மனித உரிமை மீறலுக்கு உள்ளாக்கப்படும் சுற்றுச்சூழல் போராளி முகிலன் மீதான அனைத்து பொய் வழக்குகளைத் திரும்பப்பெற்று உடனடியாக விடுதலை செய்க! – சீமான் வலியுறுத்தல்

72

300 நாள்களுக்கும் மேலாகச் சிறைக்கொட்டடியில் மனித உரிமை மீறலுக்கு உள்ளாக்கப்படும் சுற்றுச்சூழல் போராளி முகிலன் மீதான அனைத்து பொய் வழக்குகளைத் திரும்பப்பெற்று உடனடியாக விடுதலை செய்க! – சீமான் வலியுறுத்தல்

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகப் போடப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டுச் செப்டம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டு 300 நாள்களுக்கும் மேலாகச் சிறைக்கொட்டடியில் மனித உரிமை மீறலுக்கு உள்ளாக்கப்படும் சுற்றுச்சூழல் போராளி முகிலன் மீதான அனைத்து பொய் வழக்குகளைத் திரும்பப்பெற்று உடனடியாக விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (16-07-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சுற்றுச்சூழல் போராளி முகிலன் அவர்கள் கடந்த 18.09.2017 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளின் தேவைக்காக நிலத்தடி நீரை ஆழ்த்துளைக் கிணறுகள் மூலமாக உறிஞ்சி சட்டவிரோதமாக வணிக நோக்கில் விநியோகம் செய்யப்பட்டு வருவதைக் கண்டித்து நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆடு, மாடுகளுடன் குடியேறும் போராட்டத்தில் பங்கேற்றபோது கைது செய்யப்பட்டார்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம், காவிரி நதிநீர் உரிமைக்கான போராட்டங்கள், மணற்கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள், ஸ்டெர்லைட் நச்சுஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற தொடர் போராட்டம் மற்றும் நியூட்ரினோ ஆய்வு, கெயில், மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற பேரழிவு திட்டங்களினால் மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பல்வேறு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பதனால் அவர்மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருந்தன என்பதனால் பிணையில் விடுதலையாகாதவாறு தமிழக அரசு அவரைச் சிறையிலேயே முடக்கிவிட்டனர்.
இந்நிலையில் 300 நாள்களுக்கும் மேலாகப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற தொடர் போராட்டத்தின் நூறாவது நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப் பேரணியாக வந்த மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காகப் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மீது போடப்பட்ட 132 வழக்குகளைத் திரும்பப்பெறக் கோரியும் கடந்த ஜூன் மாதம் சிறைக்குள்ளேயே உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து 5 நாள்களுக்கும் மேலாக உணவு உட்கொள்ளாததினால் அவரது உடல்நிலை மிகவும் பாதிப்படைந்துள்ள நிலையில், மக்கள் நலனுக்கான அவரது அறவழிப் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அவர்மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப்பெற்று அவரை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவந்தனர். ஆயினும் தமிழக அரசு அவர் பழைய போராட்டங்களில் பேசியதற்காகப் பதியபட்ட பல பொய் வழக்குகளை அவர்மீது தொடுத்துக்கொண்டேயிருக்கிறது. இதுபோன்ற செயல்கள் யாவும் ஜனநாயக நாட்டில் நடைபெறும் சட்டப்படுகொலைகள் என்றே கூறலாம்.

பாஜக ஆட்சியின் நீட்சியாகச் செயல்படும் அதிமுக அரசு. அவர் மீது அடுக்கடுக்காக எத்தனை வழக்குகளைத் தொடுத்தாலும் அவற்றைச் சட்டப்படி எதிர்கொள்ளும் மனஉறுதியுடன் இருப்பதால் அவருக்குச் சிறையிலேயே பல்வேறு இன்னல்கள் கொடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த 30-06-2018 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து அவரை மதுரை சிறைக்கு நள்ளிரவில் மாற்றியிருக்கிறார்கள். மதுரை சிறையில் 3 வருடங்களாகப் பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு கட்டிடத்தில் முகிலன் அவர்களை மட்டும் தனிமைச் சிறையில் வைத்துள்ளனர். அவர் அடைக்கப்பட்டுள்ள அறையின் பின்பகுதியில் சிறையிலுள்ள கழிப்பறைகளிலிருந்து வரும் மலம், சிறுநீர் போன்றவை பாதாள கழிவுநீர் தொட்டிக் கட்டப்படாமல் திறந்தவெளி குட்டையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் சுகாதாரக் சீர்கேடு மற்றும் பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் உருவாகியுள்ளது. இதனால் முகிலன் அவர்களுக்குச் சுவாசிக்கத் தூயக்காற்று இல்லாமலும் சரியான உணவு, குடிநீர் இல்லாமலும் கொசுக்கடியில் உறக்கமின்றியும் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றார். அவரது மனவுறுதியைச் சிதைக்கவியலா சதிகார அரசு அவரது உடலுறுதியைச் சிதைக்கத் திட்டந்தீட்டி மனித உரிமை மீறல்களைச் செயற்படுத்தி வருகிறது. இவையாவும் முகிலன் அவர்களைச் சிறைக்கொட்டடியிலேயே நோயுற்று மரணப்படுக்கையில் வீழ்த்துவதற்கான சதித்திட்டமோ என்று அஞ்சத்தோன்றுகிறது. சிறைக்கைதிகளின் மரணத்தைத் தற்கொலையாக மாற்றும் கொடுஞ்செயலை சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த இராம்குமார் மரணத்தில் பார்த்தோமே? இந்த ஆட்சியாளர்கள் தங்கள் பதவியைப் பாதுகாத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் போவார்கள் என்பது ஊரறிந்த உண்மை. தனிமைச்சிறையில் வைத்து இவ்வளவு கொடுமைகளுக்குட்படுத்த எது தான் காரணியாக இருக்கிறது? மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் களைய முற்பட்டது தான் ஒரே காரணி என்றால் இத்தகைய கொடுஞ்செயல்கள் ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு பெரிய வெட்கக்கேடு. வெள்ளைக்காரன் அடிமைப்படுத்தி ஆண்டபோது கூட விடுதலைப் போராளிகள் இவ்வளவு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்களா என்று எண்ணத் தோன்றுகிறது.

இயற்கை வளங்கள் நமக்கானது மட்டுமல்ல; நமது அடுத்தத் தலைமுறை பிள்ளைகளுக்கானது. நாம் வாழும் பூமி வாடகை வீடு போன்றது; இதைப் பாதுகாப்பாகப் பயன்படுத்திவிட்டு அடுத்தத் தலைமுறையிடம் பாதுகாப்பாகக் கையளிக்கவேண்டிய பொறுப்பு இம்மண்ணில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளது. மனிதர்களால் மீட்டுருவாக்கம் செய்யவியலாத மலைகள், காடுகள், ஆறுகள், மணல், கனிம வளங்கள் போன்ற இயற்கை வளங்களை அழிப்பது நம் தாயின் மார்பிலிருந்து பால் குடிப்பதைத் தவிர்த்து இரத்தம் குடிப்பதற்கு ஒப்பாகும். இயற்கை வளங்களை முற்றாக அழிப்பதனால் உலகின் இயங்கியலுக்கு மூலகாரணியாக இருக்கும் பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் உணவுச் சங்கிலியில் ஏற்படும் மாறுதல்கள் நாளை இப்பூமியில் மானுடச்சமூகம் உள்ளிட்ட எந்த உயிரும் வாழ தகுதியற்ற நிலையை உருவாக்கிவிடும் என்பதை உணர்ந்து இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்.

எனவே இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்ய மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் நேர்மையாகக் களத்தில் தொடர்ச்சியாகப் போராடும் சுற்றுச்சூழல் போராளி முகிலன் போன்றவர்களைக் கைது செய்து சிறைப்படுத்தும் போக்கை கைவிட்டுவிட்டு, நிலம் வளம் சார்ந்த சார்ந்த தொழிற்சாலைகள், இயற்கையை அழிக்காத வளர்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்தி மக்கள் மனதில் நல்ல தலைவனாக நிலைக்கும் முயற்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன்னெடுக்கவேண்டும். மணற்கொள்ளை, கனிமக்கொள்ளை, இயற்கைப் பேரழிவுத் திட்டங்களுக்குத் துணைபோனால் இந்தப் பதவியும் ஆட்சியும் எப்போதும் உங்களுக்குக் கிடைக்காமலே போய்விடும் என்பதை நினைவில் நிறுத்துக. முகிலன் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கு, தேசிய பாதுகாப்பு வழக்கு உள்ளிட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்பப்பெற்று எவ்வித நிபந்தனையுமின்றி அவரை விடுதலை செய்திடவும், சிறைக்கொட்டடியில் தொடுக்கப்பட்ட மனித உரிமை மீறல்களாலும் இன்னல்களாலும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முகிலனுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையளிக்க உடனடியாக ஏற்பாடு செய்திடவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும் சிறைக்கைதிகளுக்குத் தொடர்ச்சியாக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களை ஆய்வுசெய்யவும் கட்டுப்படுத்தவும் தேசிய மனித உரிமை ஆணையம் முழுமுயற்சி மேற்கொள்ளவேண்டுமெனக் கோரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திபுதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மீட்புப் போராட்டத்தில் பங்கோற்ற நாம் தமிழர் கட்சியினர் 20 பேர் கைது
அடுத்த செய்திமாலைமுரசு செய்தியாளர் தங்கை சாலினி சாலை விபத்தில் மரணம்: இனியேனும் இதைச் செய்க! – சீமான் உருக்கம்