வேட்டமங்கலத்தைச் சேர்ந்த தம்பி பிரபாகரனை சாதி ஆணவப் படுகொலைச் செய்திட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

519

வேட்டமங்கலத்தைச் சேர்ந்த தம்பி பிரபாகரனை சாதி ஆணவப் படுகொலைச் செய்திட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர் அருகே உள்ள வேட்டமங்கலத்தைச் சேர்ந்த இளங்கோவன் அவர்களது மகன் பிரபாகரன் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து மனம் துடித்துப் போனேன்.

தமிழ் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற பெரும் நோயாய் தமிழரிடையே ஆழமாய் ஊடுருவி இருக்கின்ற சாதிய மனநிலை விளங்குகிறது. எத்தனையோ அறிவியல் முன்னேற்றங்கள் அடைந்த இக்காலத்திலும் தன் மனம் விரும்பிய பெண்ணைக் காதலித்த செயலுக்காக இளைஞர் ஒருவர் சாதிய ஆணவப் படுகொலை செய்யப்படுவது என்பது எதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத படுபாதகச் செயல். மிருகத்தனமான மனிதத்தன்மையற்ற இந்தச் சாதி ஆணவப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நினைக்கவே உள்ளம் பதறுகிற இந்தப் படுபாதகக் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்திட வேண்டும் எனக் கோரிக்கை வைத்து , பிரபாகரன் உடலை வாங்க மறுத்து அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நொடி வரை குற்றத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ஒருவரை காப்பாற்றும் நோக்கில் காவல்துறை செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதன் அடிப்படையில் இக் கொலை குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராகப் போராடி வரும் மக்களுக்கும் மற்றும் அரசியல் இயக்கங்களுக்கும் நாம் தமிழர் கட்சி என்றும் போராட்டக்களத்தில் துணை நிற்கும், போராட்டங்களில் உறுதியாகப் பங்கேற்கும் எனவும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கின்ற தேசிய இனத்தினை வெட்கி தலை குனிய வைக்கிற இழி செயலாய் இந்தப் படுபாதகக் கொலை நிகழ்ந்திருக்கிறது. தன் மனம் விரும்பிய பெண்ணை நேசித்த ஒரே காரணத்திற்காகப் படுகொலை செய்யப்பட்ட தம்பி பிரபாகரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் ஆகியோருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கேற்கிறேன்.

தம்பி பிரபாகரனுக்கு எனது கண்ணீர் வணக்கம்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபனை விதை மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திஅறிவிப்பு: பனைச்சந்தை – 2021 | அக்டோபர் 16, 17 இரண்டு நாட்கள் – நந்தம்பாக்கம் (சென்னை) | சுற்றுச்சூழல் பாசறை