திருநெல்வேலியில் தனியார் பள்ளிக்கூடச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்களின் உயிர்பறிபோக திமுக அரசின் அலட்சியப்போக்கே முக்கியக் காரணம்! – சீமான் கண்டனம்

247

திருநெல்வேலியில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிக்கூடத்தின் சுவர் இடிந்து விழுந்து 13 வயதான மூன்று மாணவர்கள் உயிரிழந்ததுடன், 3 மாணவர்கள் படுகாயமடைந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் அடைந்தேன். மரணமடைந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

150 ஆண்டுகள் பழமையான பள்ளியின் உறுதித்தன்மை குறித்து ஆராயாமல் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகத்தின்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். கொரோனா பெருந்தொற்றுக் கட்டுபாடுகளுக்குப் பிறகு பள்ளிகளின் சூழல் படிப்பதற்கு உகந்ததாக உள்ளதா என்பதை ஆய்வுசெய்து உறுதிபடுத்தாமல், அவசர அவசரமாகப் பள்ளிகளைத் திறந்த, திமுக அரசின் அலட்சியப்போக்கே மூன்று மாணவர்களின் உயிர்பறிபோக முக்கியக் காரணமாகும்.

ஒவ்வொரு முறையும் விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டபிறகு, மக்களின் கொந்தளிப்பை அடக்குவதற்காகப் பெயரளவில் ஆய்வுக்குழு அமைக்கும் கண்துடைப்பு நாடகத்தை அரசு இனியாவது கைவிட்டு, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாணவ மாணவியரின் விடுதிகளின் உறுதித்தன்மை குறித்துக் கட்டிடப் பொறியாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து முறையாக ஆய்வுசெய்ய வேண்டும். மேலும் நிபுணர்குழு தகுதிச் சான்றிதழ் வழங்கிய பள்ளிகளை மட்டுமே திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டுமெனவும், மாணவர்களின் பாதுகாப்பில் அரசு எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாதெனவும் வலியுறுத்துகிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதென்காசி தொகுதி குருதிக் கொடை முகாம்
அடுத்த செய்திதனியார் தொழிற்சாலை வழங்கிய தரமற்ற உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களின் நிலை என்னவென்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக விளக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்