தமிழக மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித்தாக்குதல் நடத்தியிருப்பது சிங்களப் பேரினவாதத்தின் உச்சம்! – சீமான் கண்டனம்

437

புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித்தாக்குதல் நடத்தியிருப்பது சிங்களப் பேரினவாதத்தின் உச்சம்! – சீமான் கண்டனம்

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்து கொலைவெறித்தாக்குதல் நடத்தியிருப்பதும், மீனவர்கள் மீதானத் தாக்குதல்கள் பல ஆண்டுகளாகத் தொடர்கதையாக மாறி வருவதும் பெரும் வேதனையளிக்கிறது. பன்னெடுங்காலமாக சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களுக்கு தமிழர்கள் பலியாவதும், உடல் உறுப்புகளை இழப்பதும் மிக இயல்பானதாக மாறி தமிழக மீனவர்களின் துயரங்கள் இன்றுவரைத் தொடர்ந்து வருவதற்கு ஆளுகிற மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப்போக்கே முதன்மைக்காரணமாகும். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கேற்ப ஒவ்வொரு முறையும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் அரசுகள்தான் மாறுகிறதே, தவிர தமிழக மீனவர்கள் மீதான கோரத்தாக்குதல்கள் இன்றுவரை நின்றபாடில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன், முனீஸ்வரன், சசிகுமார், லெட்சுமணன், வில்லாயுதம், தூண்டியப்பா ஆகிய 6 மீனவர்களைக் கடந்த மே 5ஆம் தேதியன்று இலங்கை கடற்படை நடுக்கடலில் வழிமறித்துத் தாக்கியுள்ளது. அதில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உருவம் பொறித்த ஆடையை அணிந்திருந்த காரணத்தினால் நடராஜன் என்பவரை மிகக்கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அக்கோரத்தாக்குதலில் படுகாயமடைந்த 6 மீனவர்களும் குற்றுயிரும் குலையுயிருமாக அங்கிருந்து தப்பித்துக் கரை திரும்பியுள்ளனர். இனவெறிகொண்டு தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட இக்கொடியத்தாக்குதல் சகமீனவர்களிடத்தும், மீனவர்களின் குடும்பத்தினரிடத்தும் பெரும் கலக்கத்தையும்,கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் சிறைபிடிப்பது, கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, படகுகளைப் பறித்துக்கொள்வது, உடைமைகளை அபகரித்துக்கொள்வது, மீன்கள், வலைகள், படகுகளைச் சேதப்படுத்துவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என அரங்கேற்றிவரும் கொடுமைகள் சொல்லி மாளக்கூடியதல்ல. சிங்களப்பேரினவாத அரசு ஈவிரக்கமற்று தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்துவதும், சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்படுத்தி வன்முறையிலும், அத்துமீறல்களிலும் ஈடுபட்டு வருவதும் தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும்.

800க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் கொலை செய்யப்பட்டும், பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்தும், தமிழக மீனவர்களின் பல கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டும் வரும் நிலையில் நாட்டையாளும் ஆட்சியாளர்கள் அதனைத் துளியும் பொருட்படுத்துவதில்லை. இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் மத்திய, மாநில அரசுகள் கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் மீதான சிங்களக்காடையர் கூட்டத்தின் இக்கொடுங்கோல் போக்குகளும், அட்டூழியங்களும் தொடர்ந்து வருவது ஆளும் அரசுகளின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது.

ஆகவே, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசாவது கடந்த காலங்களைப் போல அலட்சியமாகயிராது, மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கடந்த பல ஆண்டுகளாக மீனவர்கள் சந்திக்கும், அவர்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய இந்நெடிய சிக்கலுக்கு, தற்போது மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள திராவிட முன்னேற்ற கழகம், தன்னிடமுள்ள 37 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலுவான பலத்தினைப் பயன்படுத்தி மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து விரைவில் நிரந்தரத் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட 6 மீனவர்களின் மருத்துவச்செலவை அரசே ஏற்று, அவர்களது குடும்பத்திற்கும், வாழ்வாதாரத்துக்குத் தேவையான நிதியுதவியைச் செய்துதரவேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅத்தியாவசியக் கடைகளை மாலை 6 மணிவரை அனுமதித்து, தற்காலிகக் கடைகளையும், நடமாடும் காய்கறி கடைகளையும் அமைக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபேரிடர் கால நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாகக் கருத்தில் கொண்டு தமிழகத்தை ஐந்து மண்டலமாகப் பிரித்து ஐந்து சுகாதாரத்துறை செயலாளர்களை நியமிக்க வேண்டும் – சீமான்