இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் நடைபெறும் மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

185

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் நடைபெறும் மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி, துறையூர், பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பஞ்சமி நிலங்களில் முறைகேடாக நடைபெறும் மணற்கொள்ளையைத் தடுக்காமல், திமுக அரசு கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
மணற்கொள்ளையர்களைக் கைது செய்யாமல் அது குறித்துப் புகாரளித்த நாம் தமிழர் கட்சி தம்பிகளை மிரட்டி, அச்சுறுத்தும் தமிழ்நாடு காவல்துறையின் செயல் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

சென்னை – பெங்களூரு , இடையேயான அதிவிரைவு சாலை அமைக்கும் இந்திய ஒன்றிய அரசின் நெடுஞ்சாலை திட்டத்திற்காக, டி.பி.ஜெயின் என்ற தனியார் பெருநிறுவனம் தமிழ்நாடு அரசிற்குச் சொந்தமான சிப்காட் நிலங்களிலிருந்தும், ஆதித்தமிழ்க் குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களிலிருந்தும் எவ்வித அனுமதியும் இன்றி முறைகேடாக அதிகளவில் மணலை வெட்டி எடுக்கின்றது. 40 அடி ஆழத்திற்கும் அதிகமாக மணல் அள்ளப்பட்ட அவ்விடங்கள் தற்போது சுரங்கங்ளைப் போலக் காட்சியளிக்கும் அளவிற்கு, கட்டுங்கடங்காத மணற்கொள்ளை ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது.

இது குறித்துப் பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறையினரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகாரளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு, காவல்துறையை ஏவி புகாரளிக்கும் நாம் தமிழர் கட்சி தம்பிகளை மிரட்டுவதன் மூலம் இந்த அரசு யாருக்காகச் செயல்படுகிறது என்பது தெளிவாகிறது. டி.பி.ஜெயின் போன்ற தனியார் பெருநிறுவனங்கள் புரியும் மணற் கொள்ளைக்குத் துணைபோவதற்குப் பெயர்தான் ‘திமுக அரசின் திராவிட மாடலா?’ என்ற கேள்வியும் எழுகிறது.
ஆகவே, தமிழ்நாடு அரசு இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி, துறையூர், பனப்பாக்கம் பகுதிகளில் மணற்கொள்ளையில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்வதோடு, மணற்கொள்ளையை முழுவதுமாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் மண்ணையும், மண்ணின் வளங்களையும் காப்பதற்காகப் போராடும் நாம் தமிழர் கட்சியினரை காவல்துறை மூலம் அச்சுறுத்தும் அதிகார அத்துமீறலை திமுக அரசு கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி