குமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கொடிய அடக்குமுறையாகும்! – சீமான் கண்டனம்

215

குமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கொடிய அடக்குமுறையாகும்! – சீமான் கண்டனம்

குமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கனிமவளக்கொள்ளையர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சட்டத்திற்குப் புறம்பாக மலைகள் கொள்ளை போவதை அனுமதிக்கும் திமுக அரசு, தற்போது வளக்கொள்ளையர்கள் நிகழ்த்தும் வன்முறை வெறியாட்டங்களையும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளை வெட்டி கேரள மாநிலத்திற்குக் கடத்துகின்ற கனிம வளக்கொள்ளை, ஆளும் திமுக அரசின் துணையோடு நாளுக்குநாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. அதனைத் தடுத்து, இயற்கையின் கொடையான கனிமவளங்களைக் காப்பாற்ற நாம் தமிழர் கட்சி பல்வேறு போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துப் போராடி வருகிறது. இருப்பினும் குமரியில் எவ்வித கனிம வளக்கொள்ளையும் நடைபெறவில்லை என்று அமைச்சர் முதல் ஆட்சியர் வரையுள்ள அதிகார மையங்கள் மூலமாகப் பொய்ப்பரப்புரைகளை மேற்கொண்டு, உண்மையை மறைக்கும் செயலை திமுக அரசு தொடர்ந்து செய்கிறது. அதோடு, கனிம வளக்கொள்ளைக்கு எதிராகப் போராடும் நாம் தமிழர் பிள்ளைகள் மீது பொய்வழக்கு தொடுத்து, கைது செய்யும் அதிகார அடக்குமுறைகளையும் காவல்துறை மூலம் ஏவி வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், சித்தரங்கோடு பகுதியில் கனிமவள கொள்ளைக் குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற ‘நியூஸ் தமிழ்’ தொலைக்காட்சியின் செய்தி குழுவினரை கனிம வளக்கொள்ளையர்கள் மிரட்டி, தாக்கியுள்ள நிகழ்வு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கொடிய அடக்குமுறையாகும்.

கனிமவளக்கொள்ளை குறித்துத் தொடர்ந்து புகாரளித்து வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் கடந்த சனிக்கிழமை (10.09.2022) அன்று கனிம வள கொள்ளையர்களால் வாகனம் ஏற்றிக் கொடூரமாகக் கொல்லப்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ள நிலையில், தற்போது குமரி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும். கனிம வளக்கொள்ளையை எதிர்த்துப் போராடுபவர்கள் கைது செய்யப்படுவதும், நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதும், புகாரளிப்பவர்கள் கொல்லப்படுவதும், செய்தி சேகரிப்பவர்கள் தாக்கப்படுவதும், தமிழ்நாட்டில் நடைபெறுவது மக்களுக்கான அரசா? அல்லது வளக்கொள்ளையர்களுக்கான அரசா? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு ‘நியூஸ் தமிழ்’ தொலைக்காட்சி செய்தியாளர்களை அச்சுறுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய கனிம வளக்கொள்ளையர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், காவல்துறையைத் தனது நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கனிம வளக்கொள்ளையையும், வளக்கொள்ளையர்களின் வன்முறைகளையும் உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (செப்.23, சென்னை தி.நகர்) (நாள் மாற்றம்)
அடுத்த செய்திதமிழ்த்தேசியப் போராளி ப.அருள் நினைவேந்தல் கூட்டம் – குன்னம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு