கடும் மழையின் காரணமாக பயிர்ச்சேதத்திற்கு ஆட்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

155

கடும் மழையின் காரணமாக பயிர்ச்சேதத்திற்கு ஆட்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழகத்தில் அண்மைக்காலமாக பெய்தத் தொடர் மழையின் காரணமாக பல இலட்சக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்கள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ள செய்தியறிந்து சொல்லொணாத் துயரமடைந்தேன். அதிலும் குறிப்பாக, காவிரிப்படுகை விவசாயிகளின் விளைநிலங்கள் முழுவதும் வெள்ள நீரால் மூழ்கியிருப்பது பெரும் கலக்கத்தை அவ்விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. காலங்காலமாக நிகழ்ந்தேறும் காவிரி நதிநீர் உரிமை மறுப்பாலும், மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் எப்போதும் இழப்பைச் சந்தித்து நிற்கும் விவசாயிகள் தாக்குப்பிடித்து வேளாண்மை செய்வதே பெரும்பாடாகியுள்ள நிலையில் கனமழை காரணமாக காவிரிப்படுகை விவசாயிகளின் விளைபொருட்கள் ஒட்டுமொத்தமாக வீணாகியிருப்பது அம்மக்களைக் கண்ணீர் கடலுக்குள் ஆழ்த்தியிருக்கிறது. வறட்சி, புயல், வெள்ளம் எனத் தொடர்ச்சியான இயற்கைப் பேரிடர்களாலும், அரசுகளின் தவறானப் பொருளாதாரக் கொள்கைகளாலும், முடிவுகளாலும் ஒவ்வொரு ஆண்டும் பெரும் இழப்புகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி நிற்கும் தமிழக விவசாயிகளின் தலையில் மேலும் ஒரு பேரிடியாக தற்போதைய வெள்ளச்சேதம் அமைந்துள்ளது. இத்தகைய துயர்மிகு சூழலிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு இதுவரை எவ்வித முறையான அறிவிப்பையும் வெளியிடாது கள்ளமௌனம் சாதித்து வருவது வன்மையானக் கண்டனத்துக்குரியது.

காவிரிப்படுகை மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா, தாளடி போன்ற நெற்பயிர்கள் நீரில் மூழ்கி தலைசாய்ந்தும், நெல்மணிகள் அழுகியும், முளைப்புக் கட்டியும் வீணாகியுள்ளன. இவைத் தவிர, தமிழகத்தின் பல்வேறு மாட்டங்களில் பயிரிடப்பட்ட நிலக்கடலை, எள், உளுந்து, துவரை, பாசிப்பயிறு, கம்பு, சோளம், கேழ்வரகு, மிளகாய், சூரியகாந்தி உள்ளிட்டப் பல்வேறு பயிர் வகைகளும் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் சேதமடைந்துள்ளன. பருவம் தப்பி பெய்த கனமழையால் பல்வேறு நோய்த்தாக்குதல்களும் தொடங்கியுள்ளதால் தமிழக விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இத்தகைய நிலையில், இயற்கைச்சீற்றத்தால் வாழ்விழந்து நிற்கும் தமிழக விவசாயிகளைத் தாங்கிப்பிடித்து அவர்களது துயர்நீக்க நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டியது தமிழக அரசின் தலையாயக்கடமையாகும்.

ஆகவே, கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவித்து, தமிழக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கவேண்டுமெனவும், பயிர்க்கடன்களை முற்றாகத் தள்ளுபடி செய்ய முன்நகர்வுகளை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், பாதிப்பிலிருந்து மீண்டெழுந்து அடுத்தக்கட்ட வேளாண் பணிகளை மேற்கொள்ள வசதியாக பயிர்க்காப்பீட்டுத் தொகையினை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சேலம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைத்து பௌத்த விகாரையை நிறுவுவது தமிழர்களின் அடையாளங்களைச் சிதைத்து இனமழிப்புச் செய்ய முயலும் சிங்களப்பேரினவாதத்தின் கொடுஞ்செயல்!