அத்தியாவசியக் கடைகளை மாலை 6 மணிவரை அனுமதித்து, தற்காலிகக் கடைகளையும், நடமாடும் காய்கறி கடைகளையும் அமைக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

236

அத்தியாவசியக் கடைகளை மாலை 6 மணிவரை அனுமதித்து, தற்காலிகக் கடைகளையும், நடமாடும் காய்கறி கடைகளையும் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

கொரோனா நோய்த்தொற்று வீரியம்பெற்று இரண்டாம் அலையாகப் பரவி கொண்டிருக்கும் தற்காலச்சூழலில் அதன் பரவலை மட்டுப்படுத்தி, தொற்றைக் கட்டுப்படுத்திட தமிழக அரசு அறிவித்திருக்கும் முழு ஊரடங்கு அறிவிப்பை வரவேற்கிறேன். கொரோனா உருமாற்றம் அடைந்து இரண்டாம் அலையாகப் பரவி கொண்டிருக்கும் நிலையில் மிகுந்த கவனமுடனும், முன்னெச்சரிக்கை உணர்வுடனும் செயல்பட வேண்டியது ஒவ்வொருவரின் தலையாயப் பணியாகும். அரசின் முழு ஊரடங்கு உத்தரவுக்கு முழுமையான ஒத்துழைப்பு நல்கி, ஒவ்வொரு தனிமனிதரும் தங்களுடைய பங்களிப்பினைச் செய்தால் மட்டுமே கொரோனா தொற்று முற்றிலும் நம்மைவிட்டு அகலும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே, அதனைப் புரிந்துகொண்ட ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடனும், சமூக விழிப்புணர்வுடனும் முழு ஊரடங்கைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துகிறேன்.

அதேசமயம், அமைப்புசாரா தொழிலாளர்களாக விளங்கும் அடித்தட்டு உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டியது அரசின் முதன்மை கடமையாகும். நாடு முழுக்க நிலவும் பொருளாதாரத் தேக்கநிலை காரணமாக எல்லாத்தரப்பு மக்களும் வருவாய் இழப்பையும், பண வீக்கத்தையும் எதிர்கொண்டு வரும் வேளையில் அன்றாடங்காய்ச்சிகளாக வாழும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. அதில் அரசு முழுக் கவனமெடுத்து, அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்கள் காக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது பேரவசியமாகிறது. அரசு அறிவித்திருக்கிற கொரோனா துயர்துடைப்புத் தொகையான 2,000 ரூபாய் என்பதனை 5,000 ஆக உயர்த்தி இந்த ஊரடங்குக் காலத்திற்குள் மக்களுக்கு உரியவகையில் உடனடியாகச் சேர்த்திடல் வேண்டும்.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட அங்காடிகளையும், கடைகளையும் 12 மணிக்கே மூட உத்தரவு பிறப்பித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. திறந்திருக்கும் நேரம் குறைவாகயிருப்பதால் ஒரே நேரத்தில் அதிகம் பேர் பொருட்களை வாங்க கடைகளில் கூடி அதுவே நோய்த்தொற்றுப் பரவலுக்குக் காரணமாகிவிடும் அபாயம் இருப்பதாலும், ஏற்கனவே நடைபெற்று வரும் கட்டிட வேலைகள் அனுமதிக்கப்பட்டிருப்பதால் கட்டிட வேலைக்குச் செல்லும் தினக்கூலி அடித்தட்டு மக்கள் வேலை முடிந்து வீடு திரும்பவே மாலையாகும் என்பதாலும் குறைந்தபட்சம் மாலை 6 மணிவரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளையும், விதிகளையும் அனுமதிக்கப்பட்ட கடைகளில் கடைப்பிடிக்கப்படாத பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து விதிகள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்தால் கட்டாயம் நோய்த்தொற்றுப் பரவலை தடுக்கலாம். இத்தோடு, ஊரடங்குக்காலத்தில் மக்கள் அத்தியாவசியப்பொருட்களை வாங்க முண்டியடித்துக்கொண்டு நிற்பதைத் தவிர்க்க அரசிற்குச் சொந்தமான இடங்களில் தற்காலிகக் கடைகளையும், நடமாடும் காய்கறிக் கடைகளையும் அமைக்க அரசு ஏற்பாடு செய்ய முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி“தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நன்றியுடன் நினைவுகூரும்! – சீமான் அறிக்கை
அடுத்த செய்திதமிழக மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித்தாக்குதல் நடத்தியிருப்பது சிங்களப் பேரினவாதத்தின் உச்சம்! – சீமான் கண்டனம்