பேரிடர் கால நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாகக் கருத்தில் கொண்டு தமிழகத்தை ஐந்து மண்டலமாகப் பிரித்து ஐந்து சுகாதாரத்துறை செயலாளர்களை நியமிக்க வேண்டும் – சீமான்

187

பேரிடர் கால நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாகக் கருத்தில் கொண்டு தமிழகத்தை ஐந்து மண்டலமாகப் பிரித்து ஐந்து சுகாதாரத்துறை செயலாளர்களை நியமிக்க வேண்டும் – சீமான்

தமிழகத்தில் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக அமைக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருப்பது நம்பிக்கையைத் தருகிறது. கொரோனா நோயாளிகளுக்குச் சென்னையில் கிடைக்கும் வசதிகளும், வாய்ப்புகளும் தமிழகத்தின் கடைக்கோடிவரை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும். அதற்குப் பேரிடர் கால நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாகத் தமிழகத்தை ஐந்து சுகாதார மண்டலங்களாகப் பகுத்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு சுகாதாரச் செயலாளரை நியமிக்க வேண்டும். அதன்மூலம், நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளும், நோயாளிகளுக்குரிய சிகிச்சை முறைகளும் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் பரவலாகக் கிடைக்கப் பெறவும், சுகாதார வசதிக் குறைபாடுகள் இல்லாத நிலையை அடையவும் உரிய ஏற்பாடுகளையும், வழிவகைகளையும் செய்யலாம்.

மேலும், கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்கு ஆங்கில மருத்துவத்தோடு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறேன். சமீபத்தில் தமிழகத்தின் மிக முக்கிய ஆளுமைகள் இம்மருத்துவ முறை மூலம் கொரானாவிலிருந்து மீண்டனர் என்று அறியும் பொழுது அதை அரசு கவனத்தில் எடுத்து தமிழகமுழுவதும் இருக்கும் அதைச் சித்த மருத்துவர்களையும் ஒருங்கிணைத்து உடனடியாக ஒருங்கிணைந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதமிழக மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித்தாக்குதல் நடத்தியிருப்பது சிங்களப் பேரினவாதத்தின் உச்சம்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு