கடலூர், திருவாரூர் நாகை மாட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து நிற்கும் நமது மக்களுக்கு உதவ நாம் தமிழர் உறவுகள் களத்திற்கு விரைய வேண்டும்!

388

கடலூர், திருவாரூர் நாகை மாட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து நிற்கும் நமது மக்களுக்கு உதவ நாம் தமிழர் உறவுகள் களத்திற்கு விரைய வேண்டும்! – சீமான் அறிவுறுத்தல்

கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடலூர், திருவாரூர், நாகை மாட்டங்கள் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தொடர்ச்சியாக இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்படும் கடலூர், திருவாரூர் நாகை மாட்டங்களில் மாவட்டங்களில் தற்போது வெள்ளம் ஏற்படுத்திய இழப்புகளையும், பாதிப்புகளையும் அறிந்திடும்போது அச்செய்திகள் பெருங்கவலை அளிக்கின்றன.

அங்குள்ள ஏரிகள் யாவும் நிரம்பி வழிவதாலும், ஆறுகளிலிருந்து பெருகிவரும் உபரி நீரும் சேர்ந்து மாவட்டம் முழுவதையும் வெள்ளக்காடாக மாற்றியுள்ளதால் மக்கள் பெருந்துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், கடலூர் மாவட்டத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவுபோல் காட்சியளிப்பதால் வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். பல இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் ஒரு இலட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாததால் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள்கூட இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அரசின் சார்பில் செய்யப்படும் துயர்துடைப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென்பதால், பல நூற்றுக்கணக்கான கிராம மக்கள் இதுவரை எவ்வித உதவியும் கிடைக்கப் பெறாமல் பசி,பட்டினியில் தவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று அவர்கள் மீண்டுவர கரம்கொடுத்து தூக்கிவிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் தார்மீகக் கடமையாகும். அதனடிப்படையில், ஒவ்வொரு முறை இயற்கைப்பேரிடர் சூழும்போதும், உடனடியாகக் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க இயன்ற உதவிகளை செய்துவருகிறோம். குறிப்பாக, கடந்த காலங்களில் புயல் மற்றும் பெருவெள்ளத்தால் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது உடனடியாக உதவிகள் செய்து பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைத்தோம். அதேபோன்று, தற்போதும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இத்துயர்மிகு சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் களத்தில் நிற்க வேண்டியதும், அப்பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உதவ வேண்டியதும் நமது தலையாயக் கடமையாகும். ஆகவே, கடலூர், திருவாரூர் நாகை மற்றும் அதன் அருகாமை மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் உடனடியாகக் களத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டுள்ள நம் மக்களுக்கு உறுதுணையாக நின்று அவர்களின் துயர்துடைக்க வேண்டுமெனவும், உதவிக்கரம் நீட்ட வேண்டுமெனவும் அறிவுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி – கோரிக்கை மனு
அடுத்த செய்திதிருப்பத்தூர் தொகுதி – ஒன்றியம் மற்றும் நகர கட்டமைப்பு கூட்டம்