நவம்பர் 1 ஆம் நாளன்று கொண்டாடப்படும் தமிழ்நாடு நாளினை மாற்றம் செய்து அரசாணை வெளியிட முனைவது மிகப்பெரும் வரலாற்றுத்திரிபு! – சீமான் கண்டனம்

524

நவம்பர் 1 ஆம் நாளன்று கொண்டாடப்படும் தமிழ்நாடு நாளினை மாற்றம் செய்து அரசாணை வெளியிட முனைவது மிகப்பெரும் வரலாற்றுத்திரிபு! – சீமான் கண்டனம்

தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் நாளினை தமிழ்நாடு நாள் என அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதனை மாற்றி அரசாணை வெளியிட முனையும் தமிழக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு, இந்திய ஒன்றியத்தால் மொழிவழி மாநிலமாக அறிவிக்கப்பட்ட நாளினை விடுத்து, தமிழ்நாட்டுக்குச் சட்டப்பூர்வமாகப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட நாளினை தமிழ்நாடு நாள் எனக் கொண்டாடுவது என்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வரலாற்றுத்திரிபாகும். மற்ற மாநிலங்களெல்லாம் தங்கள் தனித்த நிலமாகப் பிரித்து அறிவிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நாளினைக் கொண்டாடிக் கொண்டிருக்க இங்கு மட்டும் பெயர் சூட்டப்பட்ட நாளினைக் கொண்டாடுவது வேடிக்கையானதாகும். நவம்பர் முதல் நாள்தான் ‘தமிழ்நாடு நாள்’ என இருப்பதை மாற்றும் முடிவு, எல்லை மீட்புப்போராட்டத்தில் இன்னுயிர் ஈந்த ஈகிகளை இழிவுபடுத்தும் படுபாதகச் செயலாகும். தமிழ்நாடு எனப்பெயர் சூட்டப்பட்ட நாளினை கொண்டாட வேண்டுமென்றால், அதனைத் தாராளமாகக் கொண்டாடட்டும். ஆனால், அதற்காக அதனை தமிழ்நாடு நாள் என அறிவிப்பதை ஒருநாளும் ஏற்க முடியாது.

இந்திய ஒன்றிய அரசு 1956ல் மெட்ராஸ் மாகாணத்தை மொழிவாரியாகப் பிரித்த நாளான நவம்பர் 1 ஆம் நாள்தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டு மொழியால் அமையப்பெற்ற நிலப்பகுதியாக நிறுவப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நாளாகத் திகழ்கிறது. அத்தகைய பெரும்புகழும் சான்றோர் பெருமக்களின் ஈகங்களும் போராட்டங்களும் வரலாறாகக் கொண்ட, நவம்பர் 1ஆம் நாள்தான் ‘தமிழ்நாடு நாளாக’ அறிவிக்கப்பட வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சி மற்றும் இன்னபிற இயக்கங்கள், தமிழுணர்வாளர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தற்போதைய திமுக அரசு, தன்னிச்சையாக எதேச்சதிகாரப்போக்கோடு மாற்றியிருப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசியல் உள்நோக்கம் கொண்ட திமுக அரசின் தான்தோன்றித்தனமான அறிவிப்புக்குக் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவுசெய்கிறேன். தமிழர் தாயகம் மொழிவழியாக உதித்த திரு நாளினை மறைத்து, ‘தமிழ்நாடு’ எனச் சட்டப்பூர்வமாகப் பெயர்சூட்டிய நாளினை அரசியல் தன்னலத்திற்காக முன்னிறுத்துவது மிகப்பெரும் மோசடித்தனமாகும்.

ஆகவே, சூலை 18 யை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் அறிவிப்பைத் திரும்பப்பெற்று, நவம்பர் 1 யை தமிழ்நாடு நாளாக அறிவித்திடவும், அந்நாளில் அரசுப் பொதுவிடுமுறையளித்து, தமிழ் மூவேந்தர்களின் அரச இலச்சினைகளைப் பொறித்த தமிழ்நாட்டுக்கொடியை மாநிலமெங்கும் அரசு அலுவலகங்களிலும், அரசின் துறைசார்ந்த நிறுவனங்களிலும் ஏற்றி, எல்லை மீட்புப் போராளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி, பேரெழுச்சிமிக்கத் திருவிழாவாக அரசு சார்பில் கொண்டாடிட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இல்லையேல், நாம் தமிழர் அரசமைகிறபோது, நவம்பர் முதல் நாளினை தமிழ்நாடு நாளாக அறிவித்து, பேரெழுச்சிமிக்கத் திருவிழாவாக அரசு சார்பில் கொண்டாடுவோம் எனப் பேரறிவிப்புச் செய்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி