தனியார் தொழிற்சாலை வழங்கிய தரமற்ற உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களின் நிலை என்னவென்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக விளக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

704

தனியார் தொழிற்சாலை வழங்கிய தரமற்ற உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களின் நிலை என்னவென்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக விளக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் பகுதியில் உள்ள கைப்பேசி தயாரிக்கும் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட மதிய உணவினை உண்ட நூற்றுக்கணக்கான பெண்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 8 பெண்கள் கடுமையான பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வரும் செய்திகள் பேரதிர்ச்சியளிக்கிறது. பெண் தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியும், தொடர்புடைய தொழிற்சாலை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தரமற்ற உணவை உண்டதால் பாதிக்கப்பட்ட பெண் தொழிலார்களின் நிலையை வெளிப்படையாக அறிவிக்காமல் மூடிமறைக்கின்ற தொழிற்சாலை நிர்வாகத்தின் செயலே பெரும் ஐயத்தை ஏற்படுத்துகிறது. செயலே தொழிலாளர்களின் நலனில் அதிலும் குறிப்பாகப் பெண் தொழிலாளர்களின் நலனில் அதிக அக்கறையுடன் கூடுதல் கவனம் செலுத்திப் பேணிப்பாதுகாக்க வேண்டிய, அரசு பன்னாட்டுக் கூட்டிணைவு நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்படும் போக்கு சிறிதும் நியாயமானதல்ல. உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை என்னவென்று தெரியாமல், அவர்களது குடும்பத்தினரும், உடன் பணியாற்றும் தோழியரும் பெரும் அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

ஆகவே, தமிழ்நாடு அரசு தனியார் தொழிற்சாலை விடுதியில் வழங்கப்பட்ட உணவு நஞ்சானது தற்செயலானதா அல்லது திட்டமிட்ட சதியா என்பதையும், உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்களின் தற்போதைய உண்மையான நிலை என்னவென்பது குறித்தும் உரிய விசாரணை நடத்தி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருநெல்வேலியில் தனியார் பள்ளிக்கூடச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்களின் உயிர்பறிபோக திமுக அரசின் அலட்சியப்போக்கே முக்கியக் காரணம்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திகாலநிலை மாற்றம் உலகெங்கும் பெருஞ்சிக்கலாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மாற்று மின்சார உற்பத்தி முறைகளைக் கையாளாது எண்ணூரில் அனல்மின் நிலையம் அமைக்க முற்படுவதா? – சீமான் கண்டனம்