல்லாம் எதற்காகவெல்லாம் வெகுமக்கள் முன் இதுநாள் வரை உள்நோக்கத்தோடு கட்டமைத்து வந்திருக்கின்றன என்ற தெளிவையும் விடுதலை அதன் ஓட்டத்தில் எடுத்துக் காட்டத் தவறவில்லை.

வளக்கொள்ளைகளுக்கும், சுரண்டல்களுக்கும் ஆளாகித் தமிழர்கள் தங்கள் தாய்நிலத்தில் உரிமைகளைப் படிப்படியாக இழந்து போராடிக்கொண்டிருக்கிற இக்காலத்தில், விடுதலையின் தேவை உணர்ந்து தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் அன்புத் தம்பி எல்ரெட் குமார். குறைந்தபட்ச வணிக உறுதிகொண்ட வழமையான கதைகளை நாடுவோர் நடுவில் விடுதலையின் கதைக்களம் மற்றும் இயக்குநர் மீது முழு நம்பிக்கை வைத்ததோடு, இறுதிவரை சமரசங்களுக்கு இடமளிக்காத நிறைவான படைப்பாகத் தயாரித்துப் பிறருக்கு எடுத்துக்காட்டாகிவிட்ட அன்புத் தம்பி எல்ரெட் குமார் அவர்களை உளமார வாழ்த்திப் பாராட்டுவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

கலை மக்களுக்கானது என்பதே நம் கோட்பாடு. அதன்படி மக்களுக்கான அரசியலை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடும் கலை வடிவங்களுக்கு என்றும் உண்டு. அரசியலை எப்படி வாழ்விலிருந்து பிரிக்க முடியாதோ, அப்படித்தான் அது காலந்தோறும் கலைகளிலிருந்தும் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

தமிழர்களான நமது அரசியலைச் சரியாக உள்வாங்கி, அதை வெகுமக்கள் ஊடகமானத் திரைப்படம் வழியே நேர்த்தியாக வெளிப்படுத்தி, சமூகப் பொறுப்புணர்வு கொண்ட கலைஞனாகத் திகழும் தம்பி வெற்றிமாறனின் மகுடத்தில் விடுதலை மற்றுமொரு வைரக் கல் என்பேன். மண்ணின் சாயலும் அரசியலும் தப்பாத விடுதலை என்ற இந்தப் பெருங்காவியத்தால் உலக அரங்கில் தமிழ்த் திரைப்படங்களுக்கான நன்மதிப்பை உயர்த்தியிருக்கும் என் அன்புத் தம்பி இயக்குநர் வெற்றிமாறனுக்குப் பேரன்பின் முத்தங்கள்!

விடுதலை, பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்து, உலகத் திரைப்பட விழாக்களில் உயர்ந்த அங்கீகாரங்களைப் பெற மனதார வாழ்த்துகிறேன். இத்திரைப்படத்தில் பங்கேற்றுப் பணியாற்றிய அனைவருக்கும் மீண்டும் என் உளமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

வேண்டும் விடுதலை; விரும்புவோம் விடுதலை!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகீழ்ப்பென்னாத்தூர் தொகுதியின் இளைஞர் பாசறை துணைச்செயலாளர் அருண் (எ) ஜெயச்சந்திரன் மறைவு! – குடும்பத்தினருக்கு சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி
அடுத்த செய்திஇராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் நடைபெறும் மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்