மாலைமுரசு செய்தியாளர் தங்கை சாலினி சாலை விபத்தில் மரணம்: இனியேனும் இதைச் செய்க! – சீமான் உருக்கம்

273

இரங்கல்: மாலைமுரசு செய்தியாளர் தங்கை சாலினி சாலை விபத்தில் மரணம்: இனியேனும் இதைச் செய்க! – சீமான் உருக்கம் | நாம் தமிழர் கட்சி

மாலைமுரசு செய்தியாளர் தங்கை சாலினி சாலை விபத்தில் மரணமடைந்ததையறிந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (16-07-2018) வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மாலைமுரசு தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்த ஈரோட்டை சேர்ந்த தங்கை சாலினி அவர்கள் நேற்று 15-07-2018 இரவு சேலத்திலிருந்து செய்தி சேகரித்துவிட்டு மகிழுந்தில் மதுரை திரும்பும் வழியில் திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் சிக்குண்டு மரணமடைந்தார் என்பதையறிந்து மிகுந்த மனவேதனையுற்றேன். தொடர் பயணங்கள் நிறைந்த செய்தியாளர் பணியில் உயிர் பாதுகாப்பு மிகவும் முக்கியம். உண்ண, உறங்க நேரமின்றி பயணிப்பது; இடவார் (Seat Belt), தலைக்கவசம் (Helmet) போன்றவற்றை பயன்படுத்தாதது, இரவு நேரங்களில் அதிவேகப் பயணம் போன்றவற்றால் மிகச்சிறந்த ஆளுமைகளின் விலைமதிப்பற்ற உயிரை இழக்கநேரிடுவது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. என் உயிருக்கினிய தம்பி தங்கைகள் இனியேனும் சாலை விதிகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன். தங்கை சாலினியை இழந்துவாடும் பெற்றோர், உறவினர், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தம்பிகள் இராம்குமார், சதீஷ் ஆகியோர் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திமனித உரிமை மீறலுக்கு உள்ளாக்கப்படும் சுற்றுச்சூழல் போராளி முகிலன் மீதான அனைத்து பொய் வழக்குகளைத் திரும்பப்பெற்று உடனடியாக விடுதலை செய்க! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசேலம் 8 வழிசாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தபோது சீமான் கைது!