தனியார் மயமாக்கல் மற்றும் அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து, அஞ்சல்துறை ஊழியர்களின் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு

152

28-09-2022 | அஞ்சல்துறை ஊழியர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு – அண்ணாசாலை CPMG வளாகம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

அஞ்சல்துறை தனியார் மயமாக்கல் மற்றும் அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாக இன்று 28-09-2022 சென்னை அண்ணாசாலை, CPMG வளாகத்தில் நடைபெற்றுவரும் அறவழிப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவித்ததோடு, போராட்டக் கோரிக்கைகள் வெல்ல துணை நிற்போம் என்று உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றியப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான் அவர்கள், “அஞ்சல் துறையினர் நடத்தும் இந்தப் போராட்டத்தின் கோரிக்கை என்பது மிகவும் நியாயமானது. ஆனால், மிகவும் காலதாமதமான ஒன்று. இவர்கள் இவ்வளவு காலம் போராடாமல் பொறுத்திருந்திருந்து இருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு பாஜக தலைவர் தம்பி அண்ணாமலை அவர்கள் இங்குப் போராடிக் கொண்டிருக்கும் அஞ்சல் துறை ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து எடுத்து பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மலையை வெட்டிக் கடத்துவதை, ஆற்று மணலை அள்ளி விற்பதை, மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாது, எப்பொழுதும் மதத்தை மட்டுமே எடுத்துப் பேசுவது என்பது அழிவிற்குத்தான் வழிவகுக்கும். ஒன்றிய அரசுப் பணியாளர்களான அஞ்சல்துறை ஊழியர்கள் நடத்தும் இப்போராட்டம் வெல்லும்வரை நான் உடன் நிற்பேன். ஏனென்றால், இது உரிமை பிரச்சனை அல்ல, இவர்களின் உயிர்ப் பிரச்சனை. இந்தப் போராட்டத்தை ஆட்சியாளர்கள் கவனத்தில் எடுத்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்“ என்று தெரிவித்தார்.

 

முந்தைய செய்திபாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான ஒன்றிய அரசின் தடை பாசிசப்போக்கின் உச்சம்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஅரசாணை 354ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வேண்டி அரசு மருத்துவர்கள் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு