பிரித்தானியாவில் கோத்தபய ராஜபக்சே! – உலகத்தமிழர்கள் ஓரணியில் திரண்டு கடும் எதிர்ப்பினை வெளிக்காட்டுவோம்! – சீமான் அறைகூவல்

216

உலகெங்கிலும் வேர் பரப்பி வாழும்
என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்!

வருகிற 01.11.2021 திங்கட்கிழமை அன்று, பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தில் நடக்கவிருக்கிற சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்பதற்காக கோத்தபய ராஜபக்சே அவர்கள் வருகிறார்கள் என்ற செய்தி நாம் எல்லோரும் அறிந்ததுதான். இன்றைக்கு இலங்கை நாட்டினுடைய அதிபராக இருக்கின்ற அவர்,  நம் இனத்தை அழித்தொழிக்கிற இறுதிக்கட்ட போரின்போது பாதுகாப்புத்துறை, இராணுவ அமைச்சராக இருந்தார் என்பதும் நாம் அறிந்ததுதான். திட்டமிட்டு நம் இனத்தைப் படுகொலை செய்த சிங்களவர்களில், குறிப்பாக மகிந்தா ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சபசில் ராஜபக்ச மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும்பங்காற்றினர்.

உலகில் பல்வேறு நாடுகளின் ஆதரவையும், துணையையும் பெற்றுக்கொண்டு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை, ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் போர் நடக்கும் போது பயன்படுத்தக்கூடாத கருவிகளையெல்லாம் பயன்படுத்தி நம்மை அழித்து ஒழித்தார்கள். அதில் பலியான பச்சிளம் குழந்தைகள், வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நம் உடன்பிறந்த அக்காள் தங்கைகள், வயது முதிர்ந்த நம் பெற்றோர்கள் என எவ்வித பாகுபாடுமின்றி, சிறிதும் ஈவு இரக்கமின்றி, போரின் மரபை மீறி நம்மைக் கொன்று ஒழித்தார்கள். நமக்கென்று பேசுவதற்கு எவருமற்ற நிலையில் தனித்து விடப்பட்டதோடு, அங்கிருந்த ஊடகங்களை எல்லாம் வெளியேற்றி, தொண்டு நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் எல்லாவற்றையும் வெளியேற்றிவிட்டு, அங்கே என்ன நடக்கிறது என்பதே வெளியில் தெரியவிடாமல் செய்து, நம்மைக் கொன்று குவித்தார்கள். அவற்றையெல்லாம் உணர்வுள்ள எந்தத் தமிழனும் மறந்து, கடந்து போய்விட முடியாது.

இந்தச் சூழலில், தமிழர்கள் நிறைந்து வாழ்கின்ற பிரித்தானியாவில் நம்மினத்தைக் கொன்று குவித்த கோத்தபய ராஜபக்சே அவர்கள் எந்த இடையூறும், எதிர்ப்பும் இல்லாமல், எதிர் போராட்டம் இல்லாமல் சுதந்திரமாக வந்து திரும்பிச் சென்றார் என்றால், தமிழர்கள் அந்தப் படுகொலையை மறந்து கடந்து போய்விட்டார்கள், தங்கள் இனச்சாவைச் சகித்துக் கொண்டு மறந்து போய் விட்டார்கள் என்கிற நிலை உருவாகிவிடும். நமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியைப் பெறுவதற்கு இன்றுவரை சர்வதேச நாடுகளின் கதவைத் தட்டி, மனச்சான்றுள்ள மனிதர்களின் இதயக் கதவைத் திறப்பதற்கு நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக ஐநா பெருமன்றத்தில்  ஒவ்வொரு ஆண்டும் நாம் முறையிட்டுக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய வேளையில், இனப்படுகொலையாளர்கள் சுதந்திரமாகச் சர்வதேச நாடுகளில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் வந்துபோய்த் திரும்புவதென்பது, நாளை பன்னாட்டுச் சமூகம் நமக்காகப் பேச எத்தனித்தால், தமிழர்களே அமைதியாக இருக்கிறார்கள், நீங்கள் எதற்குப் பேசுகிறீர்கள் என்கிற கருத்தை, சூழலை உருவாக்கிவிடும். அதனால்தான் நாம் தொடர்ச்சியாக  இந்தியப் பெருநிலமானாலும், மற்றைய புலம்பெயர்  தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளனாலும் இது போன்ற இனப்படுகொலையாளர்கள் உள்ளே வரும்போது நாம் நம்முடைய கடுமையான எதிர்ப்புணர்வை பதிவு செய்கிறோம்.

அது அன்றைக்கு ஒருநாள் செய்தி என்றாலும்கூட உணர்வளவில், நாம் இன்னும் நம் இனச்சாவிலிருந்து மீண்டு, கடந்து போய்விடவில்லை, அதை மறந்து போய்விடவில்லை என்கிற பதிவு வரலாற்றுத் தேவையாக உள்ளது.

ஆகையினால், என் அன்புக்குரிய சொந்தங்கள், என் அருமை உடன் பிறந்தார்கள் நம்முடைய உள்ள உணர்வை நம் ஆழ்மனதில் கொதித்துக் கிடக்கின்ற, கோப உணர்வை, நமக்குள்ளே இருக்கிற காயத்தை வெளிக்காட்டுவதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, கோத்தபய வரும்பொழுது தமிழ்மக்கள், பெருந்திரளாகத் திரண்டு, பேரெழுச்சியாக அவருக்கு நம்முடைய எதிர்ப்பினை வெளிக்காட்ட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக இவ்விவகாரத்தில் அமைப்பு, கட்சி, தூரதேசம், பிரதேசம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் கூறி பிரிந்து நிற்கக் கூடாது. இங்கே நம் இனத்தின் நலமும் அதன் எதிர்காலமும்தான் முக்கியம்.

அந்தவகையில், நாம் முன்னெடுக்கின்ற போராட்டத்தோடு இணைந்து, அதனைப் பேரெழுச்சியான போராட்டமாக மாற்றி, கோத்தபய அவர்களுக்கு நம்முடைய எதிர்ப்புணர்வைக் காட்ட வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

நம் இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

நாம் தமிழர்!

 சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி