முன்னோக்கிச் செல்வோம்! மாற்றத்தை உருவாக்குவோம்! – மாபெரும் உறுப்பினர் சேர்க்கை திருவிழா 2023

1321

முன்னோக்கிச் செல்வோம்!
மாற்றத்தை உருவாக்குவோம்!

தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்!
பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப் பேரினத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ் இனத்தையும் நிலத்தையும் மொழியையும் போற்றிப் பாதுகாப்பதற்காகவும், இழந்துவிட்ட தமிழரின் பழம்பெருமைகளையும் பண்பாட்டுச் செழுமைகளையும் மீளப்பெறச் செய்வதற்காகவும், தமிழினத் தலைவரை நெஞ்சிலும், தலைவர் தந்த புலிக்கொடியைக் கைகளிலும் ஏந்தி, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழ்த்தேசிய அரசியலை விதைக்கும் பெரும்பணியை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கடந்த 13 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பேரெழுச்சியுடன் செய்து வருகிறது நாம் தமிழர் கட்சி.
தமிழரை அடையாளமற்று திசைமாற்றும் போலிப் புனைவுகளான ஆரியம்-திராவிடம் இரண்டிற்கும் மாற்றாக தமிழ்த்தேசிய அரசியலை வெகுசன அரசியல் பேரியக்கமாக மாற்றி, அதன் மூலம் தமிழ்மக்களின் உரிமைகளைப் போராடிப் பெறுவதில் எப்போதும் முன்னிற்கிறது நாம் தமிழர் கட்சி!
மண்ணிற்கும் மக்களுக்கும் எதிராக ஒன்றிய-மாநில ஆட்சியாளர்களாலும், அதிகார வர்க்கத்தாலும் திணிக்கப்படும் யாதொரு தீங்கையும் தடுத்துக் காக்கும் காப்பரணாக நாம் தமிழர் கட்சி விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. அதனை நிறுவுகின்ற வகையிலேயே நடந்து முடிந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 31 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
பண பலமும், படைபலமும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு மக்களிடம் வாக்குகளைப் பறிக்கும் சமகாலத் தேர்தல் அரசியல் வரலாற்றில் அவையனைத்தையும் தவிடுபொடியாக்கி, உண்மையும் நேர்மையுமாக மக்கள் பணியாற்றும் எளிய பிள்ளைகளான நம்மை, மக்கள் ஆதரிக்கத் தொடங்கிவிட்டதையே கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
அப்படி அரசியல் விழிப்புணர்வு பெற்ற மக்கள், அதிகாரத்தை நம் கைகளில் வழங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதை இலக்காக வைத்து மக்களை நோக்கி முன்நகர வேண்டியது ஒவ்வொரு நாம் தமிழர் பிள்ளையின் பெருங்கடமையாகும்.
நாம் இன்னும் சென்று சேராத கிராமங்களில், கட்சிக்கு அப்பாற்பட்டு, நம்மை ஆதரித்து வாக்களித்த பல இலட்சக்கணக்கான மக்களை அரசியற்படுத்தி, அமைப்பிற்குள் கொண்டு வந்து, நாம் தமிழர் கட்சியை மாபெரும் அரசியல் பேரியக்கமாக வலுப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் மிக முக்கியப் பொறுப்பாகும்.
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள், நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தரும் உறவுகளை அரவணைத்து, கட்சியின் கோட்பாடுகளை எடுத்துரைத்து உறுப்பினர்களாக இணைத்து, கட்சிக்கு புது இரத்தம் பாய்ச்ச வேண்டியது நம் ஒவ்வொருவரின் தார்மீக கடமையாகும். தேர்தல் நேரத்தில் நம் வலிமையைப் பறைசாற்றவும், அனைத்துத் தரப்பு மக்களைச் சென்றடையவும் நாம் களத்தில் தொய்வின்றி உழைக்கவேண்டிய காலம் இதுவே.
இதனைக் கருத்திற்கொண்டு, “முன்னோக்கிச் செல்வோம்! மாற்றத்தை உருவாக்குவோம்!” என்ற எழுச்சி முழக்கத்தை முன்வைத்து, தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக, வரும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் வாரத்தில், தமிழ்நாட்டின் அனைத்து தொகுதியிலும் கட்சிப் பொறுப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சனவரி 13ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக மாநிலம் தழுவிய உறுப்பினர் சேர்க்கை முகாம்களை முன்னெடுக்குமாறு, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, இம்மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் செயற்திட்டத்திற்கு, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முன்னோக்கி செல்வோம் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா சுவரொட்டி வடிவமைப்பு

https://drive.google.com/drive/folders/1YUZwvFxazHXTjTlo3UMdsxxgmlMe03FC?usp=share_link

முந்தைய செய்திபொங்கல் நாளன்று வைக்கப்பட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கித் தேர்வினை வேறு நாளுக்கு மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபெரம்பலூர் மாவட்டம் தமிழர்த் திருநாள் பொங்கல் விழா