ஊரடங்கு காலத்தில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, அத்தியாவசியக் கடைகளின் பணிநேரத்தைப் பாதியாகக் குறைத்து அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா? – சீமான் கண்டனம்

293

ஊரடங்கு காலத்தில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, அத்தியாவசியக் கடைகளின் பணிநேரத்தைப் பாதியாகக் குறைத்து அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா? – சீமான் கண்டனம்

காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள், தேநீர் கடைகள் போன்ற அத்தியாவசியக்கடைகள் மதியம் 12 மணிக்கே மூடப்பட வேண்டுமென தமிழக அரசு அறிவித்திருப்பது மிகத்தவறான நிர்வாக முடிவாகும். கொரோனா வீரியம்பெற்றுப் பரவிக்கொண்டிருக்கும் தற்காலத்தில் கட்டுப்பாடும், விதிகளும் அவசியமென்றாலும்கூட அதற்காகத் தொலைநோக்குப் பார்வையின்றிக் கண்மூடித்தனமாக விதிகளைக் கொண்டு வந்து மக்களை முடக்குவது ஏற்கத்தக்கதல்ல. நிரந்தரமான வருமானமோ, மாதாந்திர ஊதியமோ இன்றி அமைப்புசாராத் தொழிலாளர்களாகப் பணியாற்றும் அடித்தட்டு உழைக்கும் மக்களும், அன்றாடங்காய்ச்சிகளும் அன்றைக்கு உழைத்து கிடைக்கிற சிறுதொகையைக் கொண்டுதான் அன்று அன்றைக்குச் சமைத்துண்ணுகிறார்கள். அத்தகைய மக்கள் உழைத்து ஊதியம்பெற்று வீடு திரும்பவே மாலை 6 மணிக்கு மேலாகும் எனும்போது, பகல் 12 மணிக்கே கடைகளை மூடுவது அவர்களை வெகுவாகப் பாதிக்கும். இத்தகைய பரந்துபட்டப் பார்வையின்றிப் பொத்தாம் பொதுவாக முடிவெடுத்து மேம்போக்காக அணுகுவது மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

அதுமட்டுமின்றி, குறைவான நேரமே கடைகள் இயங்கும் எனும் அறிவிப்பு மக்களைப் பீதியடையச் செய்து, முண்டியடித்துக்கொண்டு பொருட்களை வாங்கவும், நெருக்கிக் கொண்டு தனிநபர் இடைவெளியைத் தகர்க்கவும் பெரும் வாய்ப்பாக மாறிப்போகும். அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு போய்ச் சேர்க்கிற காய்கறிக் கடைகளுக்கும், மளிகைக் கடைகளுக்கும் இவ்வளவு கட்டுப்பாட்டை விதித்திருக்கிற தமிழக அரசு, மதுபானக்கடையை ஏன் இன்னும் திறந்து வைத்திருக்கிறது? என்பதற்குப் பதிலில்லை. மனித உயிர்க்குடிக்கும் மதுபானக்கடைகளை இப்பேரிடர் காலத்தில் முழுநேரமும் மூடுவதில் அரசுக்கு என்ன தயக்கம்? என்பது புரியவில்லை. ஊரடங்குக்காலக்கட்டத்தில் ஊதியமும், வருமானமும் பெரியளவு இல்லாத இத்தருணத்தில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்திருப்பது உழைக்கும் மக்களின் சிறுஊதியத்தையும் உறிஞ்சத்தானே வழிவகுக்கும்? கடந்தாண்டு கொரோனா ஊரடங்குக்காலத்தில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து அவற்றை மூடக்கோரி வீட்டுவாசலில் கறுப்புக்கொடியேந்திப் போராடிய ஐயா ஸ்டாலின், இன்றைக்குத் தனது அரசு பதவியேற்கையில் கொரோனா தொற்று முன்பைவிட வீரியமாகப் பரவி உயிர்களைக் குடித்துக்கொண்டிருக்கும்போது மதுபானக்கடைகளை மூடுவதற்குத் தயங்குவது ஏன்? என்பது முற்றிலும் விந்தையாக உள்ளது. ஆட்சியதிகாரத்தில் ஏறுவதற்கான அதிகாரப்பூர்வப் பதவியேற்பு நடைபெறுவதற்கு முன்பே, அதிகாரிகளை அழைத்து ஆலோசித்து அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்ட ஐயா ஸ்டாலின், மதுபானக்கடைகளைத் மூடாது திறந்து வைத்து வேடிக்கைப் பார்ப்பது மிக மோசமான அணுகுமுறையாகும்.

ஆகவே, ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்குத் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய அக்கடைகளின் நேரத்தை மாலை 6 மணிவரை நீட்டிப்புச் செய்ய வேண்டும் எனவும், மதுபானக்கடைகளை ஊரடங்குக்காலத்தில் கட்டாயம் மூட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமேட்டூர் சட்டமன்ற தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி – தை பூச திருவிழா அன்னதானம் வழங்குதல்