வீரமரணமடைந்த இராணுவ வீரர் இலட்சுமணன் குடும்பத்தினருக்கு துயர்துடைப்பு நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
மதுரை மாவட்டம் டி.புதுபட்டியைச் சேர்ந்த அன்புத்தம்பி லட்சுமணன் இராணுவ வீரராக சேவையாற்றிய நிலையில், காஷ்மீரில் பாதுகாப்புப் பணியின்போது நடைபெற்ற சண்டையில் வீரமரணமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தம்பி லட்சுமணின் இழப்பு தமிழ் மண்ணிற்கும் மக்களுக்கும் மட்டுமின்றி நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். தம்பியை இழந்து வாடும் அவரது பெற்றோர்க்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
விடுதலைப்பெற்ற 75 வது நாளினை சிறப்பாக கொண்டாடும் முனைப்பில் இருக்கும் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள், வெறும் நாளினை கொண்டாடுவதை விடுத்து, எப்போது நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை இழந்த நாயகர்களை கொண்டாடப்போகிறீர்கள்?
விடுதலை நாள் விழாவிற்கு விளம்பரம் செய்ய பல்லாயிரம் கோடிகளை செலவழிக்கும் இந்திய ஒன்றிய பாஜக அரசு பெற்ற விடுதலையை பேணிகாக்க இரவு – பகல் பாராது, கடுங்குளிரிலும் கண்துஞ்சாது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, நாட்டிற்காக போரிட்டு உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினர் துயர்துடைப்பு உதவிகேட்டு நிற்கும் அவல நிலைக்கு தள்ளி, காக்க வைப்பதற்கு பெயர்தான் நாட்டுப்பற்றா? பெற்ற பிள்ளையை இழந்த துயரோடு, ஒவ்வொரு முறையும் இராணுவ வீரர்கள் வீரமரணம் அடையும் போதும், வீர்களின் பெற்றோர் அரசிடம் கையேந்தி கேட்டுத்தான் பெறவேண்டுமா? இராணுவ வீரர்களின் இணையற்ற தியாகத்தினை போற்றவேண்டுமென்று அரசிற்கு துளியும் அக்கறையோ, பற்றோ கிடையாதா?
சமூக வலைதளங்களில் முகப்பு படத்தை மாற்றுவதுதான் உண்மையான தேசபக்தி என்று பாடமெடுப்பதோடு, அப்படி மாற்றாத அனைவரும் தேசத்துரோகிகள் என்று பட்டமளிக்கும் திடீர் தேசப்பக்தர்கள், பெற்ற மகனை இழந்து தவிக்கும் தம்பி லட்சுமணனின் நடக்க முடியாத தந்தை, காது கேட்காத தாய் ஆகியோரின் துயரினை துடைப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மோடி அரசு குறித்து வாய்திறவாதது ஏன்? அவரது குடும்பத்தினரின் நியாயமான கோரிக்கையை அரசின் செவிகளுக்கு கொண்டு செல்லாதது ஏன்?
எனவே, இந்திய ஒன்றிய அரசு உயிரிழந்த தம்பி லட்சுமணின் பெற்றோருக்கு உடனடியாக உரிய துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசு அவரது சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி