அரசாணை 354ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வேண்டி அரசு மருத்துவர்கள் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு

177

28-09-2022 | அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு – சென்னை வள்ளுவர்கோட்டம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

அரசு மருத்துவர்களுக்கு 2009-ல் திமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணை 354ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 28-09-2022 அன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற அரசு மருத்துவர்களின் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று ஆதரவளித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றியப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான் அவர்கள், “உயிரைக் காக்கிற உன்னதப் பணியைச் செய்யக் கூடிய மருத்துவப் பெருமக்கள், அதிலும் அரசு மருத்துவர்கள் மிக நியாயமான மூன்று முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுகிறார்கள். பல ஆண்டுகளாக இவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காகப் போராடி வருகிறார்கள். நானே இதுவரைப் பல முறை அரசு மருத்துவர்களின் போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன். பட்டினிப்போராட்டம், தொடர் வேலை நிறுத்தப் போராட்டம், தற்போது நடக்கும் மருத்துவர்களின் இந்தப் போராட்டத்திலும் பங்கேற்கிறேன் என்றால், இதற்கு நான் பெருமைப்படவில்லை, வெட்கப்படுகிறேன். அரசு மருத்துவர்களுக்கே இந்த நிலை தான் என்றால், அரசு மருத்துவமனையின் தரம் எவ்வாறு இருக்கும் என்று நீங்கள் கவனிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கை என்பது, 12 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஊதியப்பட்டை நான்கு வழங்கவேண்டும், மருத்துவர்கள் கலந்தாய்வில் நடந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நீதி வேண்டும், கொரொனா நோயால் இறந்துபோன மருத்துவர் விவேகானந்தருடைய குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப அரசு பணி வழங்க வேண்டும் என மிகுந்த தாழ்மையான மூன்று கோரிக்கைகள். இக்கோரிக்கைகளுக்காக வீதியில் இறங்கி அரசு மருத்துவர்கள் போராடும் நிலை தொடரக் கூடாது என்று தான் நான் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, சுகாதாரத் துறை அமைச்சர் என்னுடைய அன்பிற்கும், பாசத்திற்குமுரிய அண்ணன் மா.சுப்ரமணியம் அவர்களுக்கு இந்தக் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து தீர்வு காண வேண்டும் என்று அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். உயிர் காக்கும் மருத்துவர்களையும், அறிவை வளர்க்கிற ஆசிரியப் பெருமக்களையும் ஒருபோதும் வீதியிலே நிற்க விட்டுவிடாதீர்கள் என்று உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். எனவே, அவர்களின் நியாயமானக் கோரிக்கைகளை மதித்து, அவர்களை அழைத்துப் பேசி, இந்தப் போராட்டத்திற்குத் தீர்வு காண வேண்டும் என்று இந்த செய்தியாளர் சந்திப்பின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

முந்தைய செய்திதனியார் மயமாக்கல் மற்றும் அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து, அஞ்சல்துறை ஊழியர்களின் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருப்போரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்