தமிழ்த்தேசியப் போராளி ப.அருள் நினைவேந்தல் கூட்டம் – குன்னம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

46

13-09-2022 | தமிழ்த்தேசியப் போராளி ப.அருள் நினைவேந்தல் கூட்டம் – குன்னம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்தேசியப் போராளியும் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகச் செயற்பட்டு வந்த களப்போராளியுமான வழக்கறிஞர் ப.அருள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 13-09-2022 அன்று மாலை 05 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் அமைந்துள்ள எம்.எஸ்.டி. மகால் அரங்கில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்துகொண்டு மலர்வணக்கம் செலுத்தினார்.

நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான் அவர்கள், “நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான என் அன்புத் தம்பி ப.அருள் அவர்கள், ஒரு ஈடு இணையற்ற களப்போராளி. அவர் எங்களை விட்டுப் பிரிந்து ஓராண்டாகிவிட்டது. அவரது பிரிவு எங்களுக்கு மிகுந்த மன வலியையும், வலிமைக் குறைவையும் ஏற்படுத்துகிறது. இந்த குன்னம் சட்டமன்றத் தொகுதியில் தான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அவர் போட்டியிட்டார். அதனாலேயே இத்தொகுதியில், அவருடைய நினைவேந்தல் நிகழ்வை நாங்கள் நடத்துகிறோம். அவரின் முதலாம் ஆண்டு நினைவைப் போற்றுகிற இந்நாளில், அவர் எங்களோடு இணைந்து, இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஆற்றிய அரும்பணியை நினைவுகூரும் வாய்ப்பாக கருதுகிறோம். அவர் விட்டுச்சென்ற களப்பணியைத் தொய்வின்றி தொடர்ந்து முன்னெடுப்போம் என்கிற உறுதியை நாங்கள் ஏற்கிறோம். அவருக்கு எங்களின் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சீமான், “எங்கள் ஐயா வைரமுத்து அவர்கள் ‘சுடிதார் கவிஞர்’ என்றால், மோடி அணிந்திருப்பதற்குப் பெயர் என்ன? வைரமுத்து அணிந்த்திருக்கும் உடை ‘சுடிதார்’ போல இருக்கிறது என்றால், ஹெச்.ராஜாவின் ஐயா, மோடி அணிந்திருப்பது என்ன வேட்டி, சட்டையா? அவர் அணிந்திருப்பது ‘தொளதொள சுடிதார்’. எங்கிருந்தோ பீகாரிலிருந்து, மானத்தமிழ் மண்ணிற்கு பிழைக்க வந்த இடத்தில், தமிழர்களின் பெருமைமிக்க அடையாளமாக இருக்கும் ஒரு கவிஞரை இவ்வாறு பேசுவதெல்லாம் திமிர் பேச்சு” என்று கூறினார்.

“அர்ஜூன் சம்பத் அவர்கள் என்ன பாஜக கட்சியின் தலைவரா? உடனே அவர் சொல்வதைக் கேட்டு, மோடி ரமேஸ்வரத்திலும், அமித் ஷா கோவையிலும் போட்டியிடப் போகிறார்களா? அவர் சொல்வதை எல்லாம் மோடியும், அமித் ஷாவும் முதலில் கேட்பார்களா? அவர் ஏதோ பெருமைக்குப் பேசுகிறார். அவரின் கோரிக்கையை நான் வரவேற்கிறேன். அவர் ஆசைக்கிணங்க மோடி ரமேஸ்வரத்திலும், அமித் ஷா கோவையிலும் போட்டியிடட்டும். அங்கேயே வைத்து அவர்களைத் தோற்கடிப்போம்” என்று கூறினார்.

“மின் கட்டண உயர்வை, 99 விழுக்காடு மக்கள் எதிர்த்து தான் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இருப்பினும் இந்த அரசு மின் கட்டண உயர்வை செயல்படுத்தியுள்ளது. நான் முதல்வரிடம் கேட்க விரும்புவது, நீங்கள் மக்களின் கருத்துக்கானவரா? இல்லை மக்களின் நலனுக்கானவரா? மக்களின் கருத்தை விடுங்கள், முதலில் உங்களின் கருத்து என்ன? என்பதைச் சொல்லுங்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில், மின் கட்டண உயர்வை எதிர்த்து நீங்கள் கறுப்புக்கொடி ஏந்தி போராடியுள்ளீர்கள். கொரோனாவை விட கொடியதாக உள்ளது இந்த மின்கட்டண உயர்வு என்று எதிர்க்கட்சியாக இருக்கும்போது கடுமையாக எதிர்த்துள்ளீர்கள். ஆளும் கட்சியானதும் எதை எதிர்த்தீர்களோ, அதையே செயல்படுத்துகிறீர்கள்” என்று கூறினார்.

முந்தைய செய்திகுமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கொடிய அடக்குமுறையாகும்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஅரூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு