தங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உறுதியேற்போம்! – சீமான் வாழ்த்து
சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை முழக்கத்திற்கான திருநாள்தான், மே நாள்! நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை; ஓய்வு ஒழிச்சலற்று பலமணிநேரம் அந்தத் தொழிற்கருவிகளுக்கு இணையாய் சுழன்று உழைத்த உழைப்பாளர்களோடும்தான் தொடங்கியது. இருபது மணி நேரத்திற்கும் மேலாக ஆலைகளில் நசுங்கிய உழைப்பாளர்கள், எட்டு மணிநேர வேலை என்ற உரிமைக்காகப் போராடினார்கள். 1886ஆம் ஆண்டு மே 1ஆம் நாள் எட்டுமணிநேர வேலைக்காக அமெரிக்கத்தொழிலாளர் கூட்டமைப்பு அறிவித்த நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டமே மே நாள் என்ற உழைப்பாளர் உரிமை தினத்தின் தொடக்கமாக அமைந்தது.
அந்த உரிமைப்போரில் துப்பாக்கிக்குண்டுக்கு பலியாகியும், தூக்குமேடை ஏறியும் உயிர்தந்த ஈகியர்களை இந்நாளில் நினைவிலேந்துவோம். அந்த உரிமை தினத்தை நினைவுகூறும் விதத்தில், ஆங்கில ஆட்சியின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், 1923ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் செங்கொடி ஏற்றி, இந்தியத் துணைக்கண்டத்திற்கே அதனை அறிமுகம் செய்து வைத்தவர் எங்கள் பாட்டன் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் அவர்களாவார்.
நவீனகாலத்தின் முற்பகுதியில் உலகெங்கும் உழைப்பாளர்களுக்கான உரிமைப்போர்கள் தொடங்கப்பட்டக் காலக்கட்டத்தில்தான், தமிழினம் நாடுகள்தோறும் கூலிகளாய் சென்றது. உலகுக்கு உழைப்பையும், அதன்வழி, ‘கூலி’, என்ற சொல்லையும் உலக மொழிகளுக்கெல்லாம் தந்து, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பரந்து விரிந்தப் பொதுமைச்சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர்கள் தமிழர்கள்தான். தொழிலாளர்களின் உரிமைப்போராட்டத்தில் உலகமுதலாளிகள் கற்றுக்கொண்ட பாடம், இன ஒடுக்குமுறை! அதனால்தான், ‘உலகத்தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்’ என்று முழங்கிய மாமேதை லெனின் அவர்கள், ‘ஒடுக்கும் இனத்தின் தொழிலாளர்கள் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்குப் போராடவேண்டும்’ என்றார். கெடுவாய்ப்பாக, இந்தியப் பெருநிலத்திலுள்ளப் பொதுவுடைமைக்கட்சிகளும், அதன் தலைவர்களும் இதனை மறந்துபோயினர். விளைவு, 30 கடல் மைல் தொலைவில் எம் ஈழ உறவுகள் இன ஒடுக்கு முறையால் மண்ணின் மைந்தர்கள் என்ற உரிமையை மட்டுமல்ல, உழைப்பாளர்கள் என்ற தகுதியையும் இழந்து, பிச்சைக்காரர்களாய் கையேந்தி நிற்கிற கொடுந்துயரம் நிகழ்ந்தேறிவிட்டது. தமிழ்நாட்டிலோ தமிழர்களுக்கானத் தொழில் வாய்ப்புகள் யாவும் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஏராளமான உள்நாட்டு தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டு, தமிழர்களை எந்திரங்கள் போல, பாவித்து உழைப்பைச் சுரண்டும் பன்னாட்டுத்தொழிற்சாலைகள் பெருகியுள்ளன. பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமையற்ற உதிரிகளாய் மாற்றப்பட்டிருக்கின்றனர். கொஞ்சநஞ்சமுள்ள ஆலைகளிலும், 12 மணி நேரத்திற்கும் மேல் உழைத்தால்தான் வயிற்றைக் கழுவ முடியும் என்ற நிலைதானிருக்கிறது. உழவுத்தொழில், தன் இறுதிக்காலத்தில் துடித்துக்கொண்டிருக்கிறது. உழவுக்கு அடுத்த நிலையில் இருந்த நெசவுத்தொழில் அழிந்தேவிட்டது. தற்போதைய இந்தியச்சமூகச்சூழலில் நிலவுகிற தவறானப்பொருளாதாரக்கொள்கைகளினாலும், பாஜக அரசதிகாரத்தின் கோரமுகத்தாலும், எதேச்சதிகாரப்போக்காலும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் மறுக்கப்பட்டு, தனிப்பெரு முதலாளிகள் இலாபவெறி வேட்டையாடுகிற நிலைதான் நீடிக்கிறது. இந்நிலையிலிருந்து மீள்வதற்கும், இன அழிப்பு உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற்று உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுக்கவும் இந்நாளில் உறுதியேற்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் பொறுப்பும், கடமையுமாகும்.
உலகமயம், தாராளமயம், முதலாளித்துவம் என நம்மை நோக்கி வரும் அனைத்து அச்சுறுத்தல்களுக்குமெதிராக களம்காண உழைப்பாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம். போராடிப்பெற்ற உரிமைகளை இழந்துவிடாமல் பாதுகாப்போம்!
புதியதோர் தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!
தங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்குப் பாடுபட உறுதியேற்று, உழைப்பாளிகளுக்கு எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி