அஞ்சலகக் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தாவிட்டால், மிகப்பெரும் எதிர் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்!

344

அஞ்சலகக் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தாவிட்டால், மிகப்பெரும் எதிர் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்! – மத்திய அரசுக்கு சீமான் எச்சரிக்கை

நாடு முழுவதும் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் அஞ்சல் துறைத்தேர்வுகள் தமிழ் உட்பட 15 மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வந்த சூழலில், தற்போது அஞ்சலகக் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. இது மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆரிய மொழியாதிக்கத் திணிப்பின் மற்றுமொரு வடிவமேயாகும்.

ஏற்கனவே, கடந்த 2016 – 17 ஆம் ஆண்டுக்கான அஞ்சல் துறைத் தேர்வில் தமிழ்மொழித் தாளில் தமிழே அறிந்திராத வடஇந்திய மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மோசடி தொடர்பாக மத்தியப் புலனாய்வு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு, சூலை 14 ஆம் தேதி நடந்த அஞ்சலர் உள்ளிட்ட நான்கு வகையான பணியிடங்களுக்கான அஞ்சல் துறைத் தேர்வுகளில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே தேர்வெழுத முடியும் என்று அறிவித்து, அதற்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதையும் பொருட்படுத்தாமல் தேர்வுகளை நடத்தி முடித்துக் கூட்டாட்சி தத்துவத்திற்கெதிராக மத்திய அரசு மாபெரும் மொழி திணிப்பைச் செய்து முடித்தது. அதன்பிறகு, அத்தேர்வினை மொத்தமாக ரத்து செய்து உத்தரவிட்டு, மத்திய அரசின் மொழியாதிக்கச் சிந்தனைக்குக் குட்டு வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். இதையடுத்து, அஞ்சலகத்தேர்வுகள்
அனைத்தும் மாநில மொழிகளிலும் நடைபெறும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உறுதியளித்தது. ஆனால், தற்போது அந்த உறுதிமொழியையைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மீண்டும் அஞ்சலகத் தேர்வுகள் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறுமென அறிவித்திருப்பதன் மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசின் இந்துத்துவ மனப்பான்மையை வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இந்தி நாள், சமஸ்கிருத வார விழா, சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு, மும்மொழிக்கொள்கையை தமிழகத்தில் திணிக்க முயல்வது, மத்திய அரசின் அதிகாரிகள் மூலம் மொழித்திணிப்பையும், இன விரோதத்தையும் தமிழர்கள் மீது வெளிப்படுத்துவது, கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் தமிழைக் கற்க நிபந்தனை எனத் தமிழ்மொழியை இழிவுபடுத்தும் மத்திய அரசின் செயல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. அந்த வரிசையில் தற்போது மீண்டும் அஞ்சலகத்தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்று அறிவித்துள்ளதன் மூலம் தமிழகத்தில் தேர்வெழுதும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவர். இது
முழுக்க முழுக்க மத்திய அரசுப் பணிகளிலிருந்து தமிழர்களை வடிகட்டி வெளியேற்ற முனையும் கொடுஞ்செயலாகும். இதன் மூலம் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைத் தமிழகத்தில் பணியமர்த்துவதற்கான மத்திய அரசின்
சதித்திட்டம் நடப்பது தெள்ளத் தெளிவாகியிருக்கிறது.
ஏறத்தாழ, ஒரு கோடிக்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கும் சூழலில், அவர்களை முற்றாகப் புறக்கணித்துவிட்டு, இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களைத் தமிழகத்தின்
அதிகார அடுக்குகளில் நியமனம் செய்ய முயலும் மத்தியில் ஆளும் மோடி அரசின் தொடர் செயல்பாடுகள் தமிழின விரோதச்செயலின் வெளிப்பாடு என்பதில் துளியளவும் ஐயமில்லை. மேடைகளில் திருக்குறளையும், பாரதியார் கவிதைகளையும் பேசி தமிழ் மொழியைப் பெருமைப்படுத்துவது போல நாடகமாடிவிட்டு, தமிழர்
தாயகத்தை மொத்தமாகக் கைப்பற்றி அதனை அயலவர்களின் வேட்டைக்காடாக மாற்றிச் சொந்த நிலத்திலேயே தமிழர்களைப் பொருளியல் வலிமையற்ற அகதிகளாக நிறுத்த
முயலும் மோடி அரசின் இப்போக்கினை இனமான தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இப்போக்கு இனியும் தொடருமானால் மிகப்பெரும் எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என மத்திய அரசை எச்சரிக்கிறேன்.

ஆகவே, அஞ்சல் துறைத்தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டுமெனவும், தேசிய இனங்களின்
இறையாண்மைக்கு எதிரான மத்திய அரசின் நயவஞ்சக போக்கிற்குத் தமிழக அரசு துணைபோகாது, மத்திய அரசிற்கு அரசியல் நெருக்கடி மற்றும் சட்ட நடவடிக்கைகள் மூலம் அழுத்தம் கொடுத்து தமிழில் தேர்வெழுதும் உரிமையை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகந்தர்வக்கோட்டை தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திகுவைத் செந்தமிழர் பாசறை – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு