காலநிலை மாற்றம் உலகெங்கும் பெருஞ்சிக்கலாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மாற்று மின்சார உற்பத்தி முறைகளைக் கையாளாது எண்ணூரில் அனல்மின் நிலையம் அமைக்க முற்படுவதா? – சீமான் கண்டனம்

207

காலநிலை மாற்றம் உலகெங்கும் பெருஞ்சிக்கலாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மாற்று மின்சார உற்பத்தி முறைகளைக் கையாளாது எண்ணூரில் அனல்மின் நிலையம் அமைக்க முற்படுவதா? – சீமான் கண்டனம்

வடசென்னை, எண்ணூரில் 660 மெகாவாட் திறன்கொண்ட புதிய அனல்மின் நிலையம் அமைக்கும் தமிழக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. சூழலியல் சீர்கேட்டை விளைவித்து, காலநிலை மாற்றத்திற்குக் காரணமாக அமையும் வகையிலான இத்திட்டத்தைச் செயல்படுத்த முனைவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. மக்களின் விருப்பத்திற்கும், மண்ணின் நலனுக்குமெதிரான அனல் மின்நிலையத் திட்டத்தை வலுக்கட்டாயமாகத் திணிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

வடசென்னை பகுதியானது ஏற்கனவே பல தொழில்நிலையங்களும், அனல்மின் நிலையங்களும் அமையப்பெற்றப் பகுதியாகும். குறிப்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கீழ்வரும் வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் வள்ளூர் அனல்மின் நிலையம் ஆகியன இப்பகுதியில்தான் இயங்கி வருகின்றன. இவற்றின் மின் உற்பத்தித்திறன் 3330 மெகாவாட் (கூட்டாக) ஆகும். ஆனால், TANGEDCO-வின் அனல் மின் நிலையங்கள் 2020-21ல் மின் உற்பத்தியில் முழு திறனைக்கூட எட்டாமல் 56 விழுக்காடு மட்டுமே செயல்பட்டுள்ளன. அதாவது, 2400 மெகாவாட் திறனை உற்பத்தி செய்யக்கூடிய ஏறக்குறைய 4 ETPS-களுக்கு (Ennore Thermal Power Station) சமமான திறனை பயன்படுத்தாத நிலையில் ஒரு புதிய ETPS அனல்மின் நிலையம் தேவையற்றதாகும். மேலும், தமிழ்நாடு முழுவதுமுள்ள அனல் மின்நிலையங்களை கணக்கிடும்போது ஆயிரக்கணக்கான மெகாவாட் பயன்படுத்தாமல் இருப்பதும் தெரிய வருகிறது.
இந்த அனல்மின் நிலையங்கள் இருக்கக்கூடிய வடசென்னைப் பகுதியானது கழிமுகங்களைக் கொண்ட இயற்கை முக்கியத்துவம் வாய்ந்தப்பகுதியாகும். இவை வெள்ளக்காலங்களில் வடிகாலாக செயல்படுகின்றன. மேலும், இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த அலையாத்திக் காடுகளும், சிறு வனப்பகுதிகளும், சூழலியல் சமன்பாட்டை உறுதிப்படுத்தும் காயல்பகுதிகளும், உப்பங்கழிகளும் அமைந்தப் பகுதியாகும்.

தற்போது இருக்கக்கூடிய அனல்மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் உலர் சாம்பல் கழிவுகளை, அனல் மின் நிலையத்திலிருந்து சாம்பல் குளம் அமைந்துள்ளப் பகுதிக்கு எடுத்துச் செல்லும் இராட்சதக்குழாய்களானது 1995 – 1996 ஆகிய ஆண்டுகளில் பொருத்தப்பட்டவையாகும். இந்தக் குழாய்கள் சரிவரப் பராமரிக்கப்படாததாலும், பின்னும் மாற்றப்படாததாலும் தொடர்ச்சியாக அவற்றில் உடைப்பு ஏற்பட்டு உலர் சாம்பல் கழிவுகள் ஆங்காங்கே வெளியேறுகின்றன. குறிப்பாக, நீர்நிலைகளில் அவைப் படிந்து நீர் மாசினை ஏற்படுத்துகின்றன. மேலும், மக்கள் குடியிருக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும் உலர் சாம்பல் கழிவுகளால் நிலம் மூடப்பட்டு மாசுபடுகின்றன. சாம்பல் குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டப்பின்பும் ஊடுருவ முடியாதத் தடுப்பு அமைக்கப்படாததால் அருகிலிருக்கும் குடியிருப்புகளுக்கு உலர் சாம்பல் கழிவுகள் கசிந்து வெளியேறுகின்றன. மறு பயன்பாட்டிற்காக சாம்பல் குளத்திலிருந்து பல்வேறு தொழில் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்போது பாரஉந்துகள் சரியாக மூடப்படாததால் அவற்றிலிருந்தும் கழிவுகள் வெளியேறுகின்றன. இவற்றிற்கு மத்தியில் வாழும் மக்களுக்கு சிறுநீரகம், மூளை , நுரையீரல், கண்கள், தோல் மற்றும் இதயம் போன்ற அனைத்து உடல் உறுப்புகளுக்கும் கடுமையானப் பாதிப்பை ஏற்படுத்தும். சாம்பல் தூசி காற்றில் நுண் துகள்களாக (PM 2.5) மாறி இரைப்பு போன்ற மேல் சுவாசப்பாதை பிரச்சினைகளை உண்டாக்கும். இந்த PM 2.5 கர்ப்பிணிப் பெண்களின் நஞ்சுக்கொடி தடையை தாண்டி மகவின் மூளை வளர்ச்சியை பாதிக்கக்கூடியது. தூத்துக்குடி மக்களுக்கு கருச்சிதைவை உண்டாக்கிய ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கசிந்த கந்தக டை ஆக்ஸைடு வாயு நிலக்கரி எரிக்கும்போதும் வெளியாகும். உடன் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் பாதரச வாயுக்கள் நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகியனவும் வெளியேறும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, இருக்கும் இரண்டு அனல்மின் நிலையத்தின் நிலக்கரிச்சாம்பல் கசிவால் கொற்றலை ஆறு சாம்பலாக மாறிவிட்டது. மீன், நண்டு, இறால் போன்ற வளங்கள் கடுமையாகக் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட நாட்களுக்கு இந்த இரண்டு அனல் மின் நிலையங்களும் விதிகளுக்குப் புறம்பாக, அனுமதிக்கப்பட்ட அளவினைத் தாண்டி காற்று மாசினை ஏற்படுத்தியுள்ளன.

திட்டமிடப்பட்டதுபோல, புதிதாக அனல்மின் நிலையம் அமைக்கப்படுமாயின் இந்த ETPS ல் இருந்து மட்டும் CO2 வெளியேற்றம் ஆண்டுக்கு 4,435 மெட்ரிக் டன்களாக இருக்கும். ETPSற்கு நிலக்கரி கொண்டு செல்லப் புதிதாக 5 கி.மீ நிலக்கரி கன்வேயர் பெல்ட் கொற்றலை ஆற்றின் குறுக்கே அமைக்கப்படவுள்ளது. ஏற்கனவே, எண்ணூரிலுள்ள பல தொழிற்சாலைகளினால் கொற்றலை ஆற்றில் அமைக்கப்பட்ட கட்டுமானங்களுக்காகக் கொட்டப்பட்ட கான்கிரீட் கழிவுகள் அகற்றப்படாததால் வெள்ளப் பாதுகாப்பின்மையும்,நீரோட்ட இடர்பாடுகளும் உண்டாகி ஆற்றின் உயிரோட்டம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள NCTPS ல் இருந்து வெளியேறும் வெந்நீரினால் கடல் உயிரினங்களும் அது சார்ந்த மக்கள் வாழ்வாதாரமும் பாதிப்பது மட்டுமல்லாமல் வெந்நீர் வெளியேற்றத்தினால் ஆற்றில் இறங்கி வேலைபார்க்கும் மீனவ மக்களுக்கு பல முறை வெந்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. திட்டமிடப்பட்டுள்ள ETPS ன் வெந்நீர் வெளியேற்றும் கட்டமைப்பை அன்னை சிவகாமி நகரிலுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதியில் அமைக்கவுள்ளனர். வடசென்னை மக்கள் முப்பதிற்கும் மேற்பட்ட அபாயகரப்பட்டியலிலுள்ள தொழிற்சாலைகள் (3 துறைமுகம்,2 அனல்மின்நிலையம், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலைகள், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் உட்பட),1 பெரிய குப்பைக்கிடங்கு என இவற்றுக்கு மத்தியில் மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு புதிய அனல்நிலையம் அமையவிருப்பது ஒட்டமொத்த வடசென்னை மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் செயலாகும்.

மேற்சொன்ன சிக்கல்களே பல ஆண்டுகளாக மக்கள் தரப்பிலிருந்து கோரிக்கையாக வைக்கப்பட்டும் தீர்க்கப்படாத நிலையில் புதிதாக ஒரு அனல்மின் நிலையம் வெளியிடக்கூடியக் கழிவுகள் மேலும் பாதிப்பை அதிகரிக்கவே செய்யும். பலமுறை உயர் நீதிமன்றமும், தேசிய பசுமைத்தீர்ப்பாயமும் சாம்பல் கழிவுகள் பொதுவில் கலக்கப்படுவதையும், பக்கிங்காம் – கொற்றலை ஆறுகள் மாசடைவதையும் கண்டித்தும், கழிவுகளை அகற்ற உத்தரவிட்டப்பின்னரும் எந்தவித சொல்லத்தக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், தொழிற்சாலை மாசுக்கு ஆளாகாத தலைநகரின் பல இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட 34,000 அடித்தட்டு மக்களை இப்படிப்பட்ட அபாயகரமான தொழிற்சாலை வளாகத்திலிருந்து வெறும் 20 அடி தொலைவில் புதிதாக கட்டப்பட்ட 6,800 குடிசைமாற்று வாரிய கட்டடத்தில் குடியமர்த்த இருக்கிறார்கள். சமூகநீதி என்கிற சொல்லாடலை அரசியல் இலாபத்திற்காக நாளும் பயன்படுத்தும் ஆளும் திமுக அரசு, அதற்கு முற்றிலும் நேர்மாறான வகையில் மீண்டும் மண்ணின் மக்களுக்கெதிரான ஒரு கொடுஞ்செயலை விளைவிக்கத் துடிப்பது வெட்கக்கேடானது.

அனல்மின்நிலைய விரிவாக்கத்திட்டத்தின் கீழ் கூறப்பட்டிருக்கும் நிரந்தர வேலைவாய்ப்புகள் யாவும் கட்டுக்கதைகள்தான் என்பது தற்போது புலனாகிக்கொண்டிருக்கின்றது. அண்மைக்காலத்தில் கொண்டு வரப்பட்ட காமராசர் துறைமுகம், L&T துறைமுகம், NCTPS II ஆகிய இடங்களில் ஒரு நிரந்தர வேலை வாய்ப்புகூட அந்தந்தப் பகுதியின் மக்களுக்கு சரிவர வழங்கப்படவில்லை.

அண்மையில் க்ளாஸ்கோவில் நடைபெற்ற Cop26ல் நிலக்கரி சார்ந்த மின்சார உற்பத்தி, எரிவாயு உற்பத்தி ஆகியவற்றை முற்றிலும் தவிர்ப்பது மட்டுமே புவி வெப்பமடைவதை குறைக்கவும், பருவநிலை மாற்றத்தை தடுக்கவும் உதவும் என்று அறிவிக்கப்பட்டு, அது அனைவராலும் ஏற்கப்பட்டது. இந்தியாவும் நிலக்கரி சார்ந்த ஆற்றல் உற்பத்தியைப் படிப்படியாகக் குறைப்பதற்கு உறுதி ஏற்றது. இந்நிலையில் மாற்று மின்சார ஆற்றல் உற்பத்தி முறைகளைத்தான் அரசு கையாண்டிருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு, மேலும் நிலக்கரி சார்ந்த அனல்மின் நிலையங்களை விரிவாக்குவது அல்லது புதிதாகத் தொடங்குவது சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும், காலநிலை மாற்றத்தினை தடுப்பதற்கும் எந்த விதத்திலும் உதவாது.

முன்னதாக, இத்திட்டத்திற்கான மக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் வரும் சனவரி 6 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு அரசு தரப்பு இத்திட்டத்தில் இருக்கக்கூடியச் சிக்கல்களை முன்வந்து ஆராய வேண்டும். சூழலியல் அபாயகரமானப் பெரும் திட்டங்களுக்காக நடத்தப்படும் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் வெறும் கண்துடைப்பென மாறி நிற்கும் வேளையில், மண்ணுக்கோ, மக்களுக்கோ பெரும் கேடாக அமையப்போகிற இத்திட்டம் கருத்துக்கேட்புக்கூட்டம்வரை கொண்டு செல்லப்படக்கூடாது என்றும், அனல் மின்நிலையத் திட்டத்தினை உடனடியாகவும், முழுவதுமாகவும் கைவிட தமிழக அரசு முன்னேற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். அதற்கு நேர்மாறாக, இத்திட்டம் முன்நகர்ந்தால் இதன் தீயவிளைவுகளை எடுத்துரைத்து, மக்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சி மிகத்தீவிரமாகப் போராடுமெனப் பேரறிவிப்பு செய்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதனியார் தொழிற்சாலை வழங்கிய தரமற்ற உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களின் நிலை என்னவென்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக விளக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திமுத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 27ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | தலைமையகம்