இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிக்கான முதன்மைத் தேர்வினை தமிழர்களின் தேசிய திருவிழாவான பொங்கல் நாளன்று வைத்திருப்பதால் தமிழ்நாட்டுத் தேர்வர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். தைத்திங்கள் முதல் நாளில் தேர்வினை வைத்து தமிழர்கள் தேர்வில் கலந்துகொள்ள முடியாத சூழலை உருவாக்கியுள்ள பாரத ஸ்டேட் வங்கி தேர்வு வாரியத்தின் ஒருதலைபட்சமான செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்திய ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தமிழர்கள் எந்த விதத்திலும் தேர்வாகிவிடக் கூடாது என்று மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் ஒன்றிய அரசினது உள்நோக்கமுடைய தொடர்ச்செயல்பாடுகளின் மற்றுமொரு நீட்சியே தைப்பொங்கல் அன்று நடைபெறும் இத்தேர்வாகும்.
தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கருத்திற்கொண்டு பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிக்கான தேர்வினை வேறு தேதியில் தள்ளி வைக்கத் தேர்வு வாரியம் முன்வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசும் உடனடியாக இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்துத் தேர்வு தேதியினை வேறு நாளுக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி